சொந்தத்தொழில்: சாதகமும் பாதகமும்

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல எந்த ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தும்பொழுதும் அதில் நல்லவையும் இருக்கும். சில சிக்கல்களும் இருக்கும்.

 

 

இந்த இரண்டையும் பற்றிப் பேசுகிறது இந்தக் கட்டுரை.

 

தொழில் தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

‘மாத சம்பளத்தில் எனக்கு விருப்பம் இல்லை,பெரும்பணம் சம்பாத்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெருவிருப்பம்’ என்று நினைக்கும் தொழில்முனைவோர் எண்ணிய இலக்கை அடைய தொழில் கைகொடுக்கும்.

entrepreneur-2904772_640

அதுமட்டுமல்ல, நமக்குப் பிடித்த வேலையை  தொழிலாக  நாம் செய்கிறோம் என்பதே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வுதான். எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட  நல்வாய்ப்பு கிடைத்துவிடும் சொல்லுங்கள்!

 

தலைமைப் பொறுப்பில் அமர்ந்து செயல்படும் வாய்ப்பு தொழில் முனை வோருக்குக் கிடைக்கும். அதனால் தொழில்சார்ந்த பண்பட்ட அறிவு கிடைக்கும். முடிவெடுக்கும் வாய்ப்பும் கிடைப்பதால் தொழில்முனைவோர் வெற்றி- தொல்வியைப் பற்றிய பயம் இல்லாமல் துணிந்து செயல்படும் மனோபாவத்தைப் பெறுகிறார்கள்.

 

செக்குமாடு போல யாரோ போட்டு வைத்த பாதையில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தொழில் சார்ந்த புது முயற்சிகளையும் திட்டங்களையும் துணிந்து முன்னெடுக்கலாம்.

 

எடுத்த முயற்சியில் வெற்றி கிடைத்தாலும் சரி, அல்லது தோல்வி கிடைத்தாலும் சரி,அதற்கான முழுப்பொறுப்பும் நம்முடையது என்று வரும்பொழுது, அது இனம்புரியாத ஒரு பெருமித உணர்வைக் கொடுக்கும்.

 

உங்கள் தொழில் வெற்றிப்பாதையை நோக்கிப் போகும் பட்சத்தில் தொடர்ந்து நீடித்துச் செயல்படும் பட்சத்தில் அந்தத் தொழில் தலைமுறையைத் தாண்டியும் பயணப்படும். உங்கள் நிறுவனம் பேரும் புகழும் அடையும். இதன்காரணமாக பலர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இந்தத் தொழிலின் நிறுவனர் என்கிற முறையில் நீங்களும் உச்சம் தொடுவீர்கள்.

 

 என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்?

தொழில் சார்ந்த முதலீடுகளுக்காக பெரும்தொகை ஒன்றைப் போடவேண்டியிருக்கும். போட்ட பணம் கையில் இருமடங்காக வந்துவிடும் என்றெல்லாம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. சிலசமயங்களில் முதலுக்கே கூட மோசம் ஏற்படலாம்.

 

வேலையில் இருந்தால் காலையில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம். ஆனால் தொழிலில் அப்படி கணக்குப்பார்த்து வேலை செய்ய முடியாது. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

 

குழந்தையின் பிறந்தநாளைத் தவறவிடும் சூழ்நிலை உண்டாகும். நெருங்கிய உறவுகளின்,நண்பர்களின் நல்லது கெட்டதில் கூட கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை வரலாம்.

 

அதுமட்டுமல்ல, உங்களைக் கவனித்துக்கொள்ளக் கூட உங்களுக்கு நேரம் கிடைக்காமல் போகலாம். அப்படியே உங்களுக்கான நேரத்தை நீங்கள் கண்டெடுத்தால் கூட அந்த சமயம்பார்த்து வேறு முக்கியமான அழைப்புகள் வந்து உங்கள் கவனத்தை தொழில்பக்கம் திருப்பி விடும்.

 

people-1320090_640

குறிப்பாக தொழில்முனைவோருக்கு வருமானம் நிலையாக இருக்காது. ஒரு சமயம் நன்றாக வரும். ஒருசமயம் சுத்தமாக காசையே கண்ணில் பார்க்கமுடியாது.

 

அதிலும் சம்சாரியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை கடும்சிக்கலைக் கொடுத்துவிடும்.

 

வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது  காட்டிய  ஈடுபாட்டைவிட தொழிலில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். இருநூறு விழுக்காடு உழைப்பை நீங்கள் கொடுக்கவேண்டும். இதுபோன்ற சமயங்களில் மனஅழுத்தம் போன்ற பிரச்னைகள்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

ஆனால் இந்த சோதனைகளை சாதனைகளாக்க வேண்டும் என்று நீங்கள் துணிந்துவிட்டால் வாழ்க்கை உங்கள் வசமாகும். உங்கள் வாழ்நாளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முடியும். உங்களால் பலருக்கு பொருளாதார உயர்வும் கிடைக்கும்.

-சு.கவிதா.    

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *