மே 1: உழைப்பைக் கொண்டாடுவோம்!

மே 1: உழைப்பைக் கொண்டாடுவோம்!

 அன்பான தோழர்களே, வாசகர்களே…..

 உங்கள் அனைவருக்கும் முனைவின் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்.  உழைப்பின்அருமையை உலகுக்குச் சொல்லும்  இந்த நன்னாள், முனைவின் பயணத்திலும் முக்கியமான நாள்.

இதே நாளில் தான் முனைவு இணையதளம் தொடங்கப்பட்டது. ஓர் எளிய தொழிலாளியின் கையால்  தொடங்கி வைக்கப்பட்ட இந்த  இணையதளம் பொருள் பொதிந்த ஒரு பணியை தன்னால் இயன்ற வகையில் அமைதியான முறையில் செய்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

 

 பரபரப்புச் செய்திகளுக்கு இடம் கொடுக்காமல்,  வெற்றி பெற்ற தொழில் முனைவோர் குறித்த அதீதமான கற்பனை கதைகளைச் சொல்லாமல் அறிவியல் பூர்வமான மற்றும் நிரூபிக்கப்பட்ட செய்திகளையும் ஆலோசனைகளையும் மட்டுமே முனைவு தந்து வருகிறது. கூடுமானவரை பிற மொழிக் கலப்பில்லாமல், தமிழைத் தமிழாகவே வழங்கிவருவதில் முனைவு மிகுந்த பெருமிதம் கொள்கிறது

 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதிலும் படித்த இளம்  தலைமுறையையும் அனுபவம் பெற்ற நடுத்தர வயதினரையும் தொழில் முனைவோராக  உருவாக்குவதிலுமே முனைவின் கவனம் உள்ளது.  ஏனென்றால், நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் வளர்ச்சிக்கும் பெரிதும் கை கொடுப்பவை பெரு நிறுவனங்கள் அல்ல. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தாம். 

இவை இல்லாமல் எந்த ஒரு பன்னாட்டு பெரு நிறுவனமும் வளர முடியாது.  நாட்டில் பணப்புழக்கத்தை ஊக்குவிப்பதிலும் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இத்துறை தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

 புதிய தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதில் பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகளும் தனியார் அமைப்புகளும் சேர்ந்து வழங்கி வருகின்றன என்றாலும் கூட இன்னும் தாண்ட வேண்டிய தடைக்கற்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை இனம் கண்டு அவற்றைப் படிக்கற்களாக மாற்றுவதில் தன்னால் இயன்ற பங்கை நுழைவு தொடர்ச்சியாக செய்து வரும்.

 பல்வேறு பொருளாதார மற்றும் நிர்வாக காரணங்களால் கடந்த காலங்களில் அதிக செய்திகளை வழங்குவதில் முனைவு பல்வேறு தொய்வுகளை சந்தித்து வந்ததை திறந்த மனதோடு ஒப்புக்கொள்கிறோம்.

  ஆனால் இனிவரும் காலங்களில் முனைவு இன்னும் திறம்பட செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறோம். அதற்காக ஆர்வமிக்க, அர்ப்பணிப்பு மிக்க ஒரு குழு உழைத்து வருகிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 

 ஆயிரம் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தாலும் மனிதனின் அடிப்படை தேவை  உணவு, உடை, உறைவிடம் ஆகியவைதான். அதேபோலத்தான் ஒரு நாட்டில் எவ்வளவு நவீனம் வந்தாலும் அந்நாட்டை முதுகெலும்பைப் போலத் தாங்கி பிடிப்பது சிறு தொழில் துறைதான். அத்துறைக்கும் அது சார்ந்த தொழில் முனைவோருக்கும் முனைவு,  எப்போதும் துணை நிற்கும்.

என்றென்றும் தோழமையுடன்,

விஜயலட்சுமி, ஆசிரியர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *