சென்னை, அக்.22: இந்தியாவின் முதல் சிற்பக் கலை சார்ந்த வீட்டு அலங்காரப் பிராண்டாகிய ’சிலை’ தனது நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தொடக்க காலம் முதலே முக்கியப் பங்காற்றி வரும் நான்கு ஊழியர்களுக்கு அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், உயர் ரக மாடல் கார்களைப் பரிசாக வழங்கியது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அந்த ஊழியர்கள் அளித்த பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் பரிசளிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
”ஒரு குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டபோது இந்த யோசனை உருவானது. அந்நிகழ்வுக்கு, நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருந்தார். அந்தக் காட்சி, சிலை நிறுவனத்தை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள், தாம் அனுபவிக்கும் அதே வசதியையும், பாதுகாப்பையும் தங்களது குடும்பத்தினருடன் அனுபவிக்க வேண்டும்” என்று விரும்பினேன் என்கிறார் சிலை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அருண் டைட்டன்.
கார் பரிசளிக்கும் நிகழ்வு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெரியாமல் ரகசியாமாக வைக்கப்பட்டிருந்ததாம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவுதான் இத்தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்கிறது அந்நிறுவனம்.
தொடக்க நிலை ஊழியர்களை அங்கீகரிப்பது நிறுவன நலன்களுக்கும் ஊழியர் நல்லுறவுக்கும் மென்மேலும் வலு சேர்க்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழு அமைந்திருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
-ஸ்ரீஜா





