வெற்றியும் தோல்வியும்

தொழில், குடும்பமாகவோ அல்லது குடும்பப் பின் புலமாகவோ இருந்தால் மட்டுமே சொந்தமாகத் தொடங்கும் தொழிலில் வெற்றி பெற முடியும் என்கிற மனநிலை  நிலவிய காலம் முன்பு உண்டு. அதையும் மீறி நீங்கள் சொந்தத்தொழில் செய்யக் களமிறங்கினால் முதலில் உங்கள் வட்டத்தில் உள்ளோர் உங்களை பயமுறுத்திப் பார்ப்பார்கள்.

 

“சொந்தமாகவா தொழில் தொடங்கப் போகிறாய்? உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. படிச்ச படிப்புக்கு ஒரு அரசாங்க வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதிப் போய்ச் சேர். அதுதான் 58 வயசு வரைக்கும் எதிர் காலத்துக்கும் உத்தரவாசம்” என்கிற கேள்விகளைச் சந்திக்காக நடுத்தர வயதினர் இல்லை என்றே கூறலாம்.keyboard-648439_1920

 

தோல்விகளைக் காட்டி ஒருவனை பயமுறுத்தித் திசை மாற்ற முயல்பவர்கள் பலர். அதைப் பொருட்படுத்தாத பலர் இன்று வெற்றிக்கனியைச் சுவைக்கிறார்கள்.

 

ஆனால் இன்றைய இளைஞர்கள் எதிர்மறை சிந்தனையுடன் இல்லை  என்று அறியும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சுயமாகவே அவர்கள் பலமுனைப் பார்வைகளின் மூலம் தயக்கமில்லாமல் சொந்தத் தொழிலைத் தொடங்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திக்கும் இயல்பான திறன் அவர்களுக்கு இருக்கிறது.

 

சாதகமாகப் பாருங்கள்

தோல்விகளைத் தொடர்ந்து சந்திக்க யார்தான் விரும்புவார்கள்? ஆனால் அதையும் உலகமறிந்த விஞ்ஞானி தனக்குச் சாதகமாகவே எடுத்துக் கொண்ட கதை உங்களுக்குத் தெரியுமா?

தாமஸ் ஆல்வா எடிசன், பல்பு ஒன்றை வடிவமைக்கத் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார். தோல்வி… தோல்வி மேல் தோல்வி. எத்தனை முறை தெரியுமா? 999 முறை! 1000 ஆவது முயற்சியில் நின்று எரியும் (மின் சக்தியில் நின்று எரியும் டங்ஸ்டன் இழையுடன் கூடிய பல்பு) பல்பைக் கண்டு பிடித்தார்.

 

உற்சாகத்துடன் உதவியாளரிடம் சொன்னார்:

“இதோ என்னுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன்”

 

உதவியாளர் சொன்னார்:

“அதற்காக 999 தடவை தோற்றிருக்கிறீர்கள் அல்லவா!”

 

அதற்கு எடிசன் சொன்னார்:

“அதனால் என்ன? என்ன செய்யக் கூடாது என்சிற 999 விஷயங்களைத் தெரிந்து கொண்டேனல்லவா!”

 

இப்படித்தான் தோல்வி என்பதை முடிவாக எடுத்துக் கொள்ளாதவர்களே வெற்றிப் பாதையில் நடந்து சாதனைக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார்கள்.thumb-794696_1280

 

என்ன காரணம்?

ஆமாம், தோல்வி எப்போது ஏற்படுகிறது?. செயல்பாட்டின் தளர்வில் என்றால் திருத்திக் கொள்ளலாம். புதிய முயற்சி என்றால் அந்தத் தவறுதலைத் தோல்வி என்று சொல்ல முடியாது. வேகம் தளரும்போது ஏற்படும் தோல்வி பக்குவம் இல்லாத தன்மையால்தான் வந்து சேருகிறது. அதில் முடங்கிப் போகாமல் தொடர்ந்து செயல்படுவதே வெற்றியை சந்திக்க வைக்கிறது.

 

முடிவுகளை உணருங்கள்:

ஒரு தொழிலின் இறுதி நிலைப் போக்குகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விழிப்புணர்வும் நமக்குத்தேவை.  இறுதி நிலை அடைந்து விட்டால் எந்த மாதிரியான தொழில் தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை உணர்ந்து, அதன்படி நடக்க வேண்டும். தொடர்ந்து இழப்புகள் ஏற்படும்போது கடுமையான நடவடிக்கைகளை பல வகையில் எடுக்க வேண்டும். எடுக்கத் தயங்கும் போது தொழிலின் முடிவுரையை எழுதிக் கொண்டருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஆக, விழிப்போடு தொழில் செய்வது, தொழில் தடுமாறும்போது சரியாகத் திட்டமிட்டுத் தாங்கிப் பிடிப்பது, தவிர்க்க முடியாத இழப்பின்போது சேதாரத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது என்று பல முனைகளிலும் புதிய தொழில்முனைவோர் தங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

-தஞ்சை. என்.ஜே.கந்தமாறன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *