மரிக்கோ வளர்ந்த கதை

மரிக்கோ வளர்ந்த கதை

சாதாரண  மனிதர்களுக்கும் சரித்திர மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? வெற்றி பெற்றவர்கள் எப்போதுமே சூடாக, சூப்பராக, தினசரி கற்பவராக, எளியவராக, தன் துறை சார்ந்த மக்களுடன் எப்போதும் தொடர்பு கொண்டவராக இருப்பதுதான். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான தலையாய வேறுபாடு ஒன்று உண்டு.

அது என்ன?

வெரி சிம்பிள் . பத்தோடு பதினொன்றாக இல்லாமல்,   ‘என் வழி தனி வழி’ என்று தனித்துவமாய் நிற்பதுதான் அது. சுருக்கமாக சொல்லப்போனால், இவர்களது தாரக மந்திரம் ‘மாத்தி யோசி!’ என்பதுதான்.

இதனை நன்கு  புரிந்து கொண்ட ஒருவரைப்பற்றித்தான் இங்கு பேசப்போகிறோம்.  அவர் வேறுயாருமல்ல, ஹர்ஷ் மாரிவாலாதான்.

’இந்தப்பெயரையே நான் கேள்விப்பட்டதில்லையே!’ என்று நினைக்கிறீர்களா? உங்கள் ஐயம் நியாயமானது. தினசரி நீங்கள் தலைக்குத்தேய்க்கும் பாராசூட் தேங்காய் எண்ணெய், சஃபோலா சமையல் எண்ணெய் ஆகியவை இருக்கின்றன அல்லவா!   சஃபோலா ஓட்ஸ், சஃபோலா தேன் தெரியுமா? நல்லது. இவை எல்லாவற்றையும் தயாரிக்கும் மாரிக்கோ நிறுவனத்தின்  நிறுவனரும் தலைவருமான ஹர்ஷ் மாரிவாலாதான் இவர்.

கடந்த 2021  ஜூலையில்  ’Harsh Realities:The Making Of Marico’ என்ற  நூலை நிர்வாக குரு பேராசிரியர் ராம் சரணுடன் இணைந்து எழுதி வெளியிட்டிருக்கிறார் ஹர்ஷ்.

 

நதிமூலம் ரிஷிமூலம்

ஹர்ஷ் மாரிவாலா, தன் தாத்தா வாசன்ஜியின் காலத்திலேயே குஜராத் மாநிலம் கட்ச்சிலிருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தவர் . குஜராத்தில் வாசன்ஜி மிளகு வியாபாரம் செய்ததால் அவர் மாரிவாலா என்று அழைக்கப்பட்டார். குஜராத்தியில் ’மாரி’ என்றால் மிளகு .

ஹர்ஷ் மாரிவாலாவின் தந்தை சரண்தாஸ், 1948-ல் பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து நிறுவினார். அது மசாலா, எண்ணெய் மற்றும் ரசாயனங்களை தயாரித்து வர்த்தகம் செய்யும் நிறுவனம்.

மும்பையில் உள்ள சைடன்ஹாம் கல்லூரியில் படிப்பை முடித்த ஹர்ஷ் மாரிவாலா, தனது 20-வது வயதில் குடும்ப நிறுவனமான பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸில்  இணைந்தார். குடும்ப உறுப்பினர்களின் நேரடித் தலையீடின்றி வணிகம் செய்து, தனது நிறுவனத்தை சர்வதேச FMCG நிறுவனமாக மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்தார்.

துவக்கத்தில் இவரது நிறுவனம் தேங்காய் எண்ணெயை மொத்தமாக விற்று வந்தது.  இதனால் கலப்படம், போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு என்று புரிந்து கொண்டவர் அதை ரீடைல் பிராண்டாக மாற்ற முயற்சிகள் எடுக்க தொடங்கினார். பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்துவிடும் அதனால் ‘வெந்நீரில்  வைத்தால் உருகாத, எலிகள் கடிக்க முடியாத…’ என்று தனித்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பது அக்காலத்தில் பெரிய சவாலாக இருந்தது. எல்லாவித எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொண்டு ஆலோசித்து திட்டமிட்டு நீல நிற பாட்டிலுடன் பாராசூட் பிராண்டை உருவாக்கினார்.

புகைப்படங்கள்: நன்றி: மரிக்கோவின் முகநூல் பக்கம்.
மரிக்கோவுக்கு மாறியாச்சு!

கடந்த 1988ஆம் ஆண்டு, அக்டோபர் 13 ஆம் தேதி, மரிக்கோ ஃபுட்ஸ் லிமிடெட்(Marico Foods Ltd) என்ற பெயரில் துவங்கப்பட்டு நவம்பர் 22ல் வணிகம் செய்வதற்கான சான்றிதழைப் பெற்றது. இப்படித்தான் மரிக்கோ நிறுவனம் உருவானது.

பாராசூட் தேங்காய் எண்ணெய் மற்றும் சஃபோலா சமையல் எண்ணெய் – இந்த இரண்டு பிராண்டுகளுமே நிறுவனத்திற்கு நல்ல வளர்ச்சியை கொடுத்தது. நிறுவனம் தொடங்கிய காலம் முதல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் லாபம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே வந்தது.

குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் இருக்க, அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . ஒரு தனியார் பங்குச் சந்தை நிறுவனத்துடன் கைகோர்க்க முயற்சித்தபோது, அது நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை முறைகேடு பற்றி செய்திகள் வெளிவந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த சூழலில்  நிதி திரட்டுவது சிரமமான சூழலாக அமைந்துவிட்ட்டது. பல முயற்சிகளுக்கு பிறகு தான் 1996-ம் ஆண்டு தான் பங்கு வெளியீட்டுக்கான அனுமதி கிடைத்தது .

அச்சமயத்தில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அவர்களுடன் இணையாக போட்டிபோட பணியாளர்கள், விளம்பரம் , விநியோகச்சங்கிலி என்று அனைத்திலும் தீவிரமாக கவனம் செலுத்தியது. அக்காலத்தில் டாபரின் அன்மோல், டாடா நிஹார் , ஷாலிமாரின் கோகோகேர் என்று பிரபலமான பிராண்டுகளும் போட்டிக் களத்தில் வரிசை கட்டி நின்றன. இருப்பினும்  தேங்காய் எண்ணெய் சந்தையில்  பாராசூட், அசைக்க முடியாத இடத்தை பிடித்து, வெற்றிவாகை சூடியது.

வந்தது போட்டி!

அந்தக் காலகட்டத்தில் விரைந்து விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் (FMCG) துறையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்தது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்தான். 1996-ம் ஆண்டு அதன்  தலைவராக கேகி தாதிசேத் நியமிக்கப்பட்டார். விநியோகமும் பணபலமும் இருந்ததால், ரீடைல் துறையில் சிறப்பாக விளங்கிய  கிஸான் , லிப்டன்,  பாண்ட்ஸ் நிறுவனங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வாங்கியது. ஏன் ஹார்லிக்ஸ் , பூஸ்ட்டை கூட விட்டுவைக்கவில்லை.

நிறுவனங்களை வாங்குவதில் கைதேர்ந்த ஆளாயிருந்த கேகி தாதிசேத், டாடா ஆயில் மில்ஸ்ஸை வாங்கினார். இந்த நிறுவனம் சோப்பு மட்டுமல்ல, நிஹார் தேங்காய் எண்ணெயையும் தயாரித்துக் கொண்டிருந்தது.

நிஹார், வடகிழக்கு மாநிலங்களில் பிரபலமான பிராண்டாக இருந்தும், சந்தையில் 7% மட்டும் தான் தக்கவைத்திருந்தது. ஆனால், பாராசூட் 48% சந்தையை வைத்திருந்தது. அது மட்டுமல்ல…தேங்காய் எண்ணெய் விற்பனையில் பாராசூட்டுக்குத்தான் முதலிடம். அதனால் இந்துஸ்தான் யூனிலீவர், தனக்கு சந்தையில் உள்ள பலத்தைக் காட்டத்தயாரானது.  நிஹாருக்கு வழங்கும் தள்ளுபடி, விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் சலுகை அளித்து பாராசூட்டின் விற்பனையை தடுமாற செய்தது. அத்தோடு விடுமா?  மாரிகோவை வாங்குவதற்கும் காய்களை நகர்த்தியது.

இடைவிடாத போராட்டம்

அதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை வல்லுநர்களின் கூட்டத்தில் மாரிகோவை தாங்கள் வாங்குவதாகவும் அந்தக்காலத்தில் செய்திகள் கசிந்தன.  நண்பர்கள் மூலமாக மறைமுக பேச்சுவார்த்தைக்கு முற்பட்டதாகவும் சொல்வார்கள். ஆனால், எந்தவித மிரட்டல்களுக்கும் பயப்படாமல் தன்னிலையை தக்கவைத்து எதிர்த்து நின்றது மரிக்கோ. ஆனால், இந்த வதந்திகளின்காரணமாக, பங்கு சந்தையில் மரிக்கோவின் விலை சரிய ஆரம்பித்தது .

மரிக்கோ மசியும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. எனவே, கேகி தாதிசேத் நேரடியாக களத்தில் இறங்கினார். தொலைபேசியில் மரிக்கோவை விற்பதால் கிடைக்கும்  லாபத்தை எடுத்துச்சொல்லியும் மரிக்கோ அசரவில்லை. “ஒருவேளை விற்க மறுத்தால், மரிக்கோ என்னும் பெயர் வரலாற்றில் மட்டுமே இருக்கும், அதற்காக வருத்தப்பட வேண்டி வரும்” என்று சொன்னதாகவும் சொல்வார்கள்.

இப்போது தான் ஹர்ஷ் மாரிவாலாவின் உள்ளில் உறங்கி கொண்டிருந்த சீறும் சிங்கம் விழித்துக் கொண்டது. மரிக்கோவும் போட்டிக்கு தயாரானது. பாராசூட் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை விளம்பரங்களுக்காக செலவு செய்ய தொடங்கியது.

சரியான ஆலோசனை

ஹிந்துஸ்தான் யுனிலீவரை மண்டியிட செய்த நிர்மாவின் நிறுவனரான கர்சன் பாய் படேலை ஹர்ஷ் மாரிவாலா சென்று சந்தித்து பேசி ஆலோசனை பெற்றுக் கொண்டார். அதற்கு பிறகு பாராசூட்டின் பங்கு சந்தை 42% லிருந்து 52% த்தை எட்டியது. இந்த கடுமையான போட்டியில் சிறிய நிறுவனங்கள் பலத்த நெருக்கடியை சந்தித்தது.

பாராசூட் தேங்காய் எண்ணெய் விற்பனையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தபின்னரும் சற்றும் ஓயவில்லை . தேவையில்லாமல் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிஹாருக்காக செலவு செய்ததால் 15% இருந்த பங்கு சந்தை 8% மாக குறைந்தது. இந்த நிலையில் ஹிந்துஸ்தான் யுனிலீவரின் புதிதாக தலைமை பொறுப்பெடுத்த ஹர்ஷ் மன்வானி நிஹார் பிராண்டை விற்க முடிவெடுக்க அதை வாங்க முடிவெடுத்தது மரிக்கோவின் இயக்குநர் குழு.

இந்த யுத்தத்தில் மரிக்கோ ஒரு அசாதாரண வளர்ச்சியை பெற்றிருந்தது . பல பன்னாட்டு நிறுவனங்கள் நிஹாரை வாங்க போட்டி போட்டு நின்றன. ரூ. 170 கோடிக்கு மேல் யாரும் முதலீடு செய்ய தயங்குவார்கள் என்ற முதலீட்டு வல்லுநர்களின் கூற்றை முறியடித்து, ரூ.216 கோடிக்கு ஏலம் கேட்டு,  நிஹாரை கைப்பற்றியது மரிக்கோ.

எட்டுத்திக்கும் கொடி

இப்படி பல சவால்களை சந்தித்து திருப்புமுனையை நேர்கொண்ட மரிக்கோ இன்றைக்கு தனது தயாரிப்புகளான பாராசூட், சஃபோலா, ஸ்வீகார், மரிகோஸ் ஹேர் & கேர், ரிவைவ், சில், சஃபோலா-ஊடில்ஸ்  என்ற பிராண்ட் பெயர்களில்  ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் 25 நாடுகளில்  தனக்கென தனியிடம்பிடித்து  வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது.

இந்த கடும் போட்டிக்கு நடுவிலும் மரிக்கோ சமூக பொறுப்பை மறக்காமல் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. கிராமப்புறங்களில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க மற்றும் சாகுபடி உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில்  மரிக்கோவின் CSR திட்டத்தின் கீழ் ‘கல்பவிருக்ஷா’ முதன்மையாகும். இந்த முயற்சியை ஒரு அறக்கட்டளையாக மாற்ற மரிக்கோ திட்டமிட்டுள்ளது. கோவிட் நெருக்கடியின் போது, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சானிடைசர்களை நன்கொடையாக வழங்கியது மரிக்கோ.

‘மாற்றத்தை உருவாக்கு’  என்ற வாசகத்தை தாரக மந்திரமாக கொண்ட ஒரு மனிதனின் நீண்ட பயணம் நிச்சயமாக புதிய தொழில்முனைவோருக்கு  உத்வேகம் அளிக்க கூடியதுதான் இல்லையா… அதற்கு சாட்சியாக மரிக்கோவின் வெற்றிக்கதை காலம் கடந்தும் நிற்கும் அல்லவா!

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *