சென்னை, ஏப். 2: கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. இதில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ’சாரி’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் ராம் கோபால் வர்மா படம் குறித்துப் பேசும்போது, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்தின் கதையை நான் எழுதியுள்ளேன்.

இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொன்ன கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். படத்தில் படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.
கதாநாயகி ஆராத்யா தேவி, “‘சாரி- படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. இந்தப் படம் என்னுடைய கனவுப் படம். இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இந்தப் படத்தில் நடிக்கப் போதுமான சுதந்திரம் அளித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
-எல்.குணாளன்.





