என்னதான் திட்டம்போட்டு இந்தக் கடன் அட்டையைக் காலி செய்துவிட வேண்டுமென்று நினைத்தாலும் அதுவும் நம்மை விட மாட்டேன் என்கிறது. நாமும் அதனை விட மாட்டோம் என்கிறோமே…இந்த அடிமைப் பழக்கத்துக்கு ஒரு விடிவே கிடையாதா என்று ஏங்குகிறீர்களா? உங்களுக்காக சில ஆலோசனைகள்.
*பொதுவாக கடன் அட்டைகள் 3 ஆவது வாரத்தில் தங்கள் அறிக்கைகளைத் தயாரிக்கும். எடுத்துக்காட்டாக, 22 ஆம் தேதி தயாரிக்கப்படும் ஒரு கணக்கு அறிக்கைக்கு நீங்கள் அடுத்துவரும் 8 ஆம் தேதி பணம் செலுத்தியாக வேண்டும். ஆக, இந்த 15-16 நாட்களுக்குள் உங்களால் பணத்தை ஏற்பாடு செய்து முழு நிலுவைத்தொகையையும் செலுத்த முடியா என்று பாருங்கள். அவ்வாறு செலுத்தும் ஆற்றல் இருந்தால் உங்களுக்கு கடன் அட்டையால் பிரச்சனை ஏதுமில்லை.
*தவிர்க்கவே முடியாத சூழலில் குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்துவது பரவாயில்லை. ஆனால், விரைவாக மீதமுள்ள தொகையைச் செலுத்திவிட வேண்டும். அது முடியுமா? முடியாது என்றால் கடன் அட்டை சகவாசம் உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
*எப்படியோ கடன் அட்டைச் சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டீர்கள். இதற்காக ஆண்டுக்கு 24%-30% வரை (ஏ.டி.எம்மில் கடன் அட்டையை வைத்துப் பணம் எடுத்திருந்தால் 40% வட்டி என்பதை மறக்காதீர்கள்). வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் கடன் அட்டையை ஒழித்துக்கட்டிவிட்டு வெளியே வாருங்கள்.
*அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? நண்பர்கள், உறவினர்களிடம் வட்டியில்லாக் கடன் கிடைக்கிறதா என்று கேளுங்கள். கிடைத்தால் உடனடியாக அதனை வைத்து கடன் அட்டையின் முழுக்கடனையும் அடைத்துவிட்டு ஒரு கும்பிடு போட்டுவிடுங்கள்.
*சிலருக்கு சீட்டு போடும் பழக்கம் இருக்க்கும். அந்த வாய்ப்பு உஙகளிடம் இருந்தால் ஓரளவுக்கு தள்ளு தொகை சாதகமாக இருக்கும்போதே சீட்டை எடுத்து விடுங்கள். கடன் அட்டைக்கடனைக் கட்டிவிடுங்கள். சீட்டுக்கடனுக்கு பெரிய வட்டி கிடையாது. எனவே உங்களுக்கு நட்டம் வராது.
*சம்பளம் பெறும் ஊழியராக நீங்கள் இருந்தால் 10.5% வட்டி வீதத்தில் தனி நபர் கடன் பெற வங்கிகளில் உங்களுக்கு வாய்ப்புண்டு. அதனைப்பயன்படுத்தி கடன் வாங்கி, கடன் அட்டை நிலுவையைச் செலுத்தி மீண்டு வரலாம்.
*கைவசம் தங்க நகைகள் இருந்தால் அடமானம் வைத்தும் கடன் பெறலாம். அப்பணத்தை வைத்து நிலுவையைச் செலுத்துங்கள். 11 மாதங்களுக்குள் நகையைத் திருப்பிவிட வேண்டும். எனவே, கையில் பணம் இருக்கும்போதெல்லாம் நகைக்கடனுக்கான தவணையைச் செலுத்தி அதிலிருந்தும் மீண்டுவிடலாம்.
*கடன் அட்டை வைத்து, மேலாண்மை செய்வது ஒரு நிதிசார் ஒழுக்கம் சார்ந்த விஷயம். அது கைகூடும்வரை அந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.





