சென்னை, மார்ச் 29: நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்காக நடிகர் தேர்வு முகவர்கள் என்று யாரையும் நியமிக்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் போலியாக அத்தகைய முகவர்கள் ( காஸ்ட்டிங் ஏஜெண்டுகள்) செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக யாரேனும் கூறிவந்தால், அவர்களை நம்பவேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வழக்கமாக திரைப்பட நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் படங்களுக்காக காஸ்ட்டிங் டைரக்டர்கள், காஸ்ட்டிங் ஏஜெண்டுகளை நியமித்து படங்களைத் தயாரிப்பது வழக்கம். அதுபோல் ராஜ் கமல் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சமீபகாலமாக போலியானவர்கள் காஸ்ட்டிங் ஏஜென்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததால் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-எல்.குணாளன்





