லே ஆஃப் என்பது முடிவல்ல, தொடக்கம்!

“லே-ஆஃப்”

 

இதைக் கேட்கும் மற்றவர்களுக்கு வெறும் “வார்த்தை”, ஆனால் இதை அனுபவித்தவர்களுக்கு அது “வலி”. இப்படி ஒரு வலியை இதுவரை அனுபவித்த பல்லாயிரம் அப்பாவிகளில் நானும் ஒருத்தி. கல்லூரி இறுதி ஆண்டை எல்லோரும் கனவுகளோடு முடிக்க எனக்கு மட்டும் ஏனோ அதில் பாதி மட்டுமே நிறைவேறிய ஒரு தோற்றம்.

 

ஆம், முதுகலை முடித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்த நேரம் வேலை மட்டும் கிடைத்தது ஆனால் மனம் ஈடுபடாதக் கணிப்பொறித் துறையில். குடும்பச் சூழல், பெண் என்னும் பாலியல் முட்டுக்கட்டை(விரைவில் திருமணம் முடிக்க பணம் வேண்டுமே!!!) இவை சேர்ந்து என்னை அமிழ்த்த முதுகலைக் கனவுக்குப் பிரியாவிடைக் கொடுத்துக் கழுத்தில் மாட்டினேன் தொழில்நுட்பத் துறையின் அடையாள அட்டையை.

எட்டு ஆண்டுகள் ஓடியது தெரியவில்லை ஆனால் உன் நேரம் வந்துவிட்டதடிச் செல்லமே என்று எனக்கு நினைவூட்டியது என்னுடைய இறுதி நாள். எல்லோருக்கும் இனியவளான எனக்கு இனிப்பான சர்க்கரை நோய் வர உடல் நிலை பாதிப்பு உடன் வந்து ஒட்டிக்கொண்டது. இதன் விளைவாய் அலுவலகத்தில் விடுப்பு நான் கேட்க, ”மிகவும் நல்லதாய்ப் போச்சு, நீ மொத்தமாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்” என்று நிறுவனம் தனது  தாராள மனத்தைக் காட்ட, பறிபோனது என்னுடைய முதல் வேலை!!! ஆனால் அது நடந்தது இந்தக் காரணத்தால் அல்ல… கடைசி நாளன்று நடந்தது என்ன? தொடர்ந்து படியுங்கள்!

 

பகல் பன்னிரண்டு மணி இருக்கும், ஹெட் ஹெச் . ஆரிடம் இருந்து வந்தது தொலைபேசி அழைப்பு. ஏற்கனவே பெஞ்சில் (செய்வதற்கு வேலை இல்லை ஆனால் சம்பளம் மட்டும் உண்டு) இருந்த எனக்கு அவருடைய பெயர் என் கை பேசியின் முகப்புத் திரையில் பளிச்சிட்டபோது வயிற்றில் சற்று புளியைக் கரைத்தது.

 

ஒரு வேளை, பெரிய ப்ராஜெக்ட் கிடைத்திருக்குமோ??? இல்லை வேறு எதாவது ஊருக்கு இடமாற்றம் செய்ய முடிவாய் இருக்குமோ??? அல்லது நம்மை அறியாமல் நாம் ஏதும் நல்லது செய்ததற்குப் பாராட்டோ??? என்று இப்படி பலநூறு குழப்பங்களோடு வந்த செல் பேசி அழைப்பை எடுத்துப் பேசினேன்.

 

“மரியா நீங்கக் கொஞ்சம் ஹெச் ஆர் காபினுக்கு 2 மணிக்கு வர முடியுமா??” என்கிற கேள்வி எதிர் முனையில் எதிரொலிக்க, “சரி வருகிறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன். மனமில்லாமல் மதிய உணவை முடித்து அவர் அறைக்குச் சென்றேன். அன்போடு அழைத்து எதிரே அமரவைத்து என் 8 ஆண்டுகளின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அப்பொழுதே சிறிதாய் பொறி தட்டியது இருப்பினும் வெளியில் காட்டாமல் அமர்ந்திருந்தேன். பெரிய பட்டியல் ஒன்றைக் கையில் வைத்திருந்தார்.

“ரொம்ப ஸாரி மரியா! இத எப்படி சொல்றதுனே தெரியலை, கம்பெனி சிலரை அதோட வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியலன்னு அவங்களை வேலையை விட்டு அனுப்பனும்னு முடிவெடுத்து இந்த லிஸ்ட தயாரிச்சிருக்காங்க. அன்பார்ச்சுநேட்லி அதுல உங்க பேரும் இருக்கு…” என்று சொல்லி முடிப்பதற்குள் இதயத்திற்குள் யாரோ அணுகுண்டு வீசியதுபோன்று ஒரு வலி.

 

கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வர எதிரே அமர்ந்திருப்பவர் யார் என்றே தெரியாத அளவிற்குக் கண்கள் கண்ணீரால் நிறைந்தது .. என்ன செய்ய முடியும்??? கெஞ்சவும் முடியாது இன்னொரு வாய்ப்புக் கேட்கவும் முடியாது.

 

முக தாட்சண்யத்திற்கு சொல்ல வேண்டியதைச் சொல்லி ஆறுதல் அளித்தார் ஹெச் ஆர். அவர் உதட்டளவில்தான் சொல்கிறார் என்று தெரிந்தாலும் அந்த நொடி ஏனோ அந்த வார்த்தைகள் தேவைப்பட்டன. அவரே என்னைக் கையோடு கூட்டிச் சென்று ஒரு கணிப்பொறி முன் அமரச் செய்தார். அவர் அழைத்து வருகிறார் என்றாலே உடன் வரும் “ஆட்டை” ஏற்கனவே வெட்டி விட்டார்கள் என்பதை ஏற்கனவே அறிந்ததுபோல இருந்தது அங்கு இருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை.

 

அப்பப்பா… வார்த்தையில் விவரிக்க முடியாது. ஒரு வழியாய் இவ்வளவு ஆண்டுகளில் நான் எட்டிப் பார்க்கக்கூட பயந்த அந்த இணைய முகவரிக்கு நானே சென்று என் வேலையை ராஜிநாமா செய்வதாய் ஒப்புக்கொண்டு பட்டனைத் தட்டினேன் (தட்ட வைத்தார்).

20160128_161434

எட்டு ஆண்டுகளாய் என் கழுத்தில் இருந்த அடையாள அட்டை கேட்டு வாங்கப்பட்டது (பறிக்கப்பட்டது). வேறொருவர் நான் வெளியில் செல்ல ஆக்சஸ் கொடுக்க வெறுமையாய் வெளியில் வந்தேன். என்ன நடந்தது ஏது நடந்தது என்று எனக்குப் புரிவதற்கே நாட்கள் பல தேவைப்பட்டன.

 

என்ன, எல்லோருக்கும் ஒரு சோகக் கதை படித்த அனுபவமா???

 

அனுதாபமடைய அல்ல ஆழ்ந்து சிந்திக்கவே உங்களை அழைக்கிறேன். நான் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரம் என் குடும்பம் என் வருமானம் ஒன்றைத்தான் எதிர்பார்த்து இருந்தது. இப்படி ஒரு சூழல் வருமென்று நான் கனவுகூட கண்டதில்லை. வாழ்கையில் என்ன வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இதுவே உதாரணம்.

 

இப்படி நிகழும் அதிர்ச்சிகளைத் தடுக்கவோ எதிர்த்து கேள்வி கேட்கவோ நமக்கு எந்த உரிமையும்IMG-20160310-WA0003 இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அதுதான் அந்தச் சூழலை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம். ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது. எவ்வளவு விரைவில் முடிகிறதோ அவ்வளவு விரைவில் அதிலிருந்து வெளியில் வரவேண்டும்.

 

நானும் வெளியில் வந்தேன் ஆனால் பல சோதனைகளைத் தாண்டி. உடுக்கை இழந்தவனைவிட வேலை இழந்தவனின் பாடு திண்டாட்டமே. அறிந்தவர், தெரிந்தவர், உற்றார், உறவினர், நண்பர்கள் என என் வேலைக்காகக் நான் கெஞ்சாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

 

நான் வாங்கியதைவிடக் குறைவான சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை, வேலை கிடைத்தால் மட்டும் போதும் என்று முயற்சித்த எனக்கு ஏமாற்றமே எஞ்சியது. ஒரு கட்டத்தில் நான் ஒன்றுக்கும் உபயோகம் இல்லை, என்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது, இதோடு எல்லாவற்றிற்கும் முழுக்கு போடவேண்டியதுதான் என்றுகூடத் தோன்றியது.

 

“என்ன, வேலை போயிடுச்சாமே?” என்று பார்ப்பவர்கள் கேட்கும்போதெல்லாம் வெட்கித் தலை குனிந்தேன். யாருக்கும் தெரியாமல் பல நாள் அழுதேன். நானே என்னைப் பார்த்து பரிதாபம் கொண்டேன். அது எனக்குப் பிடிக்கவில்லை.

 

தந்தையின் உதவி இல்லாமல் என் தாய் தனியாய் நின்று போராடி என்னை வளர்த்தார். மற்றவர்கள் அவளைப் பார்த்து ஏளனமும், பரிதாபமும் கொண்டாலும் என்றுமே அவர் தன்னை நினைத்து வருந்தியதில்லை. எல்லாச் சூழலிலும் இருந்த நல்லனவற்றை எடுத்துக்கொண்டு முன்னேறினாள், எனக்கும் அதையே பழக்கி இருந்தாள். இந்தக் குணம்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தது.

கண்ணீரைத் துடைத்துவிட்டு பொறுமையாய் சிந்தித்தேன். நாம் ஏன் வேலைக்காக மற்றவர்களிடம் நிற்க வேண்டும்? நாமே ஒரு சுயதொழில் செய்தால் என்ன?

 

சிந்தனை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அதை நனவாக்குவது எப்படி? எப்படி சாத்தியமாகும்? – இப்படி கேள்விகளை அடுக்கியது என் ஆழ் மனம். இப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் முயற்சி பிறக்காது – இது என் மேதாவிலாச எண்ணம். ஒரு கட்டத்தில்  ’செய்துதான் பார்ப்போமே’ என்ற முடிவுக்கு வந்தேன் எந்த வேலையை எட்டு ஆண்டுகளாய் செய்து வெளியேற்றப்பட்டேனோ அதே வேலையே பிறருக்கு பயிற்றுவிக்கும் மையத்தை உருவாக்கினேன். அதுதான் ஜே.எம்.ஜே. இன்ஸ்டிடியூட் ஃபார் சாஃப்ட்வேர் ட்ரெயினிங்.

 

எனக்கே சொந்தமான  ஒரு பயிற்சி மையம். எனக்கென்று ஒரு வணிக அட்டை(பிசினஸ் கார்ட்), எனக்கென்று மேலாளர் இருக்கை, இன்னும் பல பல.. இவ்வளவு நாள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இப்பொழுதுதான் வேலையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எது செய்தாலும் அது என்னையே சாரும். எந்த உயர் அதிகாரிக்காகவும் நான் பயப்பட வேண்டாம். யாரையும் காக்கா பிடிக்க இரவில் அதிக நேரம் நெட்டுகுத்தல்லாக சுற்று இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டாம்.

 

“ஏன் சீக்கிரம் கிளம்புறீங்க? இன்றைக்கு டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சா?” என்பன போன்ற எரிச்சலூட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டாம். எந்த உடல் நலக் குறைவுக்காகவும் கையைப் பிசைந்துகொண்டு யார் முன்பும் குற்றவாளிபோல் நிற்க வேண்டாம். நானே ராஜா நானே மந்திரி! இன்று என்னால் பயிற்றுவிக்கப்படும் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் வேலை கொடுக்கும். அன்று நான் ஒரு ஊழியர். இன்று, மென்பொருள் நிறுவனங்கள் எனக்கு வாடிக்கையாளர்கள்.

பால் குடிக்கும் ஆறு மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகப் பேருந்தை பிடிக்க முன்பெல்லாம் ஓட்டமாய் ஓடுவேன். ஒவொரு நாளும் புறப்படும்பொழுது என் பிள்ளை கதறி அழும். காதுகளைச் செவிடாக்கிக்கொண்டு மனதில் காயத்தோடு ஓடுவேன். என்ன புண்ணியம்? இத்துணை ஆண்டுகள் என் உடல் உழைப்பு முழுவதையும் சக்கையாய் பிழிந்து எடுத்து விட்டு  தூக்கி எறிந்து விட்டது நிர்வாகம்.

 

அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வேலைக்கு அமர்த்துவது மனிதர்களை அல்ல நல்ல நிலையில் 20 வயது பூர்த்தி அடைந்த ஒரு இயந்திரத்தை. 30ஐ  நெருங்கும்போது கோளாறாகும் இயந்திரங்களுக்கு அவர்கள் அலுவலகங்களில் இடம் இல்லை. இருந்த வாழ்வாதாரம் இழந்து மேற்கொண்டு வேறு எங்கும் வேலைக்குச் செல்லும் தகுதியும் இழந்து மனித எச்சங்களாய் தெருவில் நிறுத்தப்படும் இயந்திரங்கள் என்னைப்போல் ஏராளம்… ஏராளம்.

 

பணியில் சேர்ந்த புதிதில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன். கடைசி பேருந்தில் வீட்டிற்குச் செல்வேன். பல நேரங்களில் விடியும் வரை வேலை பார்த்திருக்கிறேன். உணவுமுறை, உறங்கும் நேரம், வாழ்க்கை முறை என்று அனைத்தும் நேரம் தப்பி போனதால் வந்த விளைவே இந்தச் சர்க்கரை நோய். என்னைப்போல் இன்னும் பல நோய்களால் பாதிப்புக்குள்ளானோர் தொழில்நுட்பத் துறையில் அதிகம் உள்ளனர்.

 

இதற்கு யாரிடம் நீதி கேட்க முடியும்? அரசாங்க வேலை என்றால் ஊழியர்களைப் பாதுகாக்க ஏகப்பட்ட சட்டங்கள் உண்டு ஆனால் இந்தப் பரிதாபத்துக்குரிய IT மக்களுக்கு எதற்கும் வழி இல்லை. நம் உடலையும் உணர்வுகளையும் பிழிந்து பன்னாட்டு முதலாளிகள் கொடுக்கும் அதிக சம்பளத்திற்காக நம்மையே நாம் அடகு வைக்கிறோம். எந்த நேரம் வேண்டுமானாலும் துரத்தி அடிக்கப்படுவோம் என்கிற வேதனையுடன் எப்படி நிம்மதியாக வேலை பார்ப்பது?

அதுவும் பெண்களின் நிலைமை கொடுமையிலும் கொடுமை. திருமணம் ஆகாதவரைத்தான் பெண்களுக்கு மரியாதை. திருமணம் முடிந்ததும் நாம் ஏதோ எல்லாவற்றிற்கும் சலுகை வாங்கும் கூட்டமாக கருதப்படுகின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்ப்பம் என்று கேள்விப்பட்டவுடன் நம்மை எப்படியாவது கழித்துக்கட்டவேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி குழந்தை பெற்று திரும்பினால் இருப்பதிலேயே கடைசி தகுதி நமக்கு.

 

இதெல்லாம் மாறுமா?? நிச்சயம் இல்லை. போதும் அடுத்தவர்களின் ஏவலுக்குப் பயந்து எல்லாச் சுகங்களையும் இழந்து இயந்திரங்களாய் வாழ்ந்தது போதும். நமக்காக வாழ்வோம். காலையில் துயில் எழும்போதே இன்றைக்கு என்ன சொல்லி மேலாளர் கடிந்துகொள்வாரோ என்கிற பயம் வேண்டாம், இன்று நம் வேலைகளை எல்லாம் நேரத்திற்குள் முடித்து வீடு திரும்புவோமா என்கிற குழப்பம் வேண்டாம், குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லையே என்ன பாடு படுகிறதோ என்கிற பதைபதைப்பு வேண்டாம்.

 

அலுவலகத்தில் உழைப்பதைவிட அதிகமாய் நம் தொழிலுக்காக உழைக்க நேரிடும் ஆனால் அதில் கிடைக்கும் இன்பமும் மன நிறைவும் வேறு எதிலும் கிடைக்காது. சுருக்கமாகச் சொன்னால் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு உணவு ஊட்டுவதைவிட நம் குழந்தைக்கு ஊட்டுவதில்தானே அலாதி இன்பம் இருக்20160319_071330கிறது! மொத்தத்தில் மனத்திலும், உடலிலும் அழுத்தம் இல்லாமல் இருக்க நமக்குச் சொந்தமாய் ஒரு சுயதொழில் இருப்பதே உத்தமம்.

நமக்குப் பிடித்ததை முழுமனதோடு செய்யலாம். அதன் மூலம் வரும் லாபத்தைப் பூரிப்போடு ஏற்றுக்கொள்ளலாம். நஷ்டம் என்றால் விலை உயர்ந்த பாடத்தை கற்றுக்கொள்ளலாம். நம் வாழ்க்கையை நமக்காய் வாழ சுயதொழில் ஒன்றே அற்புத தீர்வு. சுயதொழிலின் இன்பத்தை உணர்வோம். நேரம் இல்லாமல் இல்லை அது நமக்காக இருக்கட்டும். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. என் கதையே அதற்குச் சான்று.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

13 thoughts on “லே ஆஃப் என்பது முடிவல்ல, தொடக்கம்!”

  1. அற்புதமான பதிவு………..
    என் வாழ்வில் நானும் அனுபவித்த பதிவு.

  2. I’m proud of you . Proud to be your friend…!!! you’ll reach great height !!! All the very best!!!

  3. “எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்ப்பம் என்று கேள்விப்பட்டவுடன் நம்மை எப்படியாவது கழித்துக்கட்டவேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி குழந்தை பெற்று திரும்பினால் இருப்பதிலேயே கடைசி தகுதி நமக்கு.”

    ….
    மனம் வலிக்கிறது!

  4. Heartache!

    “எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்ப்பம் என்று கேள்விப்பட்டவுடன் நம்மை எப்படியாவது கழித்துக்கட்டவேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி குழந்தை பெற்று திரும்பினால் இருப்பதிலேயே கடைசி தகுதி நமக்கு.”

    ….
    மனம் வலிக்கிறது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *