கடந்த வாரம், (நவ.21) ஒன்றிய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அது, இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை தொழிலாளர் உரிமைக்காக இயற்றப்பட்ட முக்கியமான 29 சட்டங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக நான்கு பெரிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பழைய சட்டங்களின் அம்சங்கள் இவற்றில் இடம்பெறும்.
புதிய சட்டங்களில் கீழ்க்காணும் சிறப்பம்சங்கள் உள்ளன.
*முன்பெல்லாம் பணிக்கொடை (gratuity) பெற 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இனி அப்படி இல்லை. ஓராண்டு நிறைவு பெற்றாலே தொழிலாளி பணிக்கொடைக்குத் தகுதி பெற்றவர் ஆவார்.
*குறைந்தபட்சக் கூலிக்கும் குறைவாக இனி எவரும் ஊதியம் அளிக்க முடியாது. அதேபோல, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சக் கூலியானது, உள்ளூர் நிலைமைகளை அனுசரித்து மதிப்பாய்வு செய்யப்படும்.
*முறைசாரா தொழில்கள் உட்பட பல துறைகளில் வேலை நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனைப் புதிய சட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவருகின்றன. இனி, வேலை நியமனக் கடிதம் கட்டாயம்.
*இரவுப்பணி, கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றுக்கான மிகை ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
*40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச மருத்துவப் பரிசோதனை.
மேற்கண்ட அம்சங்கள் ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. அதேவேளையில் தொழிற்சங்கங்களின் தரப்பு மிகக் கடுமையான எதிர்வினையாற்றுகிறது. புதிய நான்கு சட்டங்களுக்கு எதிராகப் பெரிய அளவில் போராடப் போவதாக அது அறிவித்திருக்கிறது.
தொழிற்சங்கத்தரப்பின் வாதம்:
*நிலையாணைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு சட்டத்தைத் திருத்துவதால் ஆள் சேர்ப்பு, பதவி உயர்வு, தண்டனைகள், விசாரணை, ஊதியத்திருத்தம், வேலை நீக்கம் ஆகிய எவற்றுக்கு அரசின் அனுமதி தேவையில்லை. எந்த நிறுவவனமும் எவரையும் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்.
*அதேபோல தொழிற்சங்கங்கள், அரசின் அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் தொழிற்சாலையை மூடிவிடலாம் (300 ஊழியர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்கள்). இது தொழிலாளர் உரிமையை மறுக்கிறது.
*பழைய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக இயற்றப்பட்டன. இப்போதைய சட்டங்களோ, தொழில் நிறுவன முதலாளிகளுக்காக இயற்றப்பட்டிருக்கின்றன.
*ஏற்கனவே உள்ள சட்டங்களை சரியாக செயல்படுத்தியிருந்தாலே தொழிலாளர்களுக்கு உரிமை கிடைத்திருக்கும். ஆனால், அது நடக்காததால் தொழிலாளர் நீதிமன்றங்களில் 12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இச்சட்டங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி நவ.21 முதல் அவை நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
இச்சட்டங்களின் அடிப்படைப் பிழையே ‘எளிதாகத் தொழில் தொடங்க வழிவகை செய்தல்’ எனும் கொள்கையின் அடிப்படையில் இயற்றப்பட்டதுதான். தொழில்நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏதுவான சூழலை ஏற்படுத்த எதுவெல்லாம் தடையாக இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். நிலம் கிடைப்பது, தேவையற்ற அரசு நடைமுறைகள், கால தாமதத்தைக் கோரும் பல்வேறு உரிமங்கள், அவற்றுக்குப் பின்னணியில் இருக்கும் லஞ்ச லாவண்யம், திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமல் இருப்பது, அண்டை மாநிலங்களின் போட்டி, உயர்கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏற்றுமதித் தொழிலுக்க்கு இடையூறாக உள்ள வரிவிதிப்பு , குளிர்பதனக் கிடங்குகள் போதுமான அளவுக்கு இல்லாமை என்று பல விஷயங்களை சரிசெய்ய வேண்டியிருக்கிறது.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, தொழிலாளர்களின் உரிமைகள்தாம் தொழில்துறைக்குத் தடையாக இருக்கின்றன என்று முடிவெடுப்பது சரியன்று. தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் தொழிலாளர் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமேயொழிய, தொழில் முனைவோரின் பார்வையில் அவை வடிவமைக்கப்படக்கூடாது.
(தொழில்முனைவோருக்கான சட்டங்கள் இயற்றப்படும்போது தொழிலாளர்களின் தரப்பு கேட்கப்படுகிறதா என்ன?)
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஒன்றிய அரசு, எதிர்வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரிய விவாதங்களை நடத்தி தொழிலாளர் தரப்பைக் கேட்டு, உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள், தொழில்முனைவோர், அரசு என்று முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படலாம். தொழில் அமைதி வேண்டுமானால் எந்தத் தரப்பும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்தாக வேண்டும்.
தொழிலாளர் இன்றித் தொழில் இல்லை. தொழில் நல்லுறவு இல்லாமல் நாட்டின் மேம்பாடும் இல்லை என்பதை அனைவ்ரும் உணரவேண்டும்.
(படம்: நன்றி: Fajar Arif from Pixabay)





