தமிழகத்தின் புகழ்பெற்ற தொழில் அதிபர் அவர். சுமார் ரூ. 300 கோடிக்கு மேல் வணிகம் செய்து வருகிறார். தான் வளர்ந்தால் மட்டும் போதாது என்று, புதிய தொழில் முனைவோரையும் ஊக்குவித்து வருகிறார். தொழிலில் வென்று விட்டோம் என்ற இறுமாப்போ, தொழில்துறையில் தான் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறோம் என்கிற பெருமிதமோ இன்றி அவர் இயல்பாக வளைய வருவது அனைவருக்குமே வியப்பைத்தரும்.
அடிக்கடி கல்வி நிறுவனங்களுக்குச்சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு தொழில் முனைவு சார்ந்த வகுப்புகளை நடத்துவதும் நூல்களை எழுதுவதும் அவரது பொழுதுபோக்கு, சமூகப் பணி. அந்த வகையில் அவருக்கு அடிக்கடி இளம் தொழில் முனைவோர் நண்பர்களாக உருவாவார்கள்.
அவரது வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டு தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கோ அல்லது முதலீடுகளை பெறுவதற்கோ உழைக்கத் தொடங்குவார்கள்.
அப்படித்தான் ஒரு இளைஞரும் அவருக்கு அறிமுகமானார். அவரது தொழிலை தொடங்கி வைக்க தொழிலதிபரை அழைக்க, இவரும் மகிழ்ச்சியோடு
சென்று தொடங்கி வைத்தார் சில ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்பொழுது, “ என்னப்பா தம்பி… எப்படி போகுது தொழில்?” என்று கேட்டார் தொழிலதிபர்.
“பரவாயில்லை சார்” என்றார் இளைஞர்.
உடனே தொழில் அதிபர் கேட்டார்: “உனக்கு மலையாளிகள் காசு கொடுத்தால் பிடிக்காதா?”

“ஏன் சார் அப்படி கேக்குறீங்க? இப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே!” என்றார் இளைஞர்.
”நல்லது. அப்படியென்றால், கன்னடர்கள் உனக்கு வாடிக்கையாளராக இருப்பது உனக்கு சங்கடமாக இருக்குமா?” என்று கேட்டார்.
இளைஞர் பதறிப்போனார்.அவர் ‘இல்லை’என்று தலையசைக்கும் முன்னரே அடுத்த கேள்வியும் வந்து விழுந்தது:
“இந்திக்காரர்களுடன் வர்த்தகம் செய்வதில் உனக்கு ஏதும் தயக்கம் உண்டா?”
என்று கேட்டார்.
அதற்கு இளைஞரோ, “சார் எனக்கு அதுபோன்ற வேறுபடுத்தி பார்க்கும் மனப்பாங்கு கிடையாதே… என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?” என்றார் பரிதாபமாக.
அதன் பிறகு தொழிலதிபர் நிதானமாகச் சொன்னார்: “ இப்படி எந்த ஊருக்குச் செல்வதற்கும் எந்த மக்களோடு வணிகம் செய்வதற்கும் உனக்கு பரந்த மனது இருக்கிறது. ஆனால், நீ அதை செய்தாயா?”
இளைஞர், தலையைச் சொறிந்தார். தொழிலதிபர், பேசத் தொடங்கினார். “உனது தொழிலுக்கான வாடிக்கையாளர்கள் உன் வீட்டைச் சுற்றியோ அல்லது உன் மாநிலத்தைச் சுற்றியோ மட்டும் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறாய்? உனது பொருளுக்கான தேவை வேறு மாநிலத்தில்கூட இருக்கலாம் அல்லவா! எனவே சந்தையை உள்ளூருக்குள் உருவாக்கப் பார்க்காமல், எங்கு சந்தை இருக்கிறதோ அங்கு உன் பொருட்களை விற்பதற்கான வழிகளை பார். அதுதான் உன்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லும்.
எடுத்துக்காட்டாக, நானே வட இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நடத்துகிறேன். எனக்கு ஹிந்தி மொழியில் ஒரு சொல் கூட சொல்லத் தெரியாது ஆனால் தொழில் முனைவோருக்கு அதுவெல்லாம் ஒரு தடையாக இருப்பதில்லை….. என்ன, புரிந்ததா?” என்று கேட்டார்.
அந்த இளைஞருக்குப் புரிந்ததோ இல்லையோ….நமக்குப் புரிய வேண்டிய பாடம் இது. வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்று உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்காமல், வாய்ப்பு இருக்கும் இடங்களை நோக்கி நாம் நகர்ந்து விட வேண்டும்.