சென்னை நவ.11: மூத்த குடிமக்களுக்காக ‘அன்புச்சோலை’ எனும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி பொன்மலையில் காணொலிக் காட்சி மூலம் 25 மையங்களை அவர் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:
’தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.10 அன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் அன்புச்சோலை மையத்தைத் திறந்துவைத்தார். ஒரு மாநகராட்சிக்கு இரண்டு மையங்கள் வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 மையங்களை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.முதியவர்கள் அமைதியான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதிசெய்து, அத்தியாவசிய வசதிகளை வழங்குவதே இத்திட்டங்களின் நோக்கம் ஆகும்.
ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலை ,மையங்கள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர, ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் இம்மையங்கள் தொடங்கப்படும்.
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக திருச்சிராப்பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 அன்புச்சோலை மையங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்துவைத்தார்.’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்மையங்களில் முதியோருக்கு பகல் நேரப் பராமரிப்பு, மதிய உணவு, பொழுதுபோக்கு, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்மூலம் மருத்துவப் பராமரிப்பு, சிற்றுண்டி, யோகப் பயிற்சி, இயன்முறைப் பயிற்சி (பிசியோதெரபி) ஆகியவை வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் இங்கு சேரலாம். ஒரு மையத்துக்கு 50 பேர் வீதம் சேர்க்கப்படுவர்.
(முகப்புப்படம்: நன்றி: Image by Gerd Altmann from Pixabay)
– ம.விஜயலட்சுமி





