ஆந்திரா-தொழில்முனைவோரின் சொர்க்கபுரி

ஆந்திரா-தொழில்முனைவோரின் சொர்க்கபுரி

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் என்கிற பெருமையை ஆந்திர மாநிலம் பெற்றிருக்கிறது.

இத்தனைக்கும் ஹைதராபாத் என்கிற முக்கியமான நகரத்தை தெலுங்கானாவிடம் இழந்தபிறகு அமராவதியை தலைநகரமாகக் கொண்டு இந்த அசத்தல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ஆந்திர மாநிலம்.

அத்தனை தொழில்முனைவோரும் ஆந்திராவை நோக்கிப் படையெடுக்க அப்படி என்ன அந்த மாநிலத்தில் சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாமா!

முதல் செய்தி மிக முக்கியமான செய்தி என்னவென்றால் ஆந்திர மாநிலத்தின் உள்கட்டமைப்பு மிகவும் அற்புதமாக இருக்கின்றது.

நான்கு புதிய கடற் துறைமுகங்கள்,ஏழு புதிய பட்ஜெட் விமான நிலையங்கள், தரமான சாலைப் போக்குவரத்து, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் மெட்ரோ ரயில் சேவை என்று போக்குவரத்தில் பட்டையைக் கிளப்புகிறது ஆந்திரா.

தொழில்நிறுவனங்கள் இயங்குவதற்கு  நீர் வசதி அடிப்படைத் தேவையாக இருக்கும் அல்லவா? அதனால் தொழில் நிறுவனங்களுக்கு குழாய் வழியாக நீர் வழங்கும் சேவையை சிறப்பாக வழங்குகிறது ஆந்திர அரசு.

தொழில் நிறுவனங்கள் செயல்பட மின்சாரம் அத்தியாவசியத் தேவை. இதை மனதில் கொண்டு சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின்சாரத்தை உருவாக்கும் திட்டங்களை இந்த மாநிலம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

ஒரு இடத்தின் சுற்றுலாத்துறை சிறப்பாக இயங்கினால் அந்த இடத்தில் தொழில் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை மனதில்கொண்டு சுற்றுலாத்துறையை சிறப்பாக இவர்கள் மேம்படுத்தி இருக்கிறார்கள்.

ஆன்மீக சுற்றுலா,பொழுதுபோக்கு சுற்றுலா என்று ஒவ்வொரு சுற்றுலாத்துறையையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றி வருகிறார்கள்.

சமூக-உள்கட்டமைப்பும் இந்த மாநிலத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. கருத்தரங்கக் கூடங்கள், சர்வதேசப் பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள், ரயில், பேருந்து நிலையங்கள் போன்றவையும் இங்கே முறையாகப் பராமரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

அதுமட்டுமல்ல, இந்த மாநிலத்தின் தலைநகரான அமராவதியை உச்சபட்ச தொழில் நகரமாக மாற்ற ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டினரின் உதவியோடு பல வேலைகளை இவர்கள் எடுத்து வருகிறார்கள்.

மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்தில் தொழில் தொடங்க நினைப்பவர்களின் விண்ணப்ப மனு முறையாகவும்,சரியாகவும் இருக்கும் பட்சத்தில் மிக மிக விரைவாக அவர்களுக்கு அனுமதி கிடைத்து விடுகிறது.

தொழில் தொடங்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அரசை அணுகுபவர்கள் அங்கே இங்கே என்று ஒவ்வொன்றுக்கும் அலைந்து அனுமதி வாங்கத் தேவையில்லை.

ஒற்றைச் சாளரச் சட்டம்(single window act) இங்கே சிறப்பான நடைமுறையில் இருக்கிறது. அதனால் ஒரே இடத்திலிருந்து தொழில் தொடங்கத் தேவையான அனைத்து நடைமுறைகளும் முடித்துக் கொடுக்கப்படும். இவை அனைத்திற்கும் ஒரேஒரு விண்ணப்ப மனு போதும்.

அதுமட்டுமல்ல, தொழிலை நடத்துவதற்கான கட்டிட அனுமதி மற்றும் கட்டிடடம் கட்டுவதற்கான அனுமதி போன்றவற்றை விண்ணப்பித்த ஏழு முதல் பதினைந்து நாட்களுக்குள் தந்துவிடுகிறார்கள். மின்சார இணைப்பு அனுமதி கொடுக்கப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் வழங்கப்பட்டு விடுகிறது.

அதுமட்டுமல்ல கணினி,தொழில்நுட்பம் போன்றவை சார்ந்த தொழில்களை மட்டும் ஊக்குவிக்காமல் விவசாயம்,உணவு பதப்படுத்துதல்,விண்வெளித்துறை,பாதுகாப்பு,ஆட்டோமொபைல்,பெட்ரோலியம்,ஜவுளித்துறை,சில்லறை வணிகம்,சுற்றுலா என்று அனைத்துத் துறை சார்ந்த தொழில்முனைவோரையும் தங்கள் மாநிலத்தில் தொழில் நடத்த ஊக்குவிக்கிறது ஆந்திர அரசு.

-லட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *