”அந்தக் காலத்தில் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமா?”
“வாழ்ந்து கெட்ட குடும்பம் நாங்கள்”
“இந்த பட்டிக்காட்டுல ரியல் எஸ்டேட் இப்படி வளரும்னு யார் கண்டா? 1 ஏக்கர் 100 ரூபாய்க்கு வந்துச்சாம். எங்க தாத்தா வேண்டாம்னு சொல்லிட்டார். இந்த ஊர்ல இவ்வளவு இடம் வாங்கி எதுக்கு ஆகப்போகுதுன்னு? இப்போ பாருங்க…கோடிக்கணக்குல போகுது”
“புதுசா வாங்காட்டிகூட பரவாயில்லை….எங்க அபபா, இருக்கிற சொத்தை அடிமாட்டு விலைக்க்கு வித்துட்டார். அது இருந்திருந்தா நாங்க வேலைக்கே போக வேண்டி இருந்திருக்காது. கால் மேல கால் போட்டு சாப்பிடலாம்”
“என்ன பண்றது….கூறுகெட்ட பொழப்பு பொழச்சுடோம்”
….இப்படியெல்லாம் அங்கலாய்ப்பு வசனங்களைக் கேட்காத காதுகளே இருக்காது இல்லையா!
பாரம்பரியமான முதலீட்டுத்திட்டங்களைத் தவற விட்டவர்கள் இப்படி என்றால், நவீன முதலீடுகளைத் தவற விட்டவர்கள் இன்னும் கேவிக்கேவி அழுவார்கள்.
“2003-2005க்குள்ள ஒரு ரெண்டாயிரம் ரூபாயை பிட் காயினில் முதலீடு செஞ்சிருந்தா நான் கோடீஸ்வரன். அந்த புத்தி இல்லாமப் போச்சே!”
“ஷேர் மார்க்கெட்ல போட்டேன். ரியல் எஸ்டேட்ல போட்டேன்….ஆனா கிரிப்டோ கரன்ஸி பத்தி தெரியாமப் போச்சே!”
“அமெரிக்க அரசாங்கமே டாலர் கையிருப்பு மாதிரி கிரிப்டோ கரன்ஸி கையிருப்பு வெச்சிருக்காம்”
“ம்ஹூம்…”
….இவற்றையெல்லாம் இப்போது கேட்க முடிகிறதுதானே!
இப்படிப் புலம்புபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கிறார்கள்: ‘புத்திசாலித்தனம்’
ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்.
அது,
’காலம்!’
ஆம். எந்த ஒரு விஷயத்தையும் காலத்தோடுதான் பொருத்திப்பார்க்க வேண்டும். ஒரு சவரன் நகை ரூ.5க்கு விற்றதைப்பற்றிப் பேசும் நமது தாத்தா-பாட்டிமார், அன்றைக்கு எவ்வளவு மாத சம்பளம் வாங்கினார்கள் என்று கேட்டால் உங்களுக்கு மயக்கம் வரும்.
எப்போதுமே விலைவாசிக்கும் வருவாய்க்கும் இடையே ஒரு இணக்கமான ஏழாம்பொருத்தம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஒரு சவரன் ரூ.5க்கு விற்ற காலத்தில் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் சம்பளமே ரூ.2தான். அதாவது மாத சம்பளம். தனது மாத சம்பளத்தைவிட இரண்டரை மடங்கு மிச்சம் பிடித்தால்தான் அவரால் ஒரு சவரன் நகை வாங்கியிருக்க முடியும். அதாவது நீங்கள் ரூ.50,000 சம்பளம் வாங்குவதாக வைத்துக்கொண்டால், குறைந்தது ரூ.1.25 லட்சம் சேமிப்பு வைத்திருந்தால்தான் உஙகளால் இன்றைக்கு ஒரு சவரன் நகை (சீக்கிரம் அந்த விலைக்கு வந்துவிடும்) வாங்க முடியும். இப்போது புரிகிறதா?
நாம் முதலீடு, சேமிப்பைப் பற்றிப் பேசுகிறோமே…அந்தக்கால வாழ்க்கைத்தரத்தைப் பற்றிப் பேசுகிறோமா? அந்தக்காலம் எப்படி இருந்தது?
வயிற்றுவலியால் தற்கொலை, பஞ்சம், பட்டினிச்சாவுகள், கொள்ளை நோய்கள் மலிந்த காலம் அது. அதில் தப்பிப் பிழைத்து வாழ்வதே சாதனை. அந்த சாதனையைப் புரிந்து நல்ல உடல்நலத்துடன் நம்மை இந்த உலகுக்கு நீட்டித்திருக்கிறார்கள் நமது முன்னோர். அது சொத்து கிடையாதா?
40 வயதுதான் சராசரி ஆயுட்காலம் என்று இருந்ததை 60க்கு மேல் உயர்த்தியது இந்தக்கால அறிவியல் அல்லவா…அரசு, தனியார் வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் என்று வளர்ச்சியானது அனைவருக்கும் போய்ச்சேர்ந்த இந்தக்காலம்தான் வாய்ப்புகளின் காலம்.
எனவே, கடந்தகாலக் கவலைகளைக் கைகழுவிவிட்டு இன்றைய காலத்தில் எப்படி வாழ்வது என்று யோசியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல், துறைசார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் முதலீட்டு ஆலோசனைகளைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
இது வாய்ப்புகளின் காலம். உழைத்தால் முன்னேற தடைகள் ஏதுமற்ற காலம். நாடு முழுவதும் செல்வதற்கும் நாடு கடந்து செல்வதற்கும் எவ்வித இடர்ப்பாடும் இல்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம். கையில் இருக்கும் சேமிப்பை உண்டோ, குடித்தோ அழிக்கலாம்…அல்லது உருப்படியாக முதலீடு செய்து, சேமித்து நிம்மதியாக வாழலாம். எல்லாமே நம் கைகளில்தான் இருக்கிறது.
கடந்த காலம் என்பது கடந்துவிட்டது. அதனைப்பேசிப் புண்ணியம் இல்லை. மன்னராட்சி ஒழிந்து மன்னர்களின் வாரிசுகள் தற்கால அரசியல் பதவிகளுக்குக் காத்துக்கிடக்கிறார்கள். ஜமீந்தார்களின் பேர்ப்பிள்ளைகள் கார்ப்பரேட் வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, நிகழ்காலத்தில் வாழ்வதற்கான யோசனைக்குள் வாருங்கள்.
“என்னோட தாத்தா புத்திசாலி. நேர்மையாக உழைச்சு, சிக்கனமா செலவழிச்சு, புத்திசாலித்தனமாக முதலீடு செஞ்சுட்டுப் போயிருக்கார்” என்று உங்கள் பேரப்பிள்ளைகள் சொல்லும்படியாக வாழுங்கள்.
எத்தனை நாட்களுக்கு பேரப்பிள்ளையாக இருப்பீர்கள்? புத்திசாலித்தாத்தா, பாட்டியாகவும் ஆக வேண்டிய தேவை இருக்கிறது அலல்வா1
சிந்தியுங்கள்.
-அருண்மொழி.





