காசு செலவழித்துக்கொண்டு சுற்றுலா செல்கிறவர்கள் ஒரு ரகம் என்றால் சுற்றுலாவை மையமாக வைத்து தொழில் செய்து பணம் பண்ணுகிறவர்கள் எண்ணிக்கை மறுபுறம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

அப்படி சுற்றுலாவை மையமாக வைத்து என்ன மாதிரியான தொழில்கள் வர ஆரம்பித்திருக்கின்றன? பார்க்கலாமா!
டிராவல்ஸில் டிக்கெட் பதிவு செய்யும் காலம் மலையேறிவிட்டது. இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலத்திற்கு வந்துவிட்டோம். இதை அடிப்படையாக வைத்து நிறைய ஆன்லைன் நிறுவனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
டிக்கெட்கூஸ்(TICKETGOOSE)ரெட் பஸ்(RED BUS), GOIBIBO போன்ற ஆன்லைன் தளங்கள் பேருந்துப் பயணத்தை எளிமையாக்கிவிட்டன.

பேருந்துக் கட்டணம் எவ்வளவு?எத்தனை இருக்கைகள் பேருந்தில் முன்பதிவு செய்யபடாமல் இருக்கின்றன? எந்தெந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்? எந்தெந்த இடத்தில் இறங்கிக்கொள்ளலாம்-என்பது போன்ற அத்தனை செய்திகளையும் மேற்சொன்னது மாதிரியான ஆன்லைன் தளங்கள் கொடுத்து விடுகின்றன.

அதிலும் கோ ஐபிபோ (GOIBIBO), மேக் மை டிரிப் (MAKE MY TRIP) மாதிரியான தளங்கள் விமான முன்பதிவு சேவையையும் சலுகை விலையில் ஆன்லைனில் கொடுத்து வருகிறது.
இதனால் சுற்றுலா செல்பவர்களின் பெரும் ஆதரவு இந்தத் தளங்களுக்குக் கிடைத்துவருகிறது.
பயணங்களுக்கு மட்டுமல்ல தங்குமிடங்களையும் நாம் சலுகைவிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக நான்குநாட்கள்,ஐந்துநாட்கள் என்று ஒரு தொகுப்பாகவும் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யலாம். மேக் மை டிரிப்,ட்ரிவாகோ போன்ற தளங்கள் இந்த சேவையை கொடுத்துவருகின்றன.

பரபர சுற்றுலாத்தளங்களை பார்க்க விரும்பாத இயற்கை விரும்பிகளுக்காக “எக்கோடூரிசம்” என்கிற சுற்றுலாவை நடத்த ஆரம்பித்து நிறையத் தொழில்முனைவோர் வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்.
மனிதர்கள் பாழ்படுத்தாத இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதுதான் எக்கோடூரிசம் நடத்துபவர்களின் முக்கிய வேலை. குறிப்பாக அந்தந்த இயற்கை எழில்சூழ்ந்த இடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை இந்த எக்கோடூரிசம் மூலமாக பயணிகள் தெரிந்துகொள்ள முடியும்.
அதனால் ரசனையுடன் தொழில் செய்ய நினைப்பவர்கள் எக்கோடூரிசஸத்தை கையில் எடுக்கலாம்.
பயணத்தை ஒருவித த்ரில்லுடன் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது “அட்வென்சர் டூர்”(ADVENTURE TOUR) எனப்படும் சாகச சுற்றுலா.
இந்த சுற்றுலாவைத் தொழிலாக நடத்தி நிறைய வளரும் தொழில்முனைவோர் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். உறையும் பனி, செங்குத்தான மலைப்பகுதிகள் என்று இந்த சுற்றுலா அமைவதால் கவனமுடன் முறையான வழிமுறைகளுடன் இந்தத் தொழிலை தொழில்முனைவோர் நடத்தவேண்டியது அவசியம்.
ட்ரெக்கிங் என்று சொல்லப்படும் மலையேற்றம் மிக முக்கியமான தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது.ஆனால் முறையான அனுமதி,பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க ஊழியர்கள், போன்றவற்றை பெற்றுக்கொண்டு இந்தத் தொழிலை மேற்கொண்டால் வெற்றி அடையலாம்.
-சு.கவிதா




