மிரட்டும் அமேசான்!ஜொலிக்கும் ஹைதராபாத்!

மிரட்டும் அமேசான்!ஜொலிக்கும் ஹைதராபாத்!

தினைந்து வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத், தெலங்கானாவில் தன்னுடைய செயல்பாடுகளை முதன்முதலாக அமேசான் நிறுவனம்  ஆரம்பித்தது. இப்போது இந்தியாவில் முதன் முறையாக அமேசான் நிறுவனம் ஹைதராபாத்தில் தனது சொந்தக் கட்டடத்தைக் கட்டியுள்ளது.

9.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம்தான் அமேசான் அலுவலகங்களிலேயே உலக அளவிலான மிகப் பெரிய அலுவலகம் என்கிறது அமேசான் நிறுவனம். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட 1.8 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட, அலுவலகரீதியாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கட்டிடம் என்கிற பெருமையையும் அமேசான்-ஹைதராபாத்  பெற்றிருக்கிறது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பதினைந்தாயிரம் ஊழியர்கள் பணிபுரிய இருக்கின்றனர்.. இந்த ஒட்டுமொத்த வளாகமானது மார்ச் 2016-ல் அடிக்கல் நாட்டப்பட்டு    மூன்றே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.  இந்த அலுவலகத்தில் 290 கூட்ட, அறைகளும் 49 லிஃப்ட்களும் உண்டு.

மேலும்  இந்த அலுவலகத்தில் இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்குகின்ற உணவு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன்? ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு எதுவாக  ஹெலிபேட் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஊழியர்கள் தங்களைப் புத்துணர்வாக்கிக்கொள்ள எதுவாக குறிப்பிட்ட ஒரு தளம் முழுவதும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

 “பாரிஸ் நகரில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பைவிட இரண்டரை மடங்கு அதிகமான இரும்பு இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்தியா முழுக்க ஏறக்குறைய அறுபத்தியிரண்டாயிரம் ஊழியர்கள் நேரடியாக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

அமெரிக்காவைத் தாண்டி மிக அதிக அமேசான் ஊழியர்கள் இருப்பது இந்தியாவில்தான்.அதிலும் குறிப்பாக இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு அமேசான் ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஹைதராபாத்தோடு அமேசான் நிற்கவில்லை. ஆகஸ்ட் 22 அன்று (நேற்று) சென்னையில் தனது புதிய விநியோக மையத்தைத் திறந்திருக்கிறது. விரைவான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் இந்த மையம் 24,000 சதுர அடிப் பரப்பில் திறக்கப்பட்டுள்ளது.

இதனை அமேசான் நிறுவனத்தின் அங்கமான லாஸ்ட் மைல் டிரான்ஸ்போர்டேஷனின் இயக்குநர் பிரகாஷ் ரோச்சியானி, தி.நகர் காவல் துறை துணை ஆணையர் டி.அசோக் குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களில் விநியோகக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.

நாலு கால் பாய்ச்சல் என்பது இதுதான் போல!

பாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *