தொடர்ந்து செய்யுங்கள்!

எந்த ஒரு தொழில் முனைவோரும் தொழிலைத் தொடங்கும் போது, மிகுந்த ஆர்வத்துடன் தொடங்குவார்கள். அவர்கள் ஆர்வத்திற்கு எல்லையே இருக்காது. இரவு பகல் இன்றி எந்நேரம் பார்த்தாலும் சொந்தத் தொழில் குறித்த கனவுகளைப் பேசிக்கொண்டே இருப்பார்கள்…படிப்பதெல்லாம் தன்னம்பிக்கை புத்தகங்களாக இருக்கும். அல்லது ஏற்கனவே தொழில் துறையில் வெற்றிபெற்றவர்களுடைய சுயசரிதையாக இருக்கும்.  எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சென்று முதலீட்டைத் திரட்டுவதற்கான வழிகள், இதர விஷயங்களைப் பற்றி தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருப்பார்கள்.

 

consistency

ஒரு கட்டத்தில் பதிவு , அரசாங்க நடைமுறைகள் என்று எல்லாவற்றையும் தாண்டி, தொழில் தொடங்கப்பட்டுவிடும்.  அதன் பிறகுதான், உண்மையில் தான் எங்கிருக்கிறோம் என்பதே தொழில் முனைவோருக்குத் தெரியவரும். எங்கெல்லாம் பயிற்சியின்மை இருக்கிறது? எங்கெல்லாம் போதாமை இருக்கிறது என்பவை குறித்த தகவல்கள் அப்போதுதான் கிடைக்கும்.

 

நன்கு சம்பாதிக்கத் தெரிந்த ஒருவருக்குத் தொழிலாளர் மேலாண்மையில், கொஞ்சம்கூட பயிற்சி இருக்காது. அதே போல சிறப்பான தொழில் யோசனை கொண்ட ஒருவருக்கு அதனை எப்படி நடைமுறைப் படுத்துவது என்கிற யோசனை இல்லாமல் இருக்கலாம். அல்லது திடீரென்று வருகிற பண முடையை எப்படி சமாளிப்பது என்பது குறித்துத் தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கலாம். அல்லது ஒரே நேரத்தில் தோன்றுகிற பல்வேறு வகையான யோசனைகளில் எதை நடைமுறைப் படுத்துவது என்று தெரியாமல் , ஆழந்தெரியாமல் அகலக் கால வைத்துவிடலாம்.

 

இது போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு தொழில் நஷ்டமடையவோ, தேக்கமடையவோ அல்லது லாபம் கிடைப்பதில் தாமதம் அடையவோ செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில்தான் உண்மையான தொழில்முனைவோரின் தேர்வு தொடங்குகிறது. அவர் பாஸ் செய்ய வேண்டிய முக்கியமான பயிற்சி இதுதான்.

 

எந்த ஒரு துறையிலும் தொடங்கிய சில மாதங்களிலேயே அல்லது ஓராண்டிலேயே லாபத்தைச் சம்பாதித்துவிட முடியாது. தொழில் உலகில் ஒரு சூத்திரம் உண்டு. எந்தத் தொழிலும் 3 ஆண்டுகளில் லாபத்தைச் சந்தித்துவிட வேண்டும். 3 ஆண்டுகள்  கழித்தும், 3 ஆண்டுகள் கடந்தும் ஒரு தொழிலால் லாபத்தைச் சந்திக்க முடியவில்லை என்றால்,  அந்தத் தொழில் லாபகரமான தொழில் என்று நாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிலிருந்து வெளிவருவதே சரியானது.

 

ஒரு வேளை உங்களுக்குக் கையில் பொருளாதாரம், தாராளாக (சம்பளமாக) இருந்தால் தொடர்ந்து முயற்சி செய்யலாம். இல்லை என்றால்  சத்தம் போடாமல்  புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுவது நல்லது.  ஒரு பழமொழி இருக்கிறது. ‘நல்லபிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் பறையாமல் போவது’ என்று, அப்படிப் போய்விடுவது நல்லது.

hourglass-1703349_1920

சரி, இந்த 3 ஆண்டுவரை என்ன செய்வது? 3 ஆண்டுக்குப் பிறகு நஷ்டம் வந்தால் அது வேறு கதை. இந்த 3 ஆண்டுகள்வரை என்ன செய்வது? வேறு ஒன்றும் இல்லை. ஏற்றிருக்கும் வேலைபற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாகச் செய்வதுதான். எந்த ஒரு தொழிலும்  பின் தொடர்ச்சி மூலமாக  மட்டுமே வெற்றியைப் பெற முடியும். இல்லையென்றால் அது விரயமாகிவிடும்.

 

ஒரு மாதம் முயற்சிசெய்வது, இரண்டுமாதம் வேலை செய்து நான்குபேரிடம் பாராட்டுகளை வாங்கிவிட்டு, ஓய்வு  எடுத்துக் கொண்டிருப்பது என்பதெல்லாம்  கதைக்கு உதவாது. நீங்கள் எதைச் செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த 3 ஆண்டுகாலத்துக்குள் நீங்கள் என்னவெல்லாம் தவறுகளைச் செய்தீர்கள்; எவற்றையெல்லாம் சரியாகச் செய்கிறீர்கள்; எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன; எங்கெல்லாம் நீங்கள் நினைத்தபடி வாய்ப்புகள் இருக்கின்றன; நீங்கள் நினைக்காத எந்தெந்த இடங்களிலெல்லாம் வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பதெல்லாம் தெரிந்துவிடும்.

 

bank

இரண்டாவதாக, நீங்கள்  ஒரு  முதலீட்டாளரிடமோ அல்லது வங்கியிடமோ தொழில் நடத்துவதற்காகக் கடன் கேட்கிறீர்கள் அல்லது முதலீட்டைக் கோருகிறீர்கள் என்றால்  நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தில் சின்சியராக,மும்முரமாக, அர்ப்பணிப்புணர்வோடு இருக்கிறீர்கள் என்பதை உணர்த்த வேண்டும். அப்படி உணர்த்தாவிட்டால் உங்களுக்குக் கடனும் கிடைக்காது, முதலீட்டுக்கானத் தொகையும் கிடைக்காது.

நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் எப்படி உடை உடுத்தினாலும் (நீங்கள் நீண்டநாள், அங்கு பணியாற்றிக் கொண்டிருப்பவரகாக இருந்தால்)  உங்கள் உடை பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நீங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குகிறீர்கள் எனும்போது நடை, உடை, பாவனை  மிகுந்த நேர்த்தியோடு இருக்க வேண்டும்.  இதற்கும் சின்சியாரிட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?  இருக்கிறது.

 

நீங்கள் முதலீட்டைத் திரட்ட அணுகும் துணிகர முதலீட்டாளரோ அல்லது வங்கியாளரோ உங்களைப் பார்த்தவுடன், ‘இவர் இந்தத் தொழிலில் கட்டாயம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்’ என்ற எண்ணத்தை அவருக்குத்  தோற்றுவிக்க வேண்டும். ஆக, தொடர்ச்சியாக வெளி உலகத்திற்கு நீங்கள்  சின்சியராக உழைக்கக்கூடியவர் என்பதைக் காட்ட வேண்டும். இன்னொருபுறம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை எந்தவிதமானத் தேக்கமும் இன்றி செய்து கொண்டிருக்க வேண்டும்.  அவ்வாறு செய்து கொண்டிருக்கும்போதுதான் உங்களுக்கு அந்தத் தொழிலில் ஒரு பிடிப்பு இருக்கும்.

 

கிடைக்கும் சின்னச் சின்ன வெற்றிகூட பெரிய அளவில் உங்களை ஊக்குவிக்கும்.  இல்லையேல் நிறையப் புத்தகங்களைப் படித்துக் கொண்டு கடைசிவரை தகவல்களைச் சேகரிக்கும் ஒரு சுரங்கமாக மட்டுமே இருப்பீர்கள்.

 

‘அடி மேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்’ என்கிறார்கள். ‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்’ என்கிறார்கள்.  எனவே எதையும் தொடர்ந்து செய்யுங்கள். அதை அர்த்தத்தோடு செய்யுங்கள். அறிவியல் பூர்வமாகச் செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *