சென்னை, மே 20, 2025: “உங்களிடம் உள்ள பொருளை விற்கவேண்டுமென்றால் சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் விளம்பரம் செய்யவேண்டும்” என்று கண்ணதாசன் பதிப்பகத்தின் நிர்வாகியும் கவியரசர் கண்ணதாசனின் பேரனுமான முரளி கண்ணதாசன் தெரிவித்தார்.
பொதுநூலகத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு, வரும் 22 ஆம் தேதிவரை தொடர்ச்சியாக் 14 நாட்கள் 60 ஆளுமைகளைக்கொண்டு கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்துறைப்பயிற்சிகளை வழங்கிவருகிறது. அவ்வகையில் கண்ணதாசன் பதிப்பகத்தின் நிர்வாகி முரளி கண்ணதாசன் பயிற்சி வழங்கிப் பேசியதிலிருந்து….
”புத்தகச் சந்தையை விரிவாக்கப் புதிய வழிமுறைகளைப் பயன்படுத்துவது அவசியம். அதற்கு மூன்று விஷயங்கள் தேவை:
*நேற்று நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
*இன்று எங்கே இருக்கிறீர்கள்?
*நாளை எங்கே இருப்பீர்கள்?/இருக்க வேண்டும்?
என்ற மூன்று அம்சங்கள்தாம் அவை. தமிழகத்தில் 400 பதிப்பகங்கள் இருக்கின்றன. இவற்றுள் நீங்கள் எப்படி மாறுபட்டு சிந்தித்து வெற்றிபெறப்போகிறீர்கள் என்பது முக்கியம்.
எங்களிடம் இப்போது 980 தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கின்றன. பிடி.எப், சிடி, ஒலிப்புத்தகங்கள் என்று எல்லா வடிவங்களிலும் எமது புத்தகங்கள் வந்திருக்கின்றன. சமூக ஊடகங்களின் அனைத்து தளங்களிலும் எங்கள் நூல்கள் கிடைக்கும் வன்ணம் செய்திருக்கிறோம். எங்கள் இணையதளம், ஷாப்பிஃபை, யூ டியூப், இன்ஸ்டாகிராம், முகநூல், ஐ டியூன்ஸ் என்று எதையுமே நாங்கள் விட்டுவைக்கவில்லை. டிஜிட்டல் இமேஜிங் என்று சொல்லக்கூடிய -திரைப்பட அனுபவம் தரும் நூல்களை உருவாக்கியிருக்கிறோம். அவற்றுக்கான விளம்பரங்கள், திரைப்பட பாணியில் உருவாக்கப்படுகின்றன. தற்போது, தேவையான அளவுக்கு மட்டும் அச்சிடும் வகையில் நூல்களை அச்சிட்டுப் பதிப்பிக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அச்சுப்புத்தகங்களுக்கான காலம் முடிவடைந்துவிட்டது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. உண்மையில் அச்சுப்புத்தகங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
-கா.சு.துரையரசு.





