சோறு முக்கியம் பாஸ்!

சோறு முக்கியம் பாஸ்!

நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டிய சூழலில் இருப்பவர்கள் தொழில் முனைவோர். அதனால் பெரும்பாலும் சாப்பாட்டில் கவனமின்றி இருக்க நேரிடும். ஆனால் சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுதமுடியும்? அதனால் முடிந்தவரை உணவில் கவனம் வையுங்கள்.இதோ உங்களுக்கான உணவு ஆலோசனைகள்…

மூன்று வேளை உணவு என்பது உங்களுக்கும் பொருந்தும். அதனால் ஒருபோதும் காலை உணவைத் தவிர்த்திடாதீர்கள். அதுவும் பொங்கல்,பூரி என்று செரிமானம் ஆவதற்குத் தாமதமாகும் உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடாமல் இட்லி, கொழுக்கட்டை, காய்கறிகள் சேர்த்த அரிசி உப்புமா போன்ற வேகவைத்த உணவுகளுக்கு முதலிடம் கொடுங்கள்.

சொந்தமாகத் தொழில் செய்பவர்களில் பெரும்பான்மையானோர் மதிய உணவை மூன்றுமணி அளவில்தான் சாப்பிடுகிறார்கள். அதைப்பற்றி மிகவும் பெருமையாகவும் பேசிக்கொள்வார்கள். ஆனால் இது மிக மிகத் தவறான உணவுப் பழக்கம். சுமார் ஒருமணி அளவில் மதிய உணவை சாப்பிடவேண்டும் என்பதை வழக்கமாக்குங்கள்.

குறிப்பாக மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் காபி, தேநீர் அருந்தாதீர்கள்.பசி மந்தமாகிவிடும். அதேபோல நன்கு பசிக்கும்பொழுது பப்ஸ், வடை, சமோசா போன்ற எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது கூடவே கூடாது. சாப்பிடக்கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம்?

 

காபி,தேநீர் குறித்து  இன்னுமொரு முக்கியமான தகவலை சொல்லியாகவேண்டும்.

மிகவும் கோபமாக பதற்றமான, குழப்பமான மனநிலையில் இருக்கும் போது காபி அல்லது தேநீர் குடித்து மனதை இதமாக்கிக்கொள்ள  தொழில் முனைவோர்  பலரும் விரும்புகிறார்கள்.

புகைப்பது எவ்வளவு தீங்கான பழக்கமோ அப்படித்தான் அடிக்கடி காபி,தேநீர் அருந்துவதும்.

அதனால் பச்சைத் தேநீர்(கிரீன் டீ),செயற்கை பொருட்கள்  சேர்க்கப்படாத பழச்சாறு, இளநீர் என்று காபி, தேநீருக்கு மாற்றாக ஆரோக்கிய பானங்களை அருந்தப் பழகுங்கள்.  கொஞ்சம் முயன்றால் காபி மோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுவிடலாம்.

தொழில்முனைவோர் உணவகங்களில் சென்றுதான் உணவு சாப்பிடவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர மற்றபடி தினமும் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டுவந்து விடுங்கள். இதில் எந்தவித வெட்கமும் கொள்ளாதீர்கள். வயிற்றுக்குத் கேடு தராத உணவு அதுமட்டுமே என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அதேபோல தொழில்முனைவோர் பலரும்  தங்களது தொழில்  சார்ந்த சந்திப்புகளை பிட்ஸா கடைகளிலும் பகட்டான காபி கடைகளிலும் வைத்துக்கொள்கின்றனர்.

செலவுக்கு செலவும் ஆகும். அதுமட்டுமல்ல, உடல்நலமும் கெட்டுப் போகும். இப்போதெல்லாம் சிறுதானிய உணவுகள் மற்றும் மூலிகை பானங்களை விற்கும் உணவகங்கள் பெருகிவிட்டன.

அதுபோன்ற கடைகளில் உங்கள் சந்திப்புகளை வைத்துக்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்காத சுக்கு மல்லிக் காபியையும் சிறுதானிய வடையையும் சுவைத்தபடி உங்கள் தொழில் பேச்சுக்களைத் தொடரலாம்.

மாலை நேரத்தில் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே பசிப்பதுபோல இருக்கிறதா? பக்கத்தில் இருக்கும் தேநீர்க் கடையில் எண்ணெயில் குளித்திருக்கும் பஜ்ஜியை வாங்கிச் சாப்பிடுவதை முடிந்த அளவுக்குக் குறையுங்கள்.

சிறுதானிய நொறுக்குத் தீனிகள், கடலை, எள் மிட்டாய் போன்றவற்றை அலுவலகத்திலேயே அவ்வப்போது வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் வயிறை ஆரோக்கியக் குறைவு ஆகாமல் பாதுகாக்கலாம்.

அதேபோல இரவு உணவை பதினோரு மணிக்கும் பன்னிரெண்டு மணிக்கும் சாப்பிடக் கூடாது. பட்டர் நான், பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன், மட்டன்  என்று மசாலா உணவுகளை வகைதொகை இல்லாமல் இரவில் சாப்பிட்டுவிட்டு அதை செரிக்கக்கூட விடாமல் உடனே படுக்கச் செல்வது போன்ற பழக்கங்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.

எளிதில் செரிக்கும் உணவுகளை எட்டு மணிக்குள் சாப்பிடுங்கள். தூங்குவதற்குள் நீங்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான பாலை அருந்திப் படுக்கச் செல்லுங்கள்.

கடைசியாக ஒன்று…. “மிகவும் பரபரப்பானவாழ்க்கைச் சூழல் எங்களுடையது. இப்படியெல்லாம் எங்களால் உணவு விஷயத்தில் பார்த்துப் பார்த்து செயல்பட முடியாது” என்று சொல்லி இந்தக் கட்டுரையைக் கடந்துபோய் விடாதீர்கள். உங்கள் உடல், நலத்துடன் இருந்தால் மட்டுமே உங்களால் தொடர்ந்து உங்கள் தொழிலில் சிறப்பாக இயங்கமுடியும். அதனால் உணவில் ஒருபோதும் அலட்சியம் காட்டாதீர்கள்.

சுவரை வைத்துத்தான் சித்திரம்!

-திருமாமகள்.

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *