இடைவிடாது செல்மின்!

இடைவிடாது செல்மின்!

ஒரு தொழிலின் வெற்றி என்பது எதில் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? வாடிக்கையாளர் உறவில்?

வரவு செலவுக் கணக்குகளில்?

ரொக்கக் கையிருப்பில்?

விரிவாக்கத்திட்டங்களில்? …………….

இவை எதுவுமே விடையன்று. ஒரு தொழிலின் வெற்றி என்பது அதனை நடத்தும் தொழில் முனைவோரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கையில் இருக்கிறது. அதில் எப்போது வீழ்ச்சி வருகிறதோ, அப்போது தொழில் சுணங்கத் தொடங்கும்.

எப்போது தன்னம்பிக்கை தொடர்கிறதோ, அப்போது தொழிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். எப்போது தன்னம்பிக்கை பீறிட்டுக் கிளம்புகிறதோ, அப்போது புதிய புதிய யோசனைகள் பிறக்கும். ஏற்கனவே நடக்கும் தொழிலில் புதுமைகல் உதிக்கும். விரிவாக்கம் நடக்கும்.

ஆக, எந்த வகையில் பார்த்தாலும் தொழில் முனைவோரின் ‘தன்னம்பிக்கை’ தொழிலின் ஜீவநாடியாக செயல்படுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். இதனை வளர்க்க என்ன செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தொழில் முனைவோர் பலரும் ’வெற்றிபெற்ற’ தொழில் முனைவோரின் ‘கதைகளை’ப் படிப்பதன்மூலம் தன்னம்பிக்கையைப் பெற்றுவிட முடியும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அது மட்டும் போதாது. வெற்றிபெற்ற தொழில் முனைவோருக்கு, அவரது வெற்றிக்கு அகக்காரணிகள் மட்டுமே துணை புரிந்திருக்காது.

மாறாக, அவரது வயது, திருமண நிலை, பொருளாதாரப் பின்புலம், அன்றைய தொழில் மற்றும் சமூக சூழல், அவரது துறையின் அன்றைய போக்கு, நிதி திரட்டலில் அன்றைக்கு இருந்த சாதகமான/பாதகமான சூழல், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு, நண்பர்களின் உதவி, சுய கல்வி என்று பல விஷயங்களும் அதில் கணிசமான பங்காற்றியிருக்கும்.

எனவே, வெற்றிக்கதைகளைப் படிக்கும்போது அவற்றைக் காலத்தோடும், அன்றைய புறக்காரணிகளோடும் சேர்த்தே உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அவற்றோடு தன்னம்பிக்கை சேரும்போது வெற்றி வாய்க்கிறது என்று தெளிந்துவிடவேண்டும்.

அந்த வெற்றிக்கதையை நம்மோடு பொருத்திப்பார்க்க வேண்டும். எந்த சூழலில் தன்னம்பிக்கை, அந்தத் தொழில் முனைவோரைக் காப்பாற்றியது என்று கண்டறிந்து அதிலிருந்து நீதியைப்பெற வேண்டும். நமது விஷயத்தில் அது எப்படி, எங்கு பயன்படும் என்று ஆராய வேண்டும்.

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தொழிலில் லாப நட்டம், வெற்றி தோல்வி எல்லாமே இயல்பு. ஆனால் அவற்றைக்கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் இயங்கும்போது வெற்றி சாத்தியமாகிவிடுகிறது. விடா முயற்சிக்கு சோதனை வரும்போதெல்லாம் தன்னம்பிக்கை உங்களைக் காப்பாற்றிடுவிடும்.

“வெற்றியாளர்கள் சிறப்பானவற்றைச் செய்வதில்லை. எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கின்றனர்’ என்ற ஷிவ் கெராவின் புகழ்பெற்ற வாக்கு இங்கு நினைவுகூரத்தக்கது. செய்வனவற்றை சிறப்பாகச் செய்ய வேண்டும்; அவற்றைத்தொடர்ந்து செய்ய வேண்டும்; தற்காலிகப்பின்னடைவுகளைக் கண்டுகொள்ளாமல் விடா முயற்சியுடன் போராட வேண்டும். அதற்கு தன்னம்பிக்கைதான் அடித்தளம்.

தூரிகை.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *