இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு.ரத்தன் டாடா நேற்று இரவு (அக்.9) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தகவல், தொழில்துறையினர் மட்டுமின்றி புத்தொழில் முனைவோர், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர் மத்தியிலும் அரசியல் வெளியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி நுஸர்வாஞ்சி டாடா அவர்களின் குடும்ப மரபைச் சேர்ந்தவர். அவர்து மகன் சர்.ரத்தன்ஜி டாடாவுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே நவெல் ஹெச்.டாடா என்பவரை (அவரும் டாடா குடும்பத்தின் தூரத்து உறவினர்தான்) தத்தெடுத்தார் ரத்தன்ஜி . அவருடைய மகன்தான் உலகமே கொண்டாடும் ரத்தன் டாடா. மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, புகழ்பெற்ற கார்னல் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றார். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ரத்தன் டாடாவுக்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணி கிடைத்தது. ஆனால், டாடா குழுமத்தின் முக்கிய வாரிசான ஜே.ஆர்.டி டாடாவுக்கு இது பிடிக்கவில்லை. “நீ இந்தியாவில் இருந்துகொண்டு நமது குழுமத்தை வழிநடத்துவதற்கு பதிலாக ஐ.பி.எம்.மில் பணியாற்றுவது எனக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக உன் சுய விபரக்குறிப்பைத் (Resume) தயார் செய்து எனக்கு அனுப்பு” என்று கறாராக சொல்லிவிட்டார்.
அன்றைய நிலையில் ரத்தன் டாடாவிடம் சுய விபரக்குறிப்பு ஏதுமில்லை. உடனே, ஐ.பி.எம். நிறுவனத்திலிருந்த மின்னணு தட்டச்சு இயந்திரத்தில் (electronic typewriter) தயார் செய்து ஜே.ஆர்.டி. டாடாவுக்கு அனுப்பி வைத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சிறு பயிற்சி எடுத்துக்கொண்டு, பின்னர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் அடிப்படைப் பணியாளராக சேர்ந்து பயிற்சி பெற்றார். 1962ல் நிகழ்ந்த இந்த நுழைவு, டாடா குழுமத்தின் தலையெழுத்தையே மாற்றியது. நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த நெல்கோ என்ற நிறுவனத்தை லாபத்துக்கு மடைமாற்றினார். ஜே.ஆர்.டி. டாடா, ஓய்வு பெற்றபிறகு 1991 வாக்கில் டாடா குழுமத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றார் ரத்தன் டாடா.
அதன்பிறகு பல்வேறு சாதனைகளை டாடா குழுமம் புரிந்தது. ஜாகுவார், டெட்லி டீ, லேண்ட் ரோவர், கோரஸ் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தி உலக அளவில் புகழ்பெற்றது டாடா குழுமம். அதற்குக் காரணம் ரத்தன் டாடா என்ற ஒரு வசீகர மந்திரம்தான். உலகின் விலை குறைவான நேனோ காரை உருவாக்கியவர் அவர். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடிக்கு டாடா குழுமம் வணிகம் செய்கிறது. அதன் மூளையாக ரத்தன் டாடா செயல்பட்டு வந்திருக்கிறார். நிறுவன சமூகப்பொறுப்பு (CSR) என்ற விஷயத்தில் டாடா குழுமம் எப்போதும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருகிறது. அதன் பின்னணியில் ரத்தன் டாடா இருந்து வந்திருக்கிறார். இரண்டுமுறை டாடா குழுமத்தின் தலைவராக செயலாற்றிய அவர், ஓய்வுக்குப்பிறகு டாடா குழுமத்தின் சமூகம் சார் செயல்பாடுகளுக்கான நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பை ஏற்று வழிகாட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு முதல் கார் வரை, இரும்பு தயாரிப்பு முதல் மென்பொருள் தொழில்நுட்பம்வரை எல்லாவற்றிலும் டாடா குழுமம் வெற்றிபெற்று நற்பெயரையும் சம்பாதித்திருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான தொழில் தர்ம நெறிகளைப் பின்பற்ற விரும்பும் புத்தொழில் முனைவோரின் எடுத்துக்காட்டாக ரத்தன் டாடா தொடர்ந்து திகழ்கிறார்.
நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகியவற்றைப் பெற்ற ரத்தன் டாடா பல்வேறு நாடுகளின் உயர் விருதுகளைப்பெற்று அவர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். டைம் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு இதழ்களின் முகப்பு அட்டைகளை அலங்கரித்திருக்கிறார்.
இன்று (அக்.10) அவரது உடல், மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது உடல் மறைந்தாலும் அவரது ஆன்மா, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை அனைத்து தொழில்முனைவோர், மாணவர்கள், அறநெறிகளுடன் வாழ விரும்புவோரை என்றென்றும் தழுவிக்கொண்டே இருக்கும்.
இந்திய தொழில்துறையின் பிதாமகர் திரு.ரத்தன் டாடா அவர்களை முனைவு, சிரம் தாழ்த்தி வணங்குகிறது.
-ம.விஜயலட்சுமி
(படம்: நன்றி: ரத்தன் டாடா முகநூல் குழு)