சென்னை வெள்ளம் : செய்ய வேண்டியது என்ன?

சென்னை வெள்ளம் : செய்ய வேண்டியது என்ன?

அண்மையில் மிக்ஜாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளிலும் கட்டப்பட்ட குடியிருப்புகள் வெள்ளநீர் வடியாத சூழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத மழையை இயற்கை கொட்டித்தீர்த்துவிட்டது. 2015 ஆம் ஆண்டிலும் சென்னை உள்ளிட்ட மேற்கண்ட மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தன.  செம்பரம்பாக்கம் ஏரி திடீரென்று திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரமே மிதந்தது.

அதுபோன்ற ஒரு சூழல் இப்போது நிகழ்ந்துவிடக்கூடாது என்று தமிழக அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப அரசு இயந்திரமும் தயாராக இருந்தது. இருப்பினும், அள்ளிக்கொட்டிய மழை, நிலைமையை அலங்கோலமாக்கிவிட்டது. மழைநீர் வடிகால் கால்வாய்கள் நிறைந்தன, அல்லது அடைப்புகளின் காரணமாக நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

இத்தனைக்கும் 16 அமைச்சர்கள், அலுவலர்கள் களத்தில் இருந்தும் இடைவிடாத மழை, கடும் சவாலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இது ஒருபுறமிருக்க, வட சென்னை கடல் பகுதியில் கச்சா எண்ணெய்க்கழிவுகள் கலந்துவிட்டது கூடுதல் பிரச்சனையாக எழுந்திருக்கிறது. அதனை அகற்றும் பணிகள் தொடர்கின்றன.

தற்போது மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் வெள்ள நீர் பெரும்பாலும் வடிந்துவிட்டது. சில இடங்களில் வடிகால், கழிவுநீர் வடிகால் பழுதுநீக்கும் பணிகள் தொடர்கின்றன. தமிழக அரசும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.6000 வீதம் நிவாரணத்தொகையை இன்று கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

Image by WikimediaImages from Pixabay

இது இப்படி இருக்க, தற்போது திருநெல்வேலி,  தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடுமையாக மழைபெய்யத்தொடங்கியிருக்கிறது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் ஓடத் தொடங்கியிருக்கிறது.

இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்திருக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகங்கள் களத்தில் தயாராக இருக்கின்றன.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஏன் இந்த களேபரம்? முன்பெல்லாம் மழை வந்ததே இல்லையா? அது ஏன் இவ்வளவு உழைப்பைக் கோரவில்லை?

மழை என்பது எப்போதும் இருப்பதுதான். ஆனால் பருவம் பொய்த்துப்போவது, மேக வெடிப்பு, திடீர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் ஏற்படும் மழை என்று நம்மால் கணிக்க முடியாததாக மழை ஆகிவிட்டிருக்கிறது. இனிமேல் கால நிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை நம்மால் தவிர்க்க முடியாதுதான். ஆனால், சில அம்சங்களில் நாம் கவனம் செலுத்தலாமே!

*நகர்ப்புற திட்டமிடலின்போது வெள்ளநீர் வடிகால், கழிவுநீர் வடிகாலுக்கான விதிகள், ஆய்வுகள், நடவடிக்கைகள் ஆகியவை கறாராக ஆக்கப்படவேண்டும்.

*பிளாஸ்டிக் காகிதப்பயன்பாடு இன்னும் நின்றபாடில்லை. வெள்ளநீர் வடிகால் குழாய்களை அடைத்துக்கொள்வதே இதுதான். எனவே, மறுசுழற்சி செய்ய இயலாத அனைத்துவகை பிளாஸ்டிக் பயன்பாடு, உற்பத்தி, இருப்புக்கும் தடை விதித்துவிடவேண்டும்.

*நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எந்தக்காரணத்தைக்கொண்டும் அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மாற்று வீடுகளைக் கட்டிக்கொடுத்து, நீர் நிலைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*மழைக்காலங்களில் தகவல் தொடர்பு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனைத்தவிர்க்க ஹாம் ரேடியோ, செயற்கைக்கோள் தொலைபேசி முதலிய வசதிகளை ஊராட்சி ஒன்றிய அளவிலாவது வைத்திருக்கவேண்டும்.

*எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மின்சார வசதியை வழங்கிவிடவேண்டும். இது தகவல் தொடர்புக்கும் பெரிய அளவுக்கு உதவியாக அமையும்.

*தமிழகம் முழுக்க தன்னார்வலர்கள் இருந்தாலும் அவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு என்று ஏதுமில்லை. அத்தகையை அமைப்பை உருவாக்கவும் அதற்கான இணையதளத்தை உருவாக்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*சிறிய அளவிலான காற்றாலை மின்சாரம், சூரிய மின்சார வசதிகளை இல்லங்களுக்கு கணிசமான மானியத்தில் வழங்கவேண்டும்.

*சிவில் சமூகத்தை பேரிடர்களுக்கு மனதளவிலும் உடல் அளவிலும் தொழில்நுட்ப அளவிலும் தயார்படுத்த ஒரு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும்.

-விஜயலட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *