ஊழியர்களைக் கொண்டாடுங்கள்!

ஊழியர்களைக் கொண்டாடுங்கள்!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்) தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.59.831 கோடி அளவுக்கு ஏப்-ஜூன் மாதங்களில் வருவாய் ஈட்டியுள்ளது.

 

இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 12% அதிகம் ஆகும். தங்களது செயல்பாட்டு லாபம் 23% ஆக உயர்ந்திருப்பதை அடுத்து, அதனைத்தனது ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடத்திட்டமிட்டிருக்கிறது டி.சி.எஸ்.

அந்த வகையில் டி.சி.எஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் இந்த உயர்வு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின்  தலைமை நிதி அலுவலர் சமீர் சக்சரியா  தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஊழியரின் தனிப்பட்ட  வருடாந்திர செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் சுமார் 12.5% வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

Free Office Cubicles photo and picture
photo courtesy: pixabay

மேலும் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுவருகின்றன.  6 லட்சம் பேருக்கு மேல் ஊழியர்களைக்கொண்டுள்ள டி.சி.எஸ், அதில் 36% ஊழியர்கள் பெண்கள் எனவும் தெரிவித்திருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறை சவால்களை சந்தித்துவருகிறது என்றாலும் ஊழியரின் பணித்தாவலைத் தவிர்க்க பல நிறுவனங்களும் வெவ்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

ஊழியர்களை கண்ணியமாக நடத்துதல் , சாதி, மத, இன, மொழி, பிரதேச, பாலின, உடற்திறன் பாகுபாடற்ற சூழல் நிலவுவதை உறுதிப்படுத்துதல், நியாயமான ஊதியம், ஊதிய உயர்வு,  தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்தல், தேவையானபோது சரியான அங்கீகாரம் கொடுத்தல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நல்குதல், வேலைப்பாதுகாப்பு ஆகியவை ஊழியர்களைத் தக்க வைப்பதன் அடிப்படைக்கூறு ஆகும். இவற்றைச் செய்யும் நிறுவனங்களைவிட்டு வெளியே செல்ல ஊழியர்கள் விரும்ப மாட்டார்கள்.

மனிதவளம்தான் இன்றைய நிலையில் தொழில் நிறுவனங்களின் தவிர்க்க முடியாத சொத்து என்பதைக் காலம் காட்டி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல், தொழில் துறையினர் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய சேதி இதுதான்!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *