தங்க நகை வாங்காதீங்க!

தங்க நகை வாங்காதீங்க!

எப்பாடுபட்டாவது தங்கம் வாங்கி சேமித்து வைத்தால் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு பயனளிக்கும் என்று நினைக்காத நடுத்தர வர்க்க குடும்பங்களே இல்லை எனலாம். காரணம், தங்கத்தின் விலை ஒருபோதும் குறையப்போவதில்லை என்பதும், திருமணத்தில் தங்க நகை ஒரு முக்கியமான அம்சமாக இடம்பெறுவதும்தான் காரணம்.

அதேபோல, தங்கம் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை உடைய (liquidity) தனிம உலோகம். எனவே, அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடகுவைத்துப் பணம் பெறலாம். அடகுக்கடைகளிலோ அல்லது வங்கிகளிலோ அரை மணி நேரத்துக்குள்ளாகவே பணமாக்கக்கூடிய சொத்து அது என்பதால் தங்கத்துக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது.

Image by 8180766 from Pixabay

தங்கத்தை நீங்கள் ஆபரணமாக, அழகுப்பொருளாகப்  பார்த்தால் நகைகளாக வாங்கிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால், தங்கத்தை முதலீடாகக் கருதுபவராக இருந்தால், நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

உலகில் எந்தப்பொருளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு தங்கத்துக்கு இருக்கிறது. அதுதான், அதன் ‘தயாரிப்பு’ செலவை வாடிக்கையாளரிடமிருந்து பெறுவது. பூமிக்கடியில் கிடைக்கும் தங்கத்தை சுத்தம் செய்து, அதனை செம்பு உலோகத்துடன் கலந்து நகைகளைச் செய்கின்றனர்.

அதாவது, மதிப்பு கூட்டப்பட்டபிறகு அதற்கு ஒரு அடக்க விலை வந்துவிடுமல்லவா…அத்தோடு விடுவதில்லை. மாறாக, தங்க நகையை ‘செய்தததற்கான’ செய்கூலியை வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் உற்பத்தி முறை வெவ்வேறு என்பதால்கூட இந்தக்கூலியை ஏற்றுக்கொள்ளலாம்.

Image by Grégory ROOSE from Pixabay

அடுத்தபடியாக, சேதாரம் என்று ஒரு விஷயம் இருக்கிறது. மண்ணிலிருந்து எடுக்கப்படுவதுமுதல், அது நகையாக நம் கைக்கு வந்துசேரும்வரை பல்வேறு படிநிலைகளை தங்கம் அடைகிறது. எனவே சிறிய அளவுக்கு அதில் சேதாரம் ஏற்படும். ஆனால், அது கூடுதலாக மதிப்பிடப்பட்டு, அதற்கான விலையை வாடிக்கையாளரிடம் நகைக்கடைகள் பெற்றுவிடுகின்றன.

நீங்கள் 10 கிராம் தங்கத்தைக் கொடுத்தால், அதனை உருக்கி, கம்பியாக நீட்டி, சங்கிலியாக மடக்கி, பற்றவைத்து உருவாக்கும்போது சில மில்லிகிராம் அளவுக்கு தங்கம் குறையவே செய்யும்.

அதனை ஈடுகட்டுவதற்காகநகைக்கடைகள் சேதாரமான  தங்கத்தின் அளவுக்கு தங்கத்தை தங்கள் சொந்த செலவில் வாங்கி, சேர்த்துவைத்து நகையாக உங்களிடம் கொடுக்கிறார்கள்.  தாங்கள் செலவு செய்த தொகையை ‘சேதார’ செலவாக உங்களிடம் பெறுகிறார்கள்.

Image by 41330 from Pixabay

வட இந்தியாவிலும் சரி, வெளி நாடுகளிலும் சரி… சேதாரத்தொகை தனியாக வசூலிக்கப்படுவதில்லை. எல்லா செலவுகளும் அடக்க விலைக்குள் வந்துவிடும். வெளிநாடுகளில் ஒரு முறை இருக்கிறது. நகை தயாரிப்பின்போது ‘சேதாரமாகும்’ தங்கத்துகள்களை சேகரித்து உங்களிடமே கொடுத்துவிடுவார்கள்.

அப்படி ஒரு முறை இருப்பதே நம்மூரில் பலருக்கும் தெரிவதில்லை. அதனால்தான் ஒரு நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று இரண்டு செலவுகளை நுகர்வோர் ஏற்க வேண்டியிருக்கிறது. இது தவிர, பழைய நகையைப்போட்டு புதிய நகை வாங்கினால் அதனை உருக்கும் செலவும் நம்மைச்சேர்ந்ததே. இவை தவிர, சரக்கு மற்றும் சேவை வரியையும் நாம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இவ்வளவு நட்டங்கள் இல்லாமல் தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்க்க முடியுமா என்று ஒரு கேள்வி எழுகிறது அல்லவா! நியாயமான ஐயம்தான் அது. அதற்கு விடை ‘ முடியும் ‘ என்பதுதான். அதற்கு என்ன செய்யவேண்டும்?

தங்கத்தை நகையாக வாங்காமல், தங்கக் காசுகளாக, சிறு கட்டிகளாக வாங்கலாம். அவ்வாறு வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று எதுவும் இருக்காது. தங்கமும் தூய்மையாக இருக்கும். வழக்கமான நகைக்கடைகளிலேயே இது கிடைக்கும். தேவை ஏற்படும்போது விற்கவும் அடகு வைக்கவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் .

Image by Steve Bidmead from Pixabay

அதேபோல, தங்கப் பத்திரங்கள், பரஸ்பர நிதித்திட்டங்களும் உண்டு. உங்கள் முதலீட்டின் மதிப்பு, தங்கத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப அதன் மதிப்பும் ஏறவோ, இறங்கவோ செய்யும். தேவை ஏற்படும்போது உடனடியாக உங்கள் முதலீட்டை லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் (உங்கள் முதலீடு லாபத்தில் இருந்தால்).

காகிதத் தங்கம் என்று அழைக்கப்படும் இம்முறையிலும் செய்கூலி, சேதாரம் முதலிய செலவுகள் ஏதுமில்லை என்பது பெரிய ஆறுதல். எனவே, அழகுக்காகவும் நம்பிக்கைகளுக்காகவும் ஓரளவுக்கு தங்க நகைகளை வைத்திருந்தால் பரவாயில்லை. அடுத்தகட்ட தங்கக் கொள்முதல் என்பது அறிவியல்பூர்வமான முதலீடாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, வெறுமனே அழகுக்காகவும் கவுரவத்துக்காகவும் இருக்கக்கூடாது.

சரிதானா!?

தமிழ்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

2 thoughts on “தங்க நகை வாங்காதீங்க!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *