புதுத் தொழில் முனைவோர் செய்யவே கூடாத 10 முக்கியத் தவறுகள்

புதுத் தொழில் முனைவோர் செய்யவே கூடாத 10 முக்கியத் தவறுகள்

1.தொழிலில் முன்னேற பொறுமை முக்கியம்தான். ஆனால் சோம்பேறித்தனம் கூடவே கூடாது.

காசு கிடைக்கும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை மேல் எழுப்பலாம் என்று சில வீடு கட்டுகிறவர்கள் இருப்பார்கள் இல்லையா?

 

அதுபோல தொழிலில் நினைத்தபோது இயங்கும் குணம் இருக்கவே கூடாது. தொடர்ந்து சீராகவும் அதேசமயம் தீவிரமாகவும் இயங்கினால் மட்டுமே வெற்றியைத் தொட முடியும்.

 

2.வெறுமனே ஊழியர்களை மட்டும் நியமித்துவிட்டு அவர்கள் செய்யும் வேலை குறித்த எந்தப் பட்டறிவும் இல்லாமல் இருப்பது தொழில் சிறக்க உதவாது.

உங்கள் தொழில் சார்ந்த கடைக்கோடி வேலை வரை உங்களுக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்களா என்பதனை உங்களால் சரியாக கவனிக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.

3.தொழிலையும் உணர்வுகளையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இந்தத் தொழிலில் நமக்கு வெற்றி கிடைக்க என்னசெய்யவேண்டும் என்பதைக் குறித்து மட்டும் யோசியுங்கள். அதே சமயம் நேர்மையைக் கைகொள்ள மட்டும் மறந்துவிடாதீர்கள்.

 

4.நீங்கள் விரும்பும் வண்ணம் ஒரு தொழிலை கொண்டுபோவது என்பதெல்லாம் வேலைக்கு ஒத்துவராது. வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தொழிலை செலுத்துங்கள். வாடிக்கையாளர்களின் தேவை தான் உங்களது தொழிலுக்கான மூலதனம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

5.உங்கள் தொழிலின் உரிமையாளராக நீங்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பதவியின் சுகத்தை மட்டும் அனுபவித்துக்கொண்டு உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதுகுறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல் இருக்காதீர்கள்.

தொழிலை நடத்தும்பொழுது உண்டாகும் சிரமங்கள், ஊழியர்களின் திறன்  குறித்த தகவல்கள் என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருங்கள்.

 

6.பணத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். கிடைக்கும் ஒவ்வொரு காசையும் சேமியுங்கள். குறிப்பாக தொழில் ஆரம்பித்த முதல் மூன்று ஆண்டுகளில் கிடைக்கும் லாபத்தை செலவு செய்துவிடாதீர்கள். அந்த லாபத்தை மறுபடியும் தொழிலில் போடுவதுதான் சரியான செயலாக  இருக்கும்.

7.உங்கள் தொழிலுக்கு சரியான பங்குதாரர்கள் கிடைத்தால் அவர்களை வேண்டாமென்று சொல்லக்கூடாது. தனியாக நின்று ஜெயிப்பது எல்லாம் பழைய பாணி. சேர்ந்து உயர்வதுதுதான் உண்மையான வளர்ச்சி.

 

உங்களைப்போலவே தொழில் சார்ந்து ஒரே அலைவரிசையில் இயங்கக்கூடிய நல்ல பங்குதாரர் கிடைத்தால் அவரையும் கூட இணைத்துக்கொண்டு தொழிலில் பட்டையைக் கிளப்புங்கள்.

8.நாளை குறித்த கவலையோடு தொழில் முனைவோர் இயங்கக் கூடாது. நாளை லாபம் சம்பாதிப்பது எப்படி என்றெல்லாம் மூளையைப்  போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இன்று நம்முடைய தொழிலில் லாபம் பார்ப்பது எப்படி என்று மட்டும் சிந்தியுங்கள்.

9.தொழில் சார்ந்த உதவிகளைப்  பிறரிடம் கேட்கத் தயங்கவே கூடாது. அதற்காக எல்லோரையும் நம்பவேண்டும் என்று சொல்லவில்லை.

உங்களது வளர்ச்சியில் அக்கறை மிகுந்த நபர்களின் தொழில் சார்ந்த ஆலோசனைகளை, உதவிகளைப் புறந்தள்ளாதீர்கள். குறிப்பாக ”நான் ஏன் பிறரிடம் கேட்கவேண்டும்? எனக்கு எல்லாம் தெரியும்” என்கிற ஈகோவை விட்டொழிப்பது மிக நல்லது.

 

10.சொந்தமாகத் தொழில் தொடங்கி இருக்கிறோம். அதனால் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று காலநேரம் பார்க்காமல் வெறித்தனமாக உழைக்காதீர்கள். தொடர் உழைப்பு உங்களை அயர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். அதுமட்டுமல்ல அந்த வேலையின் தரமும் சிறப்பாக இருக்காது. அதனால் உங்கள் வேலையை ரசித்துச் செய்யுங்கள்.

உங்கள் வேலைக்கு குட்டிக் குட்டி இடைவேளை கொடுத்து உங்களை புத்துணர்வாக்கிக் கொள்ளுங்கள்.

-திருமாமகள்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *