“அப்டேட் செய்யுங்கள்… இல்லையென்றால்  அவுட் டேட் ஆகி விடுவீர்கள்!” -கலைச்செல்வி.

“அப்டேட் செய்யுங்கள்… இல்லையென்றால்  அவுட் டேட் ஆகி விடுவீர்கள்!” -கலைச்செல்வி.

தென்காசியைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கலைச்செல்வி, தற்போது அபுதாபியில் வசிக்கிறார். அவருக்குள் இருக்கும் தொழில் முனைவுக் கனவு, அவரை இல்லத்திலிருந்து சுய தொழில் செய்யும் தொழில்முனைவோராக ஆக்கியிருக்கிறது. தரமான மசாலா பொருட்களை வீட்டிலிருந்தே தயாரித்து, விற்பனை செய்துவருகிறார். அவரிடம் ‘முனைவு’ உரையாடியது. அதிலிருந்து…

 

உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம்… 

என்னுடைய பெயர் கலைச்செல்வி. எனது ஊர் தென்காசி மாவட்டம் சிவகிரி என்ற கிராமம் . என்னுடைய அப்பா விவசாயி, அம்மா இல்லத்தரசி . அப்பாவோட சேர்ந்து அம்மாவும்  வயலை கவனித்து கொள்கிறார்கள். எனக்கு ஒரு தம்பி இருக்கார். அவரும் அபுதாபியில் வேலை பார்க்கிறார் .

நான் வேதிப்பொறியியல் பட்டதாரி. என்னுடைய கணவர் அபுதாபியில் பணி புரிகிறார் . இதற்கு முன் சென்னையில் வேலை செய்தார்.  இப்போது அபுதாபியில் பணி செய்கிறார். எனக்கு 3 ஆண் பிள்ளைகள். தற்போது அபுதாபியில் வசித்து வருகிறேன்.     

 இந்த தொழில் தொடங்க உங்களுக்கு தூண்டுதலாக இருந்தது எது?

தூண்டுகோல் என்று சொல்ல போனால் ….எனக்கு கல்யாணமான பிறகு, நான் வேலைக்கு போகல . இவ்வளவு படிச்சு வீட்டில் சும்மா இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தது . எனக்கு சின்னத்திலிருந்தே சொந்தத் தொழில் பண்ணனும் என்று ரொம்ப ஆசை.

நம்ம சுயமாக சம்பாதிக்கனும் . யாரையுமே நாம சார்ந்து இருக்க கூடாது என்று நான் மனதளவில் உறுதியாக உள்ளேன் . நிதானமாக ஆலோசித்து என்னுடைய வழியை நானே தான் கண்டுபிடிச்சேன்.

 என்னால இப்போதைக்கு இந்த தொழில் செய்ய முடியும் என்ற எண்ணம் வந்த உடனே இந்த தொழிலை ஆரம்பித்தேன் . இங்கே அபுதாபியில் நிறைய பேருக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்  தேவைப்பட்டது.

இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது அதனால் இந்த தொழிலை தைரியமாக செய்யத் தொடங்கினேன் . நானே தயாரித்து விற்க தொடங்கினேன்.  எனது கணவர் எனக்கு ஆதரவு தருகிறார்.  நான் தயாரிப்பதை எல்லாம் டெலிவரி செயவது அவர் தான் கவனித்து கொள்கிறார்.     

 உங்கள் தயாரிப்புக்குகளின் முதல் வாடிக்கையாளர்கள் யார் ?

அக்கம்பக்கத்தினர் தான் என்னுடைய வாடிக்கையாளர்கள் . என்னுடைய முதல் வாடிக்கையாளர் சுதா , அவங்க இங்க பக்கத்தில் தான் வசிக்கிறாங்க.. அவர்கள் தன்னுடைய குழந்தைக்காக சத்துமாவு கேட்டிருந்தார்கள். அப்படி நான் முதன் முதலாக தயாரித்தது சத்துமாவுதான். இப்பவும் அதுதான் அதிகமாக விற்பனையாகிறது. இதன் சுவைக்குக் கிடைத்த வெற்றி அது. எனது தயாரிப்புகளுக்கு  ?

எனக்கு தெரிந்தவர்கள், நட்புகள் வாடிக்கையாளர்கள் ஆனார்கள் , பிறகு அவர்களுடைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி இப்படியே இந்தச் சங்கிலி நீண்டு போய்க்கொண்டிருக்கிறது .   

  உங்கள் தயாரிப்புகளைப்பற்றிக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்.

நான் இப்போதைக்கு ஒரு 15 பொருட்கள் தயாரிக்கிறேன் . அதுல முக்கியமா எல்லாரும் கேட்டு வாங்கறது சிறுதானிய ஹெல்த் மிக்ஸ் பவுடர்தான்.

என்னுடைய தயாரிப்புகள் அனைத்தையுமே நானே சொந்தமாக  செய்கிறேன். அடுத்தடுத்து  அரிசி மாவு, கோதுமை மாவு, கொத்துமல்லிப் பொடி , மஞ்சள் தூள்… இந்த மாதிரி வீட்டுக்கு தேவையான பொருட்களைத் தயாரிச்சு  விற்க ஆரம்பிச்சேன் . ஆர்டர் கிடைத்த பிறகுதான் நான் தயாரிப்பில் இறங்குவேன்.  எப்படி வீட்டுக்காக செய்வோமோ, அப்படத்தான் நானே வாங்கி செய்வேன் . அதனாலதான் வாடிக்கையாளர்கள் என்னிடமே திரும்பத் திரும்ப வாங்கறாங்க .

என்னுடைய தயாரிப்புகளோட பிராண்ட் நேம் AAA Home- made Products (ட்ரிபிள் எ ஹோம் மேட் ப்ரொடக்ட்ஸ்) . என்னுடைய பிள்ளைகளுடைய பெயரின் முதல் எழுத்து – (அஜய் , அகிலன் , அமுதன்)  வைத்து தான் இந்தப் பெயரை உருவாக்கினேன். இந்த தயாரிப்புகள் செய்ய நான் எந்த வித சிறப்பு பயிற்சியும் எடுக்கல . நானே செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.

இந்த தொழிலில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ?

சவால்கள் என்றால் – டெலிவரி சரியான நேரத்தில் கொடுக்கணும் . நான் இப்போ பெரிய பிசினஸ் ஒன்னும் பண்ணல , இப்போது என்னுடைய கணவர் தான் பண்ணிட்டு வரார் . அவருக்கு ஆபீஸ் இருந்தாலும் இன்னைக்கு டெலிவரி பண்றோம்னு சொன்னா இன்னைக்கே பண்ணனும் இல்லைன்னா வாடிக்கையாளர் வாங்கமாட்டாங்க . டெலிவரி சரியா நடக்கலன்னு திரும்பவும் வாங்க தயங்குவாங்க . நேரத்துக்கு விநியோகிப்பது என்பது தான் நான் சந்திக்கிற பெரிய சவால் . 

அடுத்து ,இப்போ ஏகப்பட்ட பிராண்ட் இருக்கு. நமக்குன்னு ஒரு தனித்துவம் இருந்தா தான் நம்மகிட்ட வாங்குவாங்க , அதுக்கு நம்ம தயாரிப்பு புத்தம் புதிதா , தரமா , சுவையா இருக்கணும் . அதுக்கு நிறைய கவனம் செலுத்த வேண்டியிருக்கு . அதுமட்டுமில்லாம இன்னும் புத்தம் புதிதா என்ன செய்ய இருக்குன்னு யோசிக்கணும்..

 

 உங்கள் தயாரிப்புகளுக்கு  சிறப்பு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டா?

அதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் . முதல்ல கடை திறக்கணும். அதை செய்துட்டா அதுக்கான எல்லா சலுகைகளையும்  அபுதாபி அரசாங்கமே செய்து கொடுக்கும்.  பெண்கள் அவங்களுடைய சொந்த முயற்சியில  தொழில் செய்ய தவணை முறையில் கடனுதவி தர ரெடியா இருக்கறாங்க .  அலுவலக இடம்  கொடுக்கறாங்க. இலவச உரிமம், விசா போன்ற நிறைய சலுகைகள் கொடுக்கறாங்க. சீக்கிரமா இவையெல்லாம்  கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுட்டுக் கொண்டிருக்கிறேன். .

  

அபுதாபி மக்கள் இந்திய உணவுகளை வரவேற்கிறார்களா ?

அபுதாபியில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் . அவங்களுக்கு இந்திய உணவு தேவைப்படுகிறது . அவங்கள இலக்காக வெச்சுத்தான் தரமான பொருட்களை  நான் தயாரிச்சு கொடுக்க முயற்சி செஞ்சிட்டிருக்கேன். இந்தியர் அல்லாத அபுதாபி மக்களுக்கு இப்பொருட்களை அறிமுகம் செய்யத் திட்டம் இருக்கு. 

 

புதிய தொழில்முனைவோருக்கும் இல்லத்தரசிகளுக்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

தொழில் முனைவோர் கண்டிப்பா புதுசு புதுசா எப்படி தொழிலை மேம்படுத்த முடியும்னு யோசிக்கணும் . என்ன செஞ்சா மக்கள் அதிகமா நம்ம தயாரிப்புகளை வாங்குவாங்கன்னு சிந்திச்சு அப்டேட் செய்யணும்.  இப்ப உள்ள டிரென்டுக்கு ஏத்த மாதிரி நம்முடைய தயாரிப்புகளில் சின்ன மாற்றம் கொண்டு வரணும் . நம்மளையே விளம்பரப்படுத்திக்கணும் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருக்குன்னு நம்முடைய விளம்பரம் பல தரப்பட்ட மக்களை சென்றடையணும் . 

இல்லத்தரசிகள் வீட்டிலேயே அடைஞ்சு இருக்காம, வீட்டுலேயே இருந்து நமக்கான ஒரு வருமானத்த உருவாக்கணும் . நமக்கு வாய்ப்பே இல்ல அப்படின்னு நினைக்க கூடாது. ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்கணும்.

சின்னதா ஏதாவது ஒரு தொழில் செய்ய ஆரம்பிக்கலாம் ,நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போடாம அத இன்னைக்கென்னு ஆரம்பிசீங்கன்னா அந்த வெற்றி சீக்கிரமே கிடைக்க வாய்ப்பு உண்டு. 

பெண்கள்  சின்ன வயசா இருந்தாலும் சரி, ஐம்பது வயதை தாண்டினாலும் சரி,  அவங்களே சுய சம்பாதிக்கும் பொழுது கிடைக்கிற சந்தோஷம், மரியாதை- மதிப்பு எல்லாமே வேறதான்.   

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *