நெஞ்சைவிட்டு நீங்காத கேம்லின் விளம்பரம்

நெஞ்சைவிட்டு நீங்காத கேம்லின் விளம்பரம்

கலர் பென்சில் , வாட்டர் கலர் , ஜியோமெட்ரி பாக்ஸ், மை என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது கேம்லின் தான் . ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குக்கு 80-ஸ் கிட்ஸ்க்கு பெரும் உதவியாக இருந்தது கேம்லின் தயாரிப்புகள்தான். 

 2000த்தின் தொடக்க காலகட்டத்தில் கோகுயோ கேம்லின் என்ற பெயரில் தற்போது செயல்படும் இந்த நிறுவனம் கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவை அறிமுகப்படுத்தியது. இந்த தயாரிப்பை சந்தைப்படுத்த பல விளம்பரங்கள் வந்தன.

இந்தத் தயாரிப்புக்கு நிரந்தரமான விளம்பரம் தேவைப்பட்டது . மக்கள் மனதில் என்றென்றைக்கும் தங்கும் விதமான விளம்பரத்தை செய்யும் பொறுப்பை இந்தியாவின் மிகப்பெரிய பிராண்டுகளை உருவாக்கும் நிறுவனமான லோவ் லிண்டாஸ்க்கு அளிக்கப்பட்டது. 

May be a graphic
லிண்டாஸ் நிறுவன இலச்சினை

இந்தியாவின் முல்லன்லோவ் லிண்டாஸ் குழுமத்தின் கிரியேட்டிவ் ஏஜென்சி தான் லோவ் லிண்டாஸ் . மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பெங்களூரு , சென்னை , கொல்கத்தா , புது தில்லி , புனே போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது லோவ் லிண்டாஸ். 14 பிராண்டுகளை கையாள்கிறது இந்த  விளம்பர நிறுவனம். 

இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா, பிளிப்கார்ட், கூகுள், ஃப்ரீசார்ஜ், எம்.ஆர்.எஃப், தனிஷ்க்  உள்ளிட்ட பல இந்திய மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் தனது பிராண்டிங் மற்றும் ஆக்கப்பூர்வமான விளம்பரம் சேவைகளை வழங்குகிறது. 

அதிகம் யாரும் பயன்படுத்தாத , இதன் பயனை அறியாத மக்களுக்கு இந்த தயாரிப்பை குறித்து அதுவும் முக்கியமாக அதன் சிறப்பை தெரிவிக்கும் ஒரு தரமான விளம்பரம் தயாரிப்பது லோவ் லிண்டாஸ்க்கு ஒரு சவாலாகவே இருந்தது.

இந்த கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவுக்கு யாரெல்லாம் முதன்மையான நுகர்வோர் என்று பார்த்தால் கார்ப்பரேட் துறையில் பணி புரிவோர், கூரியர் மற்றும் பேக்கேஜ் பணியாளர்கள் , போக்குவரத்து /சேவை துறையில் , கல்வித்துறையில் பணிபுரியும் மக்கள் தான் அடங்குவார்கள் . இவர்கள் தான் இந்த பேனாவுக்கான வாடிக்கையாளர்கள். 

எப்போதுமே லோவ் லிண்டாஸ் எந்த ஒரு விளம்பரத்தை வழக்கமான முறையில் கையாளமாட்டார்கள் . நிரந்தர அடையாளத்தை உருவாக்க கூடியது என்று பார்க்கப்போனால் பச்சைகுத்துவது , பாறைகளில் பொறித்திருக்கும் எழுத்துக்கள் அடையாளங்கள் இவை தான் ஞாபகத்திற்கு வரும் . பலத்த யோசனைக்கு பிறகு இவையெல்லாம் ஓரம் கட்டப்பட்டன. 

இறுதியாக, .முழு இந்தியாவின் கலாச்சார சின்னமான குங்கும பொட்டு தேர்வானது . அதுவும் இந்திய மக்கள் மனதில் நிரந்தரமான தாக்கத்தை உருவாக்கும் என்று புரிந்து கொண்ட லோவ் லிண்டாஸ் விளம்பர தயாரிப்பில் மும்முரமாக இறங்கியது. திலகத்தை மையமாகக்கொண்ட அந்த விளம்பரம், முகநூலில் வெளியிடப்பட்டு வைரலானது. 

’வீ ஆர் இந்தியன்’ (WE ARE INDIANS) என்ற முகநூல் பக்கம் இந்த விளம்பரத்தை 2016-ல் மறுபதிவு செய்தபோது வெறும் 3 நாட்களில் 5,05000 பார்வைகளையும் , கிட்டத்தட்ட 18,000 பகிர்வுகளையும் பெற்றது . 

நீங்கள் இதுவரை பார்க்கவில்லையென்றால் உங்களுக்கு இந்த விளக்கம்: (விளம்பரத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=nDa2K28G3eU)

இந்த விளம்பரத்தின் தொடக்கமே இப்படித்தான் …  ராஜஸ்தானில் உள்ள ருதாலி பெண்களை பற்றிய சிறிய குறிப்பு ஆங்கிலத்தில் திரையில் காண்பிக்கப்படுகிறது.

வயது முதிர்ந்த ஆண்கள் சோகமான தோரணையில் அமர்ந்துள்ளனர் . குடிசைக்குள் ஒரு மனிதர் மரணப் படுக்கையில் மூச்சுவிட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார் . 

திடீரென்று காற்று வீசி விளக்கு அணைந்துவிடுகிறது.  மனைவி திடுக்கிட்டு போகிறாள் . அதற்குள் கருப்பு நிற ஆடை அணிந்த ருதாலிபெண்கள் வீட்டிற்குள் நுழைந்து அழுகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் அவளது வளையல்களையும் தாலிச் சரடையும் கழற்றி எறிகிறார்கள். பெண்ணின் மங்களகரமான குங்குமப் பொட்டை பல முறை அழிக்க முயல்கிறார்கள் . ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனை அழிக்க முடியவில்லை. 

திடீரென்று அந்த அதிசயம் நிகழ்கிறது. அப்போது திடீரென்று உயிர் பெறுகிறார் படுக்கையில் கிடந்தவர்.  எல்லாரும் ஆச்சரியம் அடையும்போது ஒரு பிளாஷ்பேக் … அந்தக் கணவர் சிவப்பு கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவால் பொட்டு வைக்கிறார். அது, எப்போதும் அழியாத பொட்டாக மாறுகிறது.

ஆம், அவளது கணவனுக்கு மரணமில்லை.  நலமான கணவனை மனைவி அரவணைப்பதோடு விளம்பரம் முடிகிறது.

அப்போது ஒரு குரல் கேட்கிறது:- “கேம்லின் நிரந்தரம் … உண்மையில் நிரந்தரம் “

 

இப்படி லோவ் லிண்டாஸ் , கேம்லினை ஒரு சிறந்த பிராண்டாக பதிவு செய்தது மட்டுமல்லாமல், பேனாவின் பயனை அதன் நிரந்தர தன்மையை மறக்க முடியாத விதத்தில் மனதில் ஆழ பதிய வைத்துள்ளது . இந்த விளம்பரம் சற்றே விசித்திரமாக வினோதமாக இருந்தாலும் கடைசியில் நகைச்சுவை அம்சத்தால் எல்லோரின் முகத்திலும் சிறிய புன்னகை வரவழைக்க தவறவில்லை .

அதேபோல ராஜஸ்தானில் தற்போதும் பழக்கத்திலுள்ள “ருதாலி” என்ற முறையை “வாழ்நாள் முழுவதும் கருப்பு ஆடை அணிந்து கண்ணீரை விற்கும் அந்த பெண்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விளம்பர உலகில் படைப்பாற்றலின் பங்கு என்ன என்பதை சில நொடிகளில் இந்த விளம்பரம் உங்களுக்கு உணர்த்திவிடுகிறது. விளம்பரத்துறை செய்யும் மாயாஜாலம் அதுதான்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *