விஜயகாந்த்: இதயங்களை வென்றதில் கேப்டன்

விஜயகாந்த்: இதயங்களை வென்றதில் கேப்டன்

முன்னணி தமிழ்த்திரைப்பட கதாநாயகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானது அரசியல், தமிழ்த்திரை ஆகிய துறைகளை மட்டுமல்ல, நாடு கடந்தும் தமிழ் உறவுகளை நிலைகுலைய வைத்திருக்கிறது.

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவராகப் பணியாற்றிய அவருக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசியல் மரியாதையுடன் அடக்கம் செய்தது தமிழக அரசு. இது, அவரது ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர், இவை எவற்றையும் சாராத பொதுமக்களிடையே நன்மதிப்பை சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது.

திரு.விஜயகாந்த் அவர்களின் நடிப்பு குறித்தோ, அரசியல் குறித்தோ வாதப்பிரதிவாதங்கள், விமர்சனங்கள் இருக்கலாம். அது, மிக மிக இயற்கையானது. ஆனால், இத்துறைகளைச் சாராத பொதுமக்கள் அவரது மறைவுக்குக் கண்ணீர் வடிக்கின்றனர். அவரது குண நலன்களை சொல்லிச்சொல்லி அரற்றுகின்றனர், கண்கலங்கி நிற்கின்றனர்.

அதற்கான அடிப்படையான காரணம், அவரது வெள்ளந்தியான உள்ளமும் அதில் சுரந்த கருணை ஊற்றும்தான். ஒரு தனி மனிதனாக மாநிலம் முழுமைக்கும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவிடுவது சாத்தியமில்லை. இருப்பினும், தன்னை நாடி வந்தவர்களுக்கும் தனது சுற்றுப்புறத்தாருக்கும் திரைத்துறையில் வாய்ப்பு தேடிக்கொண்டிருப்போருக்கும் அன்னமிட்ட கை அவருடையது. இன்று நேரிலும் இணையவெளியிலும் அதனை நன்றியோடு நினைக்கின்றனர் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் உள்ளம் கொண்ட பலரும். தொழிலாளர்களின் தோழனாகவும் சமத்துவம் விரும்பும் சங்கத்தலைவனாகவும் அவர் திகழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதர், தனது பதவி, அதிகாரம், ஆள் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றால் அறியப்படுவது மிக இயல்பானது. ஆனால், தனது தனிப்பட்ட அருங்குணங்களால் ஒரு மனிதன் நாடெங்கும், உலகமெங்கும் போற்றப்படுவது அசாதாரணமானது. அப்படிப்பட்ட மனிதனுக்கு வரலாற்றில் என்றும் இடம் உண்டு.

எளிய மனிதர்களின் நெஞ்சங்களில் நீங்கள் கேப்டனாக என்றும் வாழ்வீர்கள் திரு.விஜயகாந்த் அவர்களே!

-ஆசிரியர் குழு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *