அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தொழில் முனைவோருக்கு சாதகமா?

தமிழகத்தை அடுத்து ஆளப்போகிறவர் யார் என்பதே இன்று மாநிலம் முழுவதும் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

 

இதுவரை இல்லாத வகையில் தமிழக சட்டசபைத்தேர்தல் பன்முனைபோட்டியைச் சந்திக்கிறது. அதனால்தான் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. எனவே, ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் இன்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

 

ஊரே இதைப்பேசிக்கொண்டிருக்கும்போது நாம் சும்மா இருக்கலாமா? அரசியலை விடுங்கள், தொழில் முனைவோருக்கும் சிறுதொழில் துறைக்கும் தமிழக அரசியல் கட்சிகள் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று பார்போமா!

இன்று..

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை!

 

அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள்:

 

*முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியம்

 

*ரூ.5 லட்சம் வரையிலான தொழில் தொடங்குவோருக்கு 25% மானியம் தொடரும்.

manifest 3

*புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.

 

*தனியார் துறை அமைப்புகள், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்களை (cluster) அமைத்தால் 10 கோடி அளவுக்கு 50% மானியம் அளிக்கப்படும்.

 

*சிட்கோ எனப்படும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தனியார் தொழிற்பேட்டைகளை நிறுவினால் 10% வரை மூலதனம் வழங்கப்படும்.

 

*அம்மா ஈடு உத்தரவாத நிதியம் (Amma Collateral Gurantee Fund) ரூ.100 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிணையமின்றிக் கடன் பெற முடியும்.

 

*முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடங்குவோருக்கு உதவ ரூ.500 கோடியில் ’அம்மா துணிகர முதலீட்டு நிறுவனம்’ ஏற்படுத்தப்படும்.

 

*அரசு மற்றும் அரசுத்துறைகளுக்கு செய்யப்படும் கொள்முதல்களில் 20% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படும்.

 

*ஊரகப்பகுதி குறுந்தொழில் முனைவோருக்கு தனி நிதியம்( funding agency) உருவாக்கப்படும்.

 

*குறுந்தொழில் முனைவோருக்கு விலையின்றி தொழிற்கூடங்கள் வழங்கப்படும்.

 

மேலே கண்டவை எல்லாம் பொதுவான வாக்குறுதிகள். சிறப்புப் பிரிவினருக்கு தொழில் தொடங்க உதவும் வகையில் தனியே வாக்குறுதிகளை அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தனியாகத் தந்திருக்கிறது.  அவை இங்கே:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு தாட்கோ மூலம் 30% மானியத்தில் கடனுதவி வழங்கப்படும். இவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்க மாவட்டம்தோறும் தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.

 

*சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில் மனைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20% ஒதுக்கீடு.
*இப்பிரிவுகளைச்சேர்ந்த தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

 

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு உதவ தனியாக துணிகர முதலீட்டு நிறுவனம் தொடங்கப்படும்.

 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்ன்(டாப்செட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும்.

சிறுபான்மையினர்:

*இப்பிரிவைச்சேர்ந்தவர்கள் தொழில் தொடங்கினால் அவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவது தொடரும்.

 

முனைவின் அலசல்:

 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை புதிய தொழில்முனைவோரை நன்றாகவே மனதில் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. உலகம் முழுவதும் துணிகர முதலீடு, ஸ்டார்ட் அப் என்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் பின் தங்கிவிடக்கூடாது என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு வந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.

 

அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நட்சத்திர அறிவிப்புகள் என்றால் அவை அம்மா துணிகர முதலீட்டு நிறுவனம் மற்றும் கடன் உத்தரவாத நிதியத்தை உருவாக்குவது (credit guarantee fund) ஆகியவைதான்.

 

* இன்று தேசிய அளவில் பல்வேறு துணிகர முதலீட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் இயங்கிவந்தபோதிலும் தமிழ் தொழில்முனைவோரால் இந்த வசதிகளை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை.

 

காரணம், மொழி ஒரு தடையாக இருக்கிறது. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த துணிகர முதலீட்டு நிறுவனம் என்று சொல்லும்வகையில் சில நிறுவனங்கள்கூட இல்லை. டிவிஎஸ்-ஸ்ரீராம் நிறுவனங்கள் இணைந்து ஒரு நிதியத்தை (private equity fund) நடத்துகின்றன. அதுதவிmanifest 2ர சென்னை ஏஞ்செல் நெட்வொர்க் என்ற அமைப்பு இயங்குகிறது. தனிநபர் முதலீட்டாளர்கள் பலர் அதில் இருக்கிறார்கள்.

 

இவ்விரு அமைப்புகளையும் கழித்துவிட்டுப்பார்த்தால் துணிகர முதலீட்டு நிறுவனம் என்று பெரிதாக ஏதுமில்லை. மும்பை, பெங்களூருவில் இதுபோன்ற நிறுவனங்கள் அதிகம். அவர்களைத்தான் தமிழக தொழில்முனைவோர் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. பெரிய அளவில் இதுகுறித்து விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை.

 

ஆனால், தமிழக அரசு ஒரு துணிகர முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்குமேயானால் அதுகுறித்து விரிவான அளவில் விளம்பரம் செய்யப்படும். மாவட்டங்களில் உள்ளவர்கள்கூட தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தொழில் தொடங்க இது ஏதுவாக அமையும்.  நகர்மயமாதல் குறையும். அந்த வகையில் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க அறிவித்துள்ள ‘அம்மா துணிகர முதலீட்டு நிறுவன’ அறிவிப்பை முனைவு, இரு கரம் நீட்டி வரவேற்கிறது.

 

*அதேபோல பிணையம் தர முடியாததால் தொழில்முனைவோர் பலராலும் சொந்த தொழில் தொடங்க வங்கிக்கடன் பெற முடிவதில்லை. இந்த பிரச்சனையைக் களைவதற்காகவே மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் உத்தரவாத நிதியம் ஒன்றை உருவாக்கியது. இதன் நோக்கம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுறுதி உத்தரவாதம் அளிப்பதுதான்.

அந்த உத்தரவாதத்தின்பேரில் வங்கிகள் கடன் வழங்கும். நல்ல திட்டமாக இருந்தாலும் இது பெரிய அளவுக்கு செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில அரசே தனியாக ஒரு கடன் உத்தரவாத நிறுவனத்தைத் தொடங்குவது மிகச் சரியான முடிவு. முனைவு, இந்த அறிவிப்பை வரவேற்கிறது.

* அதேபோல ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிராமப்புற தொழில்முனைவோருக்கு தனித்தனியாக துணிகர முதலீட்டு நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் அதேபோல் வரவேற்க வேண்டிய விஷயமே!

*முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் 25% மானியம் தொடரும் என்ற அறிவிப்பு கவர்ச்சிகரமாக இல்லை.புதிய திட்டங்கள்தான் வாக்காளரைக் கவரும். பழையது தொடரும் என்பது அவ்வளவாகக் கவராது.

*தொழிற்பேட்டைகள் தொடங்குவது, தொழில் மனைகள் ஒதுக்குவது ஆகியவை குறித்து மூன்று இடங்களுக்குமேல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகள் பலவும் சரியான பராமரிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படப்படவில்லை.

இப்போது உற்பத்தி நிறுவனங்களைக்காட்டிலும் சேவைத்தொழில் நிறுவனங்களையே புதிய தொழில் முனைவோர் தொடங்குகின்றனர். அவர்களுக்கு சிறிய அளவில் அலுவலகம் போதும். பல லட்சங்கள் கொடுத்து தொழிற்பேட்டையில் கட்டடங்கள், மனைகளை வாங்குவது அவர்களுக்கு இயலாத காரியம். இதற்கு தீர்வு ஏதும் அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

 

குறுந்தொழில் முனைவோருக்கு விலையின்றி தொழிற்கூடங்கள் வழங்கப்படும் என்பது நல்ல அறிவிப்பு. ஆனால் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டை விஷயத்தில் தங்களது நிலைபாடு என்ன என்று குறிப்பிட்டிருக்கலாம்.

 

* அரசு மற்றும் அரசுத்துறைகளுக்கு செய்யப்படும் கொள்முதல்களில் 20% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுஏற்கனவே  சிறு, குறு, நடுத்தர நிறுவன சட்டம்-2006ன் படியும் மத்திய அரசின் தொழிற்கொள்கையின்படியும் அமலில் உள்ள விஷயம்தான். ஆனால் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை என்பதே வேதனையான யதார்த்தம்.

 

அரசு டெண்டர்களிலும் சிறுதொழில் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. தேவையற்ற நடைமுறைகள், முறைகேடுகளால் நியாயமான தயாரிப்பாளர்களுக்கு அரசு கொள்முதலில் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.

 

இதைத்தவிர்க்க ரூ.1 கோடி வரையிலான கொள்முதலுக்கு இ-டெண்டர் கட்டாயம் என்பதுபோன்ற நடைமுறைகள் தேவை
. தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனைச் சரிசெய்வதுகுறித்து இந்த தேர்தல் அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.manifest 1

 

* பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழ்கம், தாட்கோ ஆகியவை மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழிற்கடனுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வமைப்புகள் பொருளாதார மேம்பாட்டு கடனுதவிகளை வழங்கிவருகின்றன. எனவே இது புதிய விஷயமல்ல. அதற்கு பதிலாக இவ்வமைப்புகள் மூலம், கடனுதவி செய்யப்படும் தொகை, பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கலாம்.

 

* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் தொழில் தொடங்க உதவும் வகையில் தொழில்நுட்ப உதவிகள் வழங்க மாவட்டம்தோறும் தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்ற அறிவிப்பு மிகவும் தேவையான ஒன்று. தொழில்நுட்பத்துக்காகத்தான் அதிக செலவை தொழில்முனைவோர் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அறிவிப்பு இது. மேலும் இவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்ற அம்சமும் சிறப்பானதே! தேவையானதே!

 

* தனியார் துறை அமைப்புகள், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்களை (cluster) அமைத்தால் 10 கோடி அளவுக்கு 50% மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு பரவாயில்லை ரகம்.

 

இதுபோன்ற பணிகளில் தனியார் பெரிய அளவுக்கு ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை. அதற்கு பதிலாக சிட்பி, டிஐஐசி, சிறுதொழில் துறை ஆகியவற்றின்மூலம் தொழிற்குழுமங்களை உருவாக்கும் பணியில் அரசே ஈடுபடலாம்.

 

மொத்தத்தில்…

*கொஞ்சம் புதுமையான, தேவையான அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. வழங்கியிருக்கிறது.புதிய தொழில்முனைவோரை இவை கவரும்.

*வழக்கமான திட்டங்களைச் சீர்படுத்த சிறப்புத்திட்டங்கள், நடைமுறைகள் ஏதுமில்லை. ஏற்கனவே தொழில் செய்துகொண்டிருப்போர் அதனைக் கவனிக்கவே செய்வர்கள். தொழில்முனைவோரைத் துன்புறுத்தும் சிவப்பு நாடா முறை, லஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

(அடுத்து: தி.மு.க. தேர்தல் அறிக்கை)

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *