கடந்த வாரம் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் சமூக விரோதிகள் மூவரால் பாலியல் வன் தாக்குதல் செய்யப்பட்ட செய்தியை அறிந்து தமிழ்நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகத் தெரிகிறது.
இவ்வழக்கில் கோவை மாநகர காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைவாக செயல்பட்டு, குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்திருக்கின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய செய்தியாகும்.
அதேவேளையில் இதுகுறித்து பொதுச்சமூகம், சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.
“11 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு அங்கு என்ன வேலை?”
“ஆண் நண்பருடன் அத்துவானக் காட்டில் என்ன செய்துகொண்டிருந்தாராம்?”
“இதில் வேறென்னவோ இருக்கிறது”
“பெண் சுதந்திரம் தறிகெட்டுக் கிடக்கிறது”
“மாதர் சங்கங்கள் எங்கே போய்விட்டன?”
-இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். பாதிக்கப்பட்ட பெண், மூன்று பேரால் மட்டுமல்ல…ஒட்டு மொத்த சமூகத்தாலும் குத்திக் கிழிக்கப்படுகிறார்.
வயது வேறுபாடின்றி அப்பெண்ணைப் பலரும் குற்றம் ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். சிலர், அக்கறையுடன் சொல்வதுபோல சொல்கின்றனர். சிலரோ, ‘அந்த கும்மிருட்டு வேளையில் ஆண் நண்பருடன் சேர்ந்து சென்றால் இப்படித்தான் நடக்கும்’ என்று வன்மத்தைக் கக்குகின்றனர்.
2025ல், வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்தில், தனது சுற்றுப்புறத்தையும் சம மனிதர்களையும் தன் நண்பனையும் நம்பித்தான் அந்தப்பெண் அந்த இரவிலும் சுதந்திரமாக வெளியே வந்திருக்கிறாள். ஏன் வந்தாள் என்பது அவளது சொந்த விவகாரம். ஆனால், உங்களையும் என்னையும் நம்பித்தானே அந்தப் பெண் பிள்ளை வந்திருக்கிறாள்…
அவளைக் காக்க வேண்டியது நமது கடமை அல்லவா! கெடு வாய்ப்பாக சமூக விரோதிகளின் கண்களில் பட்ட அவரும் அவரது நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அந்தப்பெண் பாலியல் வன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு புதருக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? பெண் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பேச வேண்டும். சட்ட ஒழுங்கை, சமூக விரோத செயல்களைப் பேச வேண்டும்.

ஆனால், இணையவாசிகள் பலரும் இன்னும் 10 ஆம் நூற்றாண்டிலேயே நின்றுகொண்டு, “நடு இரவில் வீட்டைவிட்டு வெளியே போகும் பெண்ணுக்கு இதுதானே தண்டனையாக நட்க்கும்!” என்று பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனர்.
பெண்ணுரிமை பேசுவோரும் முற்போக்குவாதிகளும் சாமானியப் பெண்களும் இந்தப் போக்கைக் கண்டிக்காமல் இல்லை. பெண்ணைப் பாதுகாக்கக் களமிறங்கும் கற்கால மனிதர்கள், ஆண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய முறை குறித்தும் பேசவேண்டும். குழந்தைகள் எந்தப் பாலினமாக இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியதும் பாதிப்பு ஏற்பட்டால் அரவணைத்து, வாழ்வை எதிர்கொள்ளப் பழக்கவும் வேண்டும். அதுதான் சரி.
அப்படி இல்லாமல், பெண்ணடிமைத்தனம் பேச இதுதான் வாய்ப்பு என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்தால், அவர்களைக் கற்கால மனிதர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதைத் தலைப்பு ஒன்று இப்படி இருக்கும்: ‘யாருக்கும் வெட்கமில்லை!’
ஒருவேளை இன்றைய கட்டுப்பெட்டி மனிதர்களைப்பற்றி மீண்டும் ஒரு கதையை அவர் எழுதியிருந்தால் அதே தலைப்பைத்தான் வைத்திருப்பார் என்று தோன்றுகிறது.
ஏனென்றால், ‘அவர்கள் அப்படித்தான்!’
-ம.விஜயலட்சுமி.
(முகப்புப்படம்: நன்றி: பிக்ஸா பே)





