நம் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் மிக முக்கியமான நிறுவனமாகத் திகழ்ந்தது ஜெட் ஏர்வேஸ். அதன் நிறுவனரான நரேஷ் கோயல், வங்கி மோசடி புகார் ஒன்றின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ், நாட்டுக்குள்ளும் நாடு கடந்தும் 65 நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வந்தது. 1000 வழித்தடங்களில் மும்முரமாக செயல்பட்டு வந்த அந்நிறுவனம், அத்துறையில் நற்பெயரை ஈட்டி வந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால், பொருளாதார அடிப்படையில் கடும் நெருக்கடியை சந்தித்த சூழலில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. எந்த நிறுவனமும் சிக்கன நடவடிக்கை என்று வரும்போது ஆடம்பரங்களைக் குறைத்துக்கொள்ளாமல் ஊழியர்களைக் குறைப்பதுதான் கார்ப்பரேட் உலகின் எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது. அதையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் செய்தது.
ஆனால், எதிர்விளைவுகள் வேறுமாதிரி இருந்தன. அந்நிறுவன விமானிகளும் விமானப் பணிப்பெண்களும் போராட்டத்தில் குதித்தனர். வரலாற்றில் இல்லாத ஒரு அதிசயமாக தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு.வின் உதவியை நாடினர்.
போராட்டம் பெரிதானது. நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் நெருக்கடிக்கு ஆளானார். ஒரு கட்டத்தில், “ என் ஊழியர்கள் என் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்களை நான் கைவிட்டுவிடுவேனா?” என்று கண்ணீர் உகுத்தார். ஊழியர்கள் திரும்பவும் பணியமர்த்தப்பட்டனர்.
இருப்பினும் ஜெட் ஏர்வேஸ், செய்திகளில் அடிபடுவதைத் தவிர்க்க முடியவில்லை. தொடர் நிதி நெருக்கடிகளால் அது பேசுபொருளாகவே தொடர்ந்தது. வேறு வழியற்ற நிலையில் திவால் நிலைக்குச் சென்றது. 2019 ஆம் ஆண்டுடன் அதன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்திய திவால் சட்டத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நிறுவனத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்றன.
ஜலான் கல்ரோக் கன்சார்ட்டியம் என்ற நிறுவனம், இந்நிறுவனத்தை எடுத்து நடத்த முன்வந்துள்ளது. அதனையடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் விமான சேவையை நடத்துவதற்கான சான்றிதழை ஜெட் ஏர்வேஸ் பெற்றுவிட்டது.
அதனைத்தொடர்ந்து விரைவில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் விண்ணில் பறக்கும் காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயலுக்கும் தற்போதைய ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடவேண்டிய சேதி.
இந்த சூழலில் ஜெட் ஏர்வேஸின் நிறுவனரான நரேஷ் கோயல் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.538 கோடி அளவுக்கு சட்ட விரோதப் பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று சிறப்பு நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துச்செல்லப்பட இருக்கிறார்.

கனரா வங்கி கொடுத்த புகாரின் அடைப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், நரேஷ் கோயல், அவரது மனைவி, அவரது முன்னாள் சகாக்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக சி.பி.ஐ அமைப்பு வழக்குப் பதிவு செய்திருந்தது.
மொத்தம் ரூ.848 கோடியைக் கடனாகப் பெற்ற நரேஷ் கோயல், ரூ.538 கோடி அளவுக்கு கடன் பாக்கி வைத்திருக்கிறார். மேலும் துணை நிறுவனங்களுக்கு நிதியைக் கைமாற்றியது, கணக்கு வழக்குகளைப் பொய்யாகப் புனைந்தது ஆகிய நடவடிக்கைகளால் இவ்வழக்கு உருவெடுத்திருக்கிறது.
நீங்கள் எவ்வளவு பெரிய மகா கனவோடு, படைப்பாற்றலோடு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினாலும், நேர்மையற்ற செயல்பாடுகள் அந்நிறுவனத்தையும் அதனைச் சார்ந்திருக்கும் ஊழியர்களின் குடும்பங்களையும் பாதிக்கும் என்பது எழுதப்படாத விதி.
இன்றைக்கு நிறுவனம் கைமாறியிருக்கும் சூழலிலும் ஜெட் ஏர்வேஸின் வணிகப்பெயர் செய்திகளில் எதிர்மறையான காரணங்களுக்காக தொடர்புபடுத்தப்பட்டு ஊடக வெளிச்சம் குவிவது கூடுதல் வேதனைதான்.
நரேஷ் கோயல், கார்ப்பரேட் உலகுக்கு ஒரு பாடம்!
-ஆதன்.