வால்மார்ட் கையில் பிளிப்கார்ட்! -என்னவாகும் சில்லறை வணிகம்?

 

“வால்மார்ட் ஃப்ளிப்கார்ட்டை வாங்கிருச்சாமே…?”

 

தொழில் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி இதுதான். ஆமாம். சில்லறை வர்த்தகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வாங்கியுள்ளது.

 

பிளிப்கார்ட் நிறுவனத்தின் எழுபத்தியேழு  விழுக்காடு பங்குகளை பதினாறு பில்லியன் டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.07 லட்சம் கோடிக்கு வாங்கியிருக்கிறது வால்மார்ட் நிறுவனம்.

 

walmart-logo-promo

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக  ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நட்டத்தில் இயங்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 

இந்த இணைப்பின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில்  மிக முக்கியமான  இடத்தை வால்மார்ட் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்திய அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தொழில்நிறுவனத்திற்கு உலக அளவில் கிடைத்த ஒரு மரியாதை இது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

 

’இதுபோல பெரிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் உள்ளே நுழையும்போது உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கும். உள்ளூரில் விளையும் தயாராகும் பொருட்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்’ என்றெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் நிபுணர்களால் சிந்தப்படுகின்றன.

 

இது ஒருபக்கம் என்றால் தங்களுடைய பங்குகளை விற்றதன் மூலமாக ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் பெரும்பணத்தை பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள்  என்றும் செய்திகள் வருகின்றன.

 

shopping-2615482_640 (2)

எல்லாம் சரி….ஆனால் எந்தப் பெரிய தொழில்நிறுவனங்களைக் கண்டும் அஞ்சாமல் ஃப்ளிப்கார்ட் என்கிற நிறுவனத்தை ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனமாக பதினோரு வருடங்களுக்கு முன்பு தில்லாக ஆரம்பித்து உழைத்து முன்னேறி…

 

ஒரு பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இதை மாற்ற சச்சின் பன்சால்,பின்னி பன்சால் ஆகிய இரண்டு பெறும் எத்தகைய கடின உழைப்பை,அறிவுத்திறனைக் கொட்டியிருப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்பொழுது பிளிப்கார்ட் வால்மார்ட்டோடு இணைந்ததை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் மற்றொரு சாரார்.

 

ஏனென்றால் ஆன்லைன் வர்த்தகம் என்பதை இந்தியர்கள் அவ்வளவாக அறியாத காலகட்டம் அது. வாங்க விரும்பிய ஒரு பொருளுக்காக கடை கடையாய் ஏறி,இறங்கி  கண்ணால் பார்த்து,தொட்டு, உணர்ந்து அதன் பிறகே அந்தப் பொருளை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தவர்கள்  நாம். அப்படி இருக்கையில் ஆன்லைன் வர்த்தகத்தை தங்களின் முழுநேரத் தொழிலாக மேற்கொள்ள இவர்கள் இருவருக்கும் அந்த நேரத்தில் எவ்வளவு துணிச்சல் தேவைப்பட்டிருக்கும் பாருங்கள்?

 

பிளிப்கார்ட் நிறுவனத்தை ஆரம்பித்த சச்சினும்,பன்சாலும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் படித்த மாணவர்கள். அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றுமொரு பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்த்தவர்கள்.

 

மற்றவர்களிடம் சம்பளத்திற்கு இருப்பதைவிட நாமே ஏன் தொழில்முனைவோராக மாறக்கூடாது என்று நினைத்து 2007-ல் இவர்கள் இருவரும் பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்தார்கள்.

 

உங்களுக்கு ஒன்று தெரியுமா?ஆரம்பத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைனில் புத்தகங்களை மட்டும்தான் விற்பனை செய்துவந்தது.

 

அதன்பிறகுதான் மெல்ல மெல்ல மற்ற பொருட்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தது. நுகர்வோரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக நம் இந்திய ஆன்லைன்  வர்த்தகத்தில் “கேஷ்-ஆன்-டெலிவரி” என்கிற திட்டத்தைக் கொண்டுவந்ததும் இவர்கள்தான்.

 

தங்களுடைய வளர்ச்சியின் உச்சமாக மிந்த்ரா மாதிரியான ஸ்டார்ட்-அப் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.

 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு உயரத்தைத் தொட்ட  இந்த நிறுவனத்தை அந்நிய நிறுவனமான வால்மார்ட் வாங்கியது சொந்தக் காலில் நிற்க விரும்பும் இந்திய சில்லறை வணிகத் தொழில்முனைவோரின் நம்பிக்கையின் மீது விழுந்த அடியாகவே கருதப்படுகிறது.

 

ஏனென்றால் பிளிப்கார்ட்டில் சுமார் நூறு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் இருக்கிறார்கள். வால்மார்ட்டின் கையில் ஃப்ளிப்கார்ட்  சென்றுவிட்டதால் ஃப்ளிப்கார்ட் பயனாளிகளின் தேவைகள் அனைத்தையும் வால்மார்ட் அறிந்துகொண்டுவிடும்.

 

flipkart

அதற்கு ஏற்ப வால்மார்ட் தனது சில்லறை வணிகத்தை இந்தியாவில் இன்னும் இன்னும் பெரிய அளவிற்கு விஸ்தாரப்படுத்தும்.

 

ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையும் வால்மார்ட் தன்னுடைய கைகளில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

 

இதன் காரணமாக இந்தியாவில் இயங்கிவரும் ஸ்டார்ட்-அப் சில்லறை வணிகங்களுக்கு பெரிய அடி விழும்.

 

அதுமட்டுமல்ல, நம் இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தை ஒரே ஒரு பெரிய அந்நிய நிறுவனம் தீர்மானிக்கின்ற சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புகளும் என்றும் மற்றொரு சாரார் கவலையுடன் தங்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள்.

 

உண்மைதான். நம்முடைய பொருளாதாரத்தை நாம்தானே தீர்மானிக்க வேண்டும்?

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *