ஒரு சிறிய தீப்பொறி போதும்! (ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! -தொடர் 4)

ஒரு சிறிய தீப்பொறிக்கு, ஒரு பெரும் நெருப்பை உருவாக்கும் வலிமை இருப்பது போல, ‘ஒரு சிறிய எண்ணத்துக்கு’ ஒரு சிறந்த தொழிலை உருவாக்கும் வலிமை இருக்கிறது.

 

உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்சுக்கு அப்படித் தோன்றிய சிறிய எண்ணம்தான் இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறது. மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணக் கனவோடு அவர் தனது தொழிலை ஆரம்பிக்கவில்லை.new ida

 

மாறாக, “ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும் நாங்கள் ஒரு கணினியை நிறுவுவோம் (A computer in every desk and home)”, என்ற எண்ணக் கனவுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் பில்கேட்சின் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம்.

 

வலிமைமிக்க ஒரு எண்ணத்தைக் கொண்டிருந்ததாலேயே, அவர் நினைத்த வண்ணம்  மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் இன்று அனைத்து இல்லங்களையும், அலுவலகங்களையும் சென்றடைந்திருக்கிறது. இன்று மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் விண்டோஸ் (Windows) என்கிற மென்பொருள் (Software) இல்லாமல் எந்த அலுவலகமும் இயங்க முடியாது. ஆக, பில்கேட்சை மிகப் பெரிய தொழில் ஜாம்பவானாக்கியதும்  வலிமைமிக்க ஒரு எண்ணம்தான்.

 

சரி. என்னிடம் நீங்கள் கூறுவது போல நல்ல ஒரு எண்ணம் இருக்கிறது. இப்போது என்ன செய்ய வேண்டும்?

 

எண்ணத்தின் (Idea) அடுத்த நிலை என்ன?

 

தெளிவான ஒரு எண்ணம் (Idea) இருக்கும் பட்சத்தில் நாம் தனியாகத் தொழில் துவங்குவதைப் பற்றி யோசிக்கலாம். எண்ணத்தின் அடுத்த நிலை, முன்-தொடக்க (Pre-Startup) நிலைதான். நமது ‘எண்ணம்’ நாம் நினைக்கும் வண்ணம் உயர்வு தருமா என்று சோதிப்பதும், அதற்கேற்ப திட்டமிடுவதும்தான் இந்த நிலையின் முக்கியக் குறிக்கோள்.

 

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்”, என்கிறது  திருக்குறள்.

 

அதாவது, ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்ய வேண்டுமாம்! லாபத்தை கடைசியாக பார்க்க சொல்கிறார் நமது தெய்வப்புலவர். எவ்வளவு ஆழ்ந்து யோசித்து கூறியிருக்கிறார் பாருங்கள்!

 

திருக்குறள் நமது அனைத்து தேவைகளுக்கும் ஒரு அறிவுரையையோ அல்லது வழிமுறையையோ தந்துவிடுகிறது! அதனாலேயே அய்யன் திருவள்ளுவனுக்கு லண்டன்வரை சிலை வைத்திருக்கிறார்கள் போலும். எங்கு என்கிறீர்களா? லண்டனுக்கு அருகில் ரசல் சுகொயரில் (Russell Square) உள்ள ஒரு பல்கலைகழக வளாகத்தில்!

லண்டனில் மட்டுமல்ல, சிங்கப்பூரிலும் நமது அன்பிற்குரிய தெய்வப்புலவர்  ஜம்மென்று அமர்ந்திருக்கிறார். எங்கே? எம்டிஐஎஸ் (MDIS) கல்வி நிறுவன வளாகத்தில், அதுவும் உலகின் தலைசிறந்த தத்துவ மேதைகளின் நடுவே!

tiruvalluvar

 

சரி, வள்ளுவரின் வாக்குப்படி எவ்வாறு கணக்கிட்டு தொழிலை செய்வது? முன்-தொடக்க (Pre-Startup) நிலையைத் திட்டமிட என்ன செய்ய வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள், தொழிலை ஆரம்பிக்கலாம் என்கிறீர்களா? எண்ணத்தை எப்படிக் கோடிகளைக் கொட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

 

முன்-தொடக்கம் (Pre-Startup) – எவ்வாறு திட்டமிடுவது?

 

முன்-தொடக்க (Pre-Startup) நிலையில் இரண்டு முக்கிய  துணை நிலைகள் உண்டு.

  1. எண்ணத்தை (Idea) விளைபொருளாகவோ (Product) அல்லது தொழிலாகவோ (Business) உருமாற்றுவது.
  2. பொருளுக்கும், தொழிலுக்கும் இருக்கும் சந்தையையும் (Market), அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அளவிடுவது.

 

விளைபொருளாகவோ (Product) அல்லது தொழிலாகவோ (Business) உருமாற்றுவது

 

என்ன, எண்ணத்தைப் விளைபொருளாக்குவதா? குழப்புகிறீர்களே. எண்ணத்தை எப்படிப் விளைபொருளாக்குவது என்ற கேள்வி எழுகிறதா? கீழ்க் கொடுக்கப்பட்ட  எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் புரியும்:

 

  1. உங்களின் எண்ணம் “கண் குறைபாடு உள்ளவர்களுக்குப் புத்தகம் படிக்க ஏதேனும் வழிமுறை செய்ய வேண்டும்” என்பதாக இருப்பின், உங்களின் விளைபொருள் “கண்ணாடி” ஆகும். புரியவில்லையா? ரொம்ப சுமாரான உதாரணமாக இருக்கிறதா? இரண்டாவது உதாரணத்தைப் பார்க்கவும்.

 

  1. உங்களின் எண்ணம் “வண்டியில் செல்பவர்களின் தலையில் அடிபடாமல் தடுக்க ஏதேனும் வழிமுறை செய்ய வேண்டும்” என்பதாக இருப்பின், உங்களின் விளைபொருள் “தலைக்கவசம்” ஆகும்.

 

  1. உங்களின் எண்ணம் “ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உணவகங்கள் இருக்கின்றன” என்பதாக இருப்பின், நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய தொழில் ’உணவகம்’ ஆகும்.

 

“அனைத்து போக்குவரத்து நிறுவனங்களின் இணைய முன்பதிவையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்” என்ற எண்ணத்தைத்தான், பநிந்திர சமா (Phanindra Sama – அதன் நிறுவனர்) ரெட்பஸ் (Red Bus) என்ற இணையதளம் மூலம் ஒரு தொழிலாக உருமாற்றினார்.

 

 

இப்போது புரிந்து விட்டதா, எண்ணத்தை எப்படி உருமாற்றுவது என்று? உங்களின் எண்ணம் ஒரு பிரச்சனைக்கான தீர்வை விளைபொருளாகவோ (Product) அல்லது தொழிலாகவோ (Business) உருமாற்றி விட்டால், தொழில் தொடங்குவது என்பது பெரிய கடினமான, சவாலான ஒரு பணி அல்ல.

 

 

இந்தியாவில் பிரச்சனைகளின் எண்ணிக்கை ஏராளம். தொழில் முனைவோரின் எண்ணிக்கைதான் குறைவு. வேலைக்குச் செல்ல ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், தொழில் முனைய விருப்பம் கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சரியான எண்ணமும் (Idea), திடமான திட்டமும் இருந்தால் வெறும் குச்சியைக் கூடக் கோடிகளாக்க முடியும்.

 

வெறும் குச்சிகள் கோடிகளான கதையைப் பார்க்கலாமா? காத்திருங்கள்.

– கதிரவன் மனோகரன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *