ஜெ. ஏன் நமக்கு முக்கியமானவர்?

மாண்புமிகு  முதல்வர். டாக்டர்.ஜெ..ஜெயலலிதா அவர்களைப்பற்றித்தான் நாடே கடந்த மூன்று நாட்களாக அல்லும் பகலும் நினைத்துக்கொண்டிருக்கிறது.  அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் அவரது பூதவுடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கணம் வரை ஒட்டு மொத்த இந்தியாவும் அவரது நினைவாகவே இருக்கிறது.

 

காரணம்?

 

எளிய மக்களின் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அவர். லட்சோபலட்சம் சாமானியர்களின் நம்பிக்கை நட்சத்திரம். அவர் சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்று தங்களைத்தாங்களே வருத்திக்கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர் பாசமுள்ள தமிழர்கள். இதில் மத, இன, மொழி வேறுபாடு கிடையாது. ஆனால் இயற்கை, அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டது.DSCF5867

அவரை, வெறும் கட்சி அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் தொழில் முனைவோரின் பார்வையில் பார்த்தால் உண்மையில் அவர் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமானவர்.

1991, 2001, 2002, 2011, 2015, 2016 என்று அடுத்தடுத்து நேரடியாக தமிழகத்தை ஆண்டவர். அரசியல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நிர்வாக விஷயத்தில் பல்வேறு கட்டங்களை ஏறுமுகத்தில் படிப்படியாகக் கடந்து வந்திருக்கிறார்.

 

அதிலும் குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் தி.மு.க-அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளின்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டி நடந்ததை நீங்கள் கவனித்திருப்ப்பீர்கள். இவ்விரு கட்சிகளும் அரசியல் ரீதியிலான போட்டா போட்டிகளை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆரோக்கியமான போட்டியைத் தொடங்கின. இதில் அ.இ.அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா முக்கியப் பங்கு வகித்தார்.

 

அது என்ன போட்டி?

 

’எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்துக்குக் கொண்டு வருவது’ என்பதில் ஏற்பட்ட போட்டிதான் அது!

தி.மு.க தலைவர் ஒரு பட்டியல் வாசித்தால், ஜெயலலிதா ஒரு பட்டியலை வாசிப்பார்:

“நோக்கியாவை நான் கொண்டுவந்தேன்” என்று ஒருவர் சொன்னால்,

“மோட்டரோலாவை, ஃபாக்ஸ்கானை நான் கொண்டுவந்தேன்” என்று மற்றவர் சொல்வார்.

 

தமிழகத்தை ஆட்டோமொபைல் துறையில் ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ ஆக உருவாக்கியதிலும், மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முக்கிய நகரமாக சென்னையை உருவாக்கியதிலும், பல்வேறு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி மேம்படுத்தியதிலும் ஜெயலலிதாவின் பங்கு மிக முக்கியமானது.

 

இந்த போட்டாபோட்டியில் தமிழகம் ஏகப்பட்ட பலன்களை அடைந்தது என்று தாராளமாகச் சொல்வேன். தமிழகப் பெண்களின் சுய மரியாதையை உயர்த்தியதில் அவரது பங்கு நிச்சயம் குறிப்பிடத்தக்கது.

 

தொட்டில் குழந்தைகள் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கியது, பெண் கமாண்டோ உருவாக்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (அவற்றை தி.மு.க அரசு அறிமுகப்படுத்தி இருந்தாலும்கூட) முழு ஆதரவு என்று பல வகைகளிலும் சமூகப்பாதுகாப்பு, பெண்களுக்கான தற்சார்பு திட்டங்கள், முயற்சிகளை முன்னெடுத்தார். அவை அனைத்தும் இன்று வெற்றிபெற்ற திட்டங்களாகத் திகழ்கின்றன.

DSC_4075

இவைதவிர அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டுவந்து ஏழை எளிய மக்களின் பொருளாதார சுமைகளைக் குறைக்கும் புரட்சியை ஏற்படுத்தினார் என்றால் அதுமிகையில்லை.

இவைஒருபுறமிருக்க, தொழில் துறைக்கும் புதிய தொழில் முனைவோருக்கும் அவரை நினைத்துப்போற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

புதிய தொழில் முனைவோரை மனதில் கொண்டு அவர் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அவ்வளவு அற்புதமானவை. தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ’தமிழ்நாடு 2025’ என்று ஒரு விரிவான திட்டத்தை ஜெ. அறிவித்தார்.

 

மேலும் வெறும் பெயரளவில் மட்டும் இருந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தைப் புனரமைத்து புதிய கட்டடம் கட்டுவித்து, அதில் புதிய தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுவது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

மாற்றுத்திறனாளிகள் செயத்தக்க தொழில்களை இனம் கண்டறிய ஆய்வு, சிட்கோ தொழிற்பேட்டைகளை மேம்படுத்த ஏற்பாடு, சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி, உயிரித்தொழில்நுட்ப துணிகர முதலீட்டுத் திட்ட உருவாக்கம், சென்னை வர்த்தக மையத்தை ரூ.298 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய அரசாணை, கோவையில் உள்ள டைடல் பார்க்கை விரிவுபடுத்த நடவடிக்கை என்று தொடங்கி ஒரு பெரிய பட்டியலையே போட்டுவிடலாம். அவ்வளவு முயற்சிகளை ஜெ. தலைமையிலான அரசுகள் செய்திருக்கின்றன.

 

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல  ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (நீட்ஸ்) ஒரு உன்னதமான திட்டமாகும்.

 

சுய தொழில் ஆர்வமுள்ளவர்களை வடிகட்டி, தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து, கடனுதவி பெற்றுத்தந்து, தொழில் தொடங்க உதவும் திட்டம் அது. இன்று புதிய தலைமுறை தொழில் முனைவோர் மத்தியில் மி9கவும் புகழ்பெற்ற திட்டமாக அது விளங்குகிறது.

15377PMay---23--B-BIG

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான கொள்கைகள், அவற்றுக்கான செயலாக்கத் திட்டங்கள் ஆகியவை எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு திறன்களை வளர்க்க உதவும் வகையில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுவதுபோல, மாநில அளவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தை உருவாக்கி, ஐசிடி அகாடமி உள்ளிட்ட அமைப்புகளின் துணையுடன் பல்வேறு திறன் சார் பயிற்சிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் பின்னணியில் ஜெ.வின் தெளிவான திட்டமிடலும், அக்கறையும் ஜொலிக்கிறது.

 

இன்றைய தொழில்நுட்பம், நவயுக இளைஞர்களுக்கான சுய தொழில் தேடல், சிறுதொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, பெருந்தொழில் நிறுவனங்களுக்கான  கரிசனப்பார்வை, ஏற்றுமதித்தொழில்களுக்கான சிறப்பு கவனம் என்று பல வகைகளிலும் தமிழக தொழில் துறைக்கும் சுய தொழில் கனவு உள்ளோருக்கும் மிகச்சிறப்பான திட்டங்களைத்தீட்டி செயல்படுத்தி வந்தவர் ஜெயலலிதா அவர்கள்.

 

இன்று அவர் காலமாகியிருக்கலாம். ஆனால் அவரது கனவுத்திட்டங்கள் அனைத்தும் சொந்தத் தொழில் செய்யும் எண்ணமுடைய இளைஞர்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

 

அதனால்தான் சொல்கிறேன்….

“ஜெ.’ நமக்கு முக்கியமானவர்….:

அவரது ஆன்மா அமைதிபெறட்டும்!

 

-அருண்மொழி.

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *