தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டவள் நான்!-ஜே.கே. ரவ்லிங்

 

ஹாரி பாட்டர் புகழ் ஜே,கே.ரவ்லிங்கின் வெற்றிக் கதை!

 

ஹாரி பாட்டர் நாவல்களை உங்களுக்குப் பிடிக்குமா? மந்திரவாதி,மாயாஜாலம் என்று ஒரு பக்கா ஃபேண்டஸி பேக்கேஜாக, ரசிகர்களைக் கட்டிப்போட்ட புத்தக வரிசை அது. இந்தப் புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரவ்லிங்கை தெரியாதவர்கள்  இல்லை. அறிவாளி, கற்பனைத் திறன் மிகுந்தவர், சுவைபட எழுதுவதில் வல்லவர். எழுத்தின் மூலமே கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து, கோடீஸ்வரப் பெண்மணியாக அவர் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். எல்லாம்
சரிதான்….rowling 2

 

ஆனால் இந்த நிலையை அடைவதற்கு முன்னால், க்ளினிக்கல் டிப்ரஷன் என்கிற மிகத் தீவிரமான மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்தான் ஜே.கே.ரவ்லிங் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புங்கள், அதுதான் உண்மை.

 

ஜோனத் கேதலின் ரவ்லிங் அதாவது ஜே.கே.ரவ்லிங் பிறந்தது, இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய டவுனில். ”என்னுடைய சிறு வயது வாழ்க்கை அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பொதுவாகப் பெண் குழந்தைகளுக்கு அப்பாக்களைப் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அப்பாவின் அன்பு கிடைக்கவே இல்லை. அம்மாவிடம்தான் நான் வளர்ந்தேன். அதிலும் மாயாஜாலக் கதைப் பைத்தியமான எனக்கு  அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அது போன்ற கதைகளைக் கேட்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. ஆனால்  என் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை” என்று ஆதங்கப்படுகிற   இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ’ரேபிட்’ என்கிற தலைப்பில் கதை ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

 

“அதன்பிறகு படிப்பில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பை லண்டனில் முடித்த பிறகு பட்டப் படிப்பை பாரிசில் முடித்தேன்.அதன் பிறகு வேலை தேடும் படலம் ஆரம்பமானது” என்கிற இவர்  பதிப்பகம் ஒன்றில் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் என்ன வேலை தெரியுமா? அச்சுக்குத் தேர்வாகாத படைப்புகளை சம்பந்தப்பட்ட நrowling bestபர்களுக்கு திருப்பி அனுப்பும் வேலை.

 

“1990-ம் வருடத்தின் கோடைகாலப் பொழுது அது. வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக அவசர அவசரமாக ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன். அன்று பார்த்து நான் போக வேண்டிய ரெயில் சற்று தாமதமாக வரும் என்கிற அறிவிப்பு வந்தது. பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த அந்த சமயத்தில் பொழுதைப் போக்குவதற்காக நானாக மனதில் ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். ஒரு சிறுவன் தனக்கு திடீரென்று மந்திர சக்தி வந்துவிட்டதை உணர்கிறான்.  அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள்,திருப்பங்கள் என்கிற ரீதியில் அந்தக் கதை எனக்குள் உருவானது. அதன்பிறகு டிரெயின் வந்ததும் கதையைப் பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் அந்த விதைதான் பிற்காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது” என்கிறார் இந்தப் படைப்பாளி.

rowling hero

அதன் பிறகு ரவ்லிங்கின் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிப்போனது. பாடுபட்டு வளர்த்த இவரின் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.அப்பா இல்லாமல் அம்மாவின் அருகாமையில் மட்டும் வளர்ந்த குழந்தைக்கு தாயின் இறப்பு என்பது துயரத்தின் உச்சம்!

 

அதன் பிறகு தனிமையைத் தவிர்க்க காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையும் சரிவராமல் போக, கணவரை விட்டுப் பிரிந்தார் ரவ்லிங். கையில் பச்சிளம் பெண் குழந்தை வேறு.

 

“என்னைப் போலவே என் குழந்தையும் தந்தை இல்லாமல் வளரப் போகிறாளே” என்கிற துன்பம் என்னை மிகவும் வாட்டியது. கையில் வேலை இல்லை. குழந்தையைப் பராமரிக்க காசு இல்லை. பசி, வறுமை, தனிமைத் துயர் எல்லாம் என்னை கடுமையான மனநோயாளியாக ஆக்கிவிட்டன” என்று சொல்லும் இவர் அதன் பிறகே தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார்.

 

“ஆனால் தற்கொலை முடிவை எடுத்துவிட்டேனே தவிர, ஒவ்வொரு முறையும் அதற்காக முயற்சி எடுக்கும்போதெல்லாம் என் பச்சிளம் குழந்தையின் முகம் என் நினைவுக்கு வந்து போகும். ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணங்களில் இருந்து மீண்டேன். வாழ முடிவெடுத்தேன். அரசாங்கம் கொடுத்த ஆதரவற்றவர்களுக்கான நிதியை வைத்துக்கொண்டு, குழந்தையை வளர்த்தபடி என் கனவுகளை நோக்கி ஓட ஆரம்பித்தேன்” என்கிற ரவ்லிங், அதன் பிறகே எழுத முடிவெடுத்தார். எழுதவும் தொடங்கினார். அதுவும் என்ன கதை தெரியுமா? முன்னொருமுறை ரயில்வே ஸ்டேஷனில் பாதியிலேயே விட்டாரே  அதே  மாயாஜாலக் கதையை…….

 

rowling 3

அந்தக் கதையின் நாயகனுக்கு ’ஹாரி பாட்டர்’ என்று பெயர் சூட்டி அந்தக் கதைக்கு “ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்” என்று பெயர் வைத்தார் ரவ்லிங். ஹாரி பாட்டர் என்கிற குழந்தைகளின் நேசத்துக்கு உரிய கதாபாத்திரம் இப்படித்தான் பூமிக்குள் காலடி எடுத்து வைத்தது.

 

 

“புத்தகத்தை எழுதிவிட்டேனே தவிர,அதை வெளியிட ரொம்பவே சிரமப்பட்டேன். பிரபல புத்தக நிறுவனங்களான பென்குயின், டிரேன்ஸ்வேல்ட், ஹார்பர் காலின்ஸ் போன்றவை  என் புத்தகத்தை நிராகரித்து விட்டன. இந்தக் காலத்தில் மந்திரக் கதையாவது, தந்திரக் கதையாவது! இதை எல்லாம் யார் படிப்பா? அதுவும் புது எழுத்தாளர் வேற…” என்று திரும்பிய பக்கமெல்லாம் நிராகரிப்புதான். ஆனால் நான் அந்த வலியை ஏற்றுக்கொள்ளப் பழகினேன்”

 

”தீவிரமாக மறுபடியும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.ஒரு வழியாக ப்ளூம்ஸ்பரி என்கிற புத்தக வெளியீட்டு நிறுவனம் என் கதையை புத்தகமாக்க சம்மதித்தது. ஆனால் ஒரு நிபந்தனையை விதித்தது. அதாவது,ஒரு பெண் எழுதிய கதையை ஆண் குழந்தைகள் விரும்பிப் படிக்க மாட்டார்கள். அதனால் இந்தப் புத்தகத்திற்கு உங்கள் பெயரைப் போட மாட்டோம். அதற்குப் பதில் உங்கள் இனிஷியலை பயன்படுத்துவோம்.அது உங்களுக்குச் சம்மதமா?” என்று என்னிடம்  அவர்கள் கேட்டார்கள். ஆணாதிக்கத்தின் உண்மை நிலை முகத்தில் அறைந்தாலும், நான்  அந்த நிபந்தனைக்கு சம்மதம் சொன்னேன்” என்று புன்னகைக்கிற இவரது முதல் ஹாரிபாட்டர் புத்தகம் இவரது இனிஷியலை மட்டும் சுமந்தபடி வெளிவந்தது.

 

ஆனால் புத்தகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, அந்தப் புத்தகம் பல பதிப்புகளாக வெளிவந்தது.அதுவும் எப்படி? ஜே.கே.ரவ்லிங் என்கிற பெயரை பெரிதாக  சுமந்தபடி.இந்த வெற்றிக்குப் பிறகு ரவ்லிங் தொட்டதெல்லாம் பொன்னானது. அதன் பிறகு ஹாரி பாட்டர் வரிசைக்  கதைகள் ஏழு பாகங்களாக வெளிவந்தன. அவை அனைத்தும் அதிரி புதிரி ஹிட் அடிக்க, காசு மேல காசு வந்து, இன்று பிரிட்டனின் பணக்காரப் பெண்களுள் ஒருவராக வளைய வருகிறார் ஜே.கே.ரவ்லிங்.

 

வாழ்க்கையில் என்னதான் பிரச்ச்சனைகள் இருந்தாலும் தனது விருப்பத்துறையில் துணிந்து இறங்குவோருக்கு, வாழ்க்கை பல அதிசயங்களை வைத்திருக்கும், அவை வாழ்க்கை நிலையையே மாற்றிவிடும் என்பதற்கு ரவ்லிங் ஒரு முன்னுதாரணம்.rowling signture

 

அதேபோல ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு மார்க்கெட்டில் தேவை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதில் தன் ஸ்மார்ட் வொர்க்கை காண்பிப்பது புத்திசாலித்தனம் என்று கிரியேடிவ் துறையில் இருப்பவர்களுக்கும் ஒரு நீதிக்கதை சொல்கிறார் ரவ்லிங். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் இவரது வாழ்க்கைநமக்கு  ஒரு எனர்ஜி பூஸ்டராக இருக்கும்.

-சு.கவிதா

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *