ரகசியம் காக்கும் ஆப்பிள் தயாரிப்புகள்

ரகசியம் காக்கும் ஆப்பிள் தயாரிப்புகள்

ஆப்பிளுக்கு உலக வரலாற்றில் என்றுமே ஒரு தனி இடம் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸில் தொடங்கிய கதை இன்னும் துவளாது தளராது தனித்துவத்துடன் ஆப்பிள், ஒரு தனி வழியில் தொடர்கிறது . 

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராயிடை ஓரமாக ஒதுக்கி தள்ளி ஐபோன், ஐபாட், ஐ பேட், மாக்புக் என்று சிங்கநடை போடுகிறது.. இதற்கு காரணம், ஆண்டிராய்டு போல எளிதாக ஹேக் செய்ய முடியாத ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான்.

ஆப்பிள் தயாரிப்புகள் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் , புதுமையான அம்சங்களுடன் , சிறப்பான செயல்திறனுள்ள தொழில்நுட்பம், குறிப்பாக, நுகர்வோரின் வலுவான பாதுகாப்பை, அவர்களின் பட்டறிவு ஆகியவற்றை கருத்தில்  கொண்டே உருவாக்கப்பட்டு வருகின்றன ஆப்பிள் தயாரிப்புகள்.

Image by Pexels from Pixabay

மற்ற பிராண்டுகளை ஒப்பிடும்போது ஆப்பிள் தயாரிப்புகளுக்கு விலை அதிகம்தான், இருப்பினும் ஆப்பிள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் தரவுகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதால் தங்களுக்கு என்று நற்பெயரை தக்க வைத்துள்ளது ஆப்பிள் .                                                                                                                            

இன்றைய டிஜிட்டல் உலகம் என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வலைத்தளத்திற்கு ஒருவர் சென்றாலும் குறைந்தபட்சமாக சில தகவல்களை அங்கு சேகரிக்கப்பட்டுவிடுகின்றன. எடுத்துக்காட்டாக , ‘எங்கிருந்து, எந்த நேரத்தில் , எந்த கருவியிலிருந்து?….’ இதுபோன்ற அடிப்படையான தகவல்களை பொதுவாக சேவை நிறுவனங்கள் சேகரிக்கின்றன.

இந்நிறுவனங்கள், சேவையை நுகர்வோர்களின் தேவைக்கு ஏற்றாற்போல மேம்படுத்த சேகரிக்கின்றன. ஆனால்,  என்ன மாதிரியான தகவல்களை நம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிறது என்பதில் நுகர்வோர் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் .

டேட்டா எகனாமி தெரியுமா?

பொதுவாக நாம்  தனிநபர், பணி நிமித்தமான , சமூக ரீதியிலான தரவுகளை எந்தவிதமான தயக்கமுமின்றி பகிர்ந்துவிடுகிறோம். ‘டேட்டா எகானமி’  என்ற ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அறியாமலே . இது தரவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரம்.

இங்கு  தரவுகள் பணமாக்கப்படுகின்றன  என்பது மட்டுமல்லாமல், சில அல்ல… பல நேரங்களில் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது . அதுமட்டுமில்லாமல் நம் நாட்டில் தரவு பாதுகாப்பிற்காக எந்தொரு பிரத்யேகமான வலுவான  சட்டங்களும்  இல்லை.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் வாடிக்கையாளரின் தகவல்களைப் பாதுகாக்கும் செல்பேசிகளுக்கான தேவை எழுகிறது. அது ஒரு தனிச்சந்தையாகவும் உருவெடுக்கிறது. இதனை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றன. 

இந்தியாவை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் இன்னும் சாமானியரின் சாதனமாக மாறவில்லை.  அது ஒரு ஆடம்பர ஸ்மார்ட்போனாகவே கருதப்படுகிறது.  ஓரளவுக்கு செலவு செய்யத் தயங்காதவர்களும்  பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்களும்  தவறாமல்  இதை வாங்குகின்றனர்.    

ஆப்பிள் நீண்ட காலமாக தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை அவர்களின் தனியுரிமையை வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அவர்களின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

2013 ஆம் ஆண்டில் ஆப்பிள் iOS 7 ஐ வெளியிட்டது, முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாகும். இதில் லிமிட் ஆட் டிராக்கிங் (Limit Ad Tracking) அம்சம் போன்ற பல புதிய தனியுரிமை அம்சங்கள் அடங்கும்., இது பயனர்களை இலக்கு விளம்பரங்களில் (Targeted advertising) இருந்து விலக அனுமதிக்கிறது. 

அதன்பின்னர், ஆப்பிள் தொடர்ந்து ஆப்ஸ் டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி (Apps Tracking Transparency – ATT) போன்ற புதிய தனியுரிமை சார்ந்த அம்சங்கள் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம், இணையம் மற்றும் பிற செயலிகளில் ஆப்ஸ் டெவலப்பர்கள் தங்கள் தரவைக் கண்காணிப்பதற்கு முன் தொலைபேசி பயன்படுத்துபவர்களின்  அனுமதியைக் கேட்க வேண்டும். 

நீங்களே பார்க்கலாம்

2018 ஆம் ஆண்டில், ஆப்பிள் “தனியுரிமை போர்ட்டலை” (Privacy Portal) அறிமுகப்படுத்தியது, அங்கு ஐபோன் வாடிக்கையாளர்கள்  தங்கள் தரவைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம், மேலும் 2020 ஆம் ஆண்டில், அவர்கள் ஆப் ஸ்டோரில் Privacy Nutrition Labels-ஐ அறிமுகப்படுத்தினர்.

இது இணையத்தில் இயங்கும் விளம்பர நிறுவனங்கள் தங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது பற்றிய தகவல்களை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இப்படி,ஐபோன் பயன்படுத்துவோரின் தரவுகளை சேகரிக்கும் கதவை ஆப்பிள் மூடியது.ஐபோன் பயன்படுத்துவோரின் தேடுதலை இலக்காக வைத்து விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், ஆப்ஸ் மூலம் கண்காணிப்பதை கட்டுப்படுத்தும் ஆப்பிளின் நடவடிக்கை, ஆன்லைன் விளம்பரத்தை பொறுத்த வரையில் கூகுளுக்கும் சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம்: பிக்ஸாபே

மாறியாச்சு!

கடந்த சில ஆண்டுகளில் உலக அரசியல்வாதிகள், வணிக தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற முக்கியமான நபர்கள் மற்றும், தங்களின்  தகவல்கள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுபவர்கள் ஆப்பிள் ஐபோன்களுக்கு மாறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். இணையப்பாதுகாப்பு, தனிமனித சுதந்திரம் என்பன முதலான விஷயங்களுக்கு அதிகரித்துவரும் முக்கியத்துவம், ஆப்பிளுக்கு புதிய வாய்ப்புக் கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கும் என்பதும் உண்மை.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *