உடைகளிலும் கவனம் வேணுமே பாஸ்……

 

வெற்றிகரமான  தொழிலின் காரணங்களைப்  பட்டியலிட்டால் அறிவு, திறமை, உழைப்பு போன்றவற்றுடன் பேச்சு, நடை, உடை, பாவனை போன்றவையும் கூடுதல் வலுசேர்க்கும் என்பதே உண்மை.

 

 

 

 

புதிய வேலைக்கான நேர்காணல் போன்றவற்றுக்கு மட்டுமே தோற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். மற்ற நேரங்களில் எல்லாம் நாம் இயல்பாக இருந்தாலே போதும் என்பதுமாதிரியான ஒரு எண்ணம் நம்மவர்களிடையே  நிலவிவருகிறது.

 

 

paper-3213924_640

ஆனால் திறமை, உழைப்புடன் சூழலுக்குத் தகுந்தாற்போல  உடை, உடல்மொழி, பழக்கவழக்கம் போன்றவற்றில்  கவனம் செலுத்துவதும் தொழில் முனை வோரின் தொழில் சிறக்கக்  கைகொடுக்கும்  என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

தொழில் சார்ந்த அலுவலகக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டங்கள், விவாதங்கள், பயிற்சி வகுப்புகள், நேர்முகத்தேர்வுகள்   அலுவலகக் கொண்டாட்டங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை தொழில்முனைவோராகிய  நீங்கள்  உங்களுடைய தொழில் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும்.

 

அதுபோன்ற சமயங்களில் நீங்கள் என்னமாதிரி உடை உடுத்தி இருக்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள், என்னமாதிரியான திறனுடன்  கூட்டத்தைக் கொண்டுபோகப் போகிறீர்கள் என்பதும் அவதானிக்கப்படும்.

 

அதனால் புதிய தொழில் முனைவோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் தொழில்சார்ந்த கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன, அவற்றில் தொழில்முனைவோர் என்ன மாதிரியான உடல் மொழியை வெளிப்படுத்துகின்றனர் என்பவற்றை மற்றவர்களிடமிருந்து  கவனியுங்கள்.

 

business-3009825_640

இதுபோன்ற நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டு பொருத்தமான சமயத்தில் அவற்றை உங்கள் தொழிலுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அலுவலகக் கொண்டாட்ட நேரங்களில்  ஒன்றுகூடும்போது வெள்ளை சட்டை அணிவதும், வாடிக்கையாளர் சந்திப்பின்போது காலர் இல்லா பனியனுடன்  செல்வதும் சற்றும் பொருந்துவதில்லைதானே?

 

 

நீங்கள் ஒரு குழுவின் மேலாளராக இருக்கும் பட்சத்தில், உங்கள் குழுவில் உள்ள இளநிலை ஊழியரின் கருத்துக்களை அறிய முற்படும்போது கழுத்துப் பட்டை(tie) சகிதம் விவாதிப்பதற்கும் ஒரு காட்டன் பாண்ட் அரைக் கை சட்டை சகிதம் விவாதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை மனதில் நினைத்துப்பாருங்கள். நான் சொல்லவரும் செய்தி உங்களுக்குப் புரியும்.

 

அதேபோல நீண்ட நேரம் நின்று கொண்டு பேசும் அலுவலகக் கூட்டங்களில், முடிந்தவரை பேண்டின் வண்ணத்திலே காலுறை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்; குறிப்பாக  விரல் பகுதி கிழிந்திருக்கும் காலுறைகளை அணிவதைத் தவிருங்கள்.

 

waiting-410328_640

பெண்களாக இருக்கும்பட்சத்தில் மிகுந்த அலங்காரம் செய்யப்பட்ட ஜிகுஜிகு உடைகளை ஒருபோதும் தொழில்சார்ந்த கூட்டங்களில் அணியாதீர்கள். தலைநிறைய மல்லிகைப்பூ, கைகொள்ளா வளையல்கள் என்று உங்களை அலங்கார பூஷிதைகளாக காட்டிக்கொள்ள ஒருபோதும் முயலவேண்டாம்.

 

அந்தக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வேறு ஏதேனும் நிறுவனப் பிரதிநிதிகளான பெண்கள் வந்து “வாவ்! உங்க புடவை சூப்பர் மேடம்… இந்த ஜிமிக்கு கம்மல் எங்க வாங்கினீங்க?” என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? கூட்டத்துக்குச் சென்ற நோக்கமே சிதைந்துவிட்டதற்கான அறிகுறியல்லவா அது!?

 

தொழில் ரீதியில் உங்கள் நிறுவனத்தை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது உங்கள் அறிவும் திறமையும்தான் சிலாகிக்கப்பட வேண்டுமே தவிர, உங்கள் நகைகளும் ஒப்பனையும் அல்ல. அப்படியென்றால் எப்படித்தான் உடையணிவது?

 

பருத்தி புடவைகள் அல்லது சுடிதார், உறுத்தாத ஒப்பனை என்று உங்களைக் கண்ணியமாகக் காட்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் திறன் சார்ந்து நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

 

wedding-saree-collection-1050929_640

நம்முடைய தாய்மொழி முக்கியம்தான். ஆனால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்காதீர்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக எழுதப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.

 

தொழில் சார்ந்த திறமை இருந்தாலும் ஆங்கிலத்தை  பயத்துடன் பார்க்கும் மனோபாவம் இருப்பதால்தான் குறிப்பிட்ட வட்டம் தாண்டி நிறையத் தொழில்முனைவோர் தங்கள் எல்லைகளை விரிவாக்கிக்கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

 

தொழில் சார்ந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான போட்டிகளில்,தேர்வுகளில்  கலந்துகொள்கிறீர்களா?

 

நகத்தைக் கடித்தபடி யோசிப்பது, குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருப்பது, எரிச்சலான மனநிலையுடன்   பிறரிடம் பேசுவது என்று பதட்டமான உடல்மொழியை பிறருக்குக் காட்டாதீர்கள். இவைபோன்ற உங்களின் சீரற்ற உடல் மொழி தொழில்  வாய்ப்புகளைப் பாதிக்கலாம்.

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *