சுய உதவிக்குழுக்கள்: ஓசையின்றி ஓர் ஊரகப் புரட்சி!

சுய உதவிக்குழுக்கள்: ஓசையின்றி ஓர் ஊரகப் புரட்சி!

இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றி நாடே பேசுகிறது. கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது இந்த முறை. இது கடந்துவந்த பாதை நெடியது.

 

பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மகளிர் சுய உதவி குழு என்பது இதில் குறிப்பிடவேண்டிய சேதி.  முதன்முதலில் 1973ல் வங்கதேசத்தில் சிட்டகாங் பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியர் முகமது யூனுஸ்தான் இம்முறையை அறிமுகம் செய்தார். 

No photo description available.
முகமது யூனுஸ் (படம்: அவரது முகநூல் பக்கம்)

அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்திருக்கிறார். தனது தேவைக்காக சிறிய தொகையை அவரிடம் கடனாகப் பெற்று, சிறிது சிறிதாக திரும்ப செலுத்திவந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. கஷ்டப்படும் பெண்களை ஒரு அமைப்பாக சேர்த்து சேமிக்க கற்று கொடுத்து அதன் மூலம் ஏன் தொழில் கடன் பெற்று கொடுக்க கூடாது என யோசித்தார். 

அதனையடுத்து உதயமானதுதான் முற்றிலும் பெண்களுக்கான ‘ கிராமின் வங்கி’.  இந்த அமைப்பில் 48 பெண்கள் சேர்ந்தனர்.  பின்னாட்களில் இந்த அரும்பணிக்கக முகமது யூனுஸ் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட கதை உங்களுக்குத்தெரியும். உலகக்கதை போதும்…அடுத்து உள்ளூர்க் கதைக்கு வருவோம்.

 நம்மூரில் சுய உதவிக்குழுக்கள் எப்போது உருவெடுத்தன என்பது தெரியுமா?  தமிழ்நாட்டில் தர்மபுரியில் மாதிரி குழுக்கள் 1983ல் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டன. 1989ம் ஆண்டு  பன்னாட்டு அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு சேலம், மதுரை, தென்னற்காடு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அறிஞர் அண்ணாவின்  தாயார் நினைவாக பங்காரு அம்மையார் பெயரில் குழுக்கள் ஆரம்பித்தனர். 

 தமிழ்நாடு மகளிர் திட்டம் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் 1986-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 1997-ம் ஆண்டு விழுப்புரம், கடலூர், விருதுநகர், கரூர்,வேலுர், சேலம், நாமக்கல், மதுரை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய 14மாவட்டங்களில் இது அறிமுகமானது.  

1998-99ல்  7 மாவட்டங்களுக்கும், 1999-2000ல் 7மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. 1991-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்தினார். தற்போது தமிழ்நாட்டில் 36,18,357 சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். 

யாருக்காக?

பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் திறன்களை வெளிப்படுத்தவும், வறுமையை ஒழிப்பதற்காகவும், தன்னம்பிக்கை மிகுந்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் மகளிர் சுய உதவிக்குழு அமைப்பு.

இந்த மகளிர் சுய உதவி குழுவில் 18 முதல் 55வயது வரை உள்ள மகளிர் சேரலாம், மேலும் 12 உறுப்பினர்களில் இருந்து 20உறுப்பினர் வரை ஒரு குழுவில்  உறுப்பினராக ஆகலாம்.

கோட்பாடுகள்

 சேமிப்பு, உள் கடன், வங்கி இணைப்பு, வங்கிக்கடன் பெற்று தருவது ஆகியவை சுய உதவிக் குழுக்களின் கோட்பாடுகளாகும். வீட்டிலேயே அடைபட்டு கல்வி அறிவு மறுக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பிறரின் தயவை எதிர்நோக்கி இருந்த பெண்கள் தற்போது உலகளவிய சாதனைகளை பெற வைத்த பெருமை சுய உதவி குழுக்களையே சாரும்.

ஒரு பகுதியை சேர்ந்த ஒருமித்த கருத்துக்களைஉடைய  பெண்களை ஒருங்கிணைத்து ஆரம்பித்தலே சுய உதவி குழு என்றும் சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம்.

நிதியுதவி

 இந்த சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து டார்கெட்  குழு ஆரம்பித்த 6 வது மாதத்தில் அவர்களுக்கு அரசு ஆதார நிதி வழங்குகிறது. 2015-2017 வரை தலா 10000/-ஐ  ஆதார நிதியாக வழங்கியது. 2021 ல் இருந்து தற்போது வரை 15000/- ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது.

சேமிப்பு, உள் கடன் என்பதெல்லாம் நேற்றைய கதை. தற்போது தொழில் கடன் பெற்று பல முன்னோடி நிறுவனங்களுக்கு சவால் விடும் நிலையில் சுய உதவிக்குழுக்கள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. 

 

       என்னென்ன குழுக்கள்?

  1. ஒத்த தொழில் குழு
  2. மாற்று திறனாளி குழு
  3. முதியோர் குழு
  4. விவசாய உற்பத்தியாளர் குழு
  5. கால்நடை உற்பத்தியாளர் குழு
  6. விவசாயம் சாரா குழுக்கள்  என்று பல்வேறு வகையான குழுக்கள் உள்ளன. 

இவற்றின் நலனுக்காகவே  கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் போல் மகிளா கூட்டுறவு வங்கி துவங்கியிருக்கிறது தமிழக அரசின் கீழ் இயங்கும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ஷைன் என்ற மகளிர் சுய உதவிக் குழு, தங்களது உழைப்பால் ஊட்டச்சத்து உணவு, குளியல் சோப் வகைகளை இயற்கை முறையில் தயாரித்து ஏற்றுமதி செய்துவருவதே இதற்கான துல்லியமான எடுத்துக்காட்டு ஆகும். இதே போல் இன்னும் பல மாவட்டங்களில் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைந்த குழுக்கள் எண்ணற்றவை.

“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கன் இடுக்கட் படும் ” – என்ற குறள், தங்களுக்கு வரும் இடையூறுகளையும், தடைகளையும், தகர்த்து முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போட்டு வரும் சுய உதவிக் குழு மகளிரையே சாரும்.

அரசின் பல்வேறு நல திட்டங்கள் அனைத்தும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதுடன், எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்து  முன்னேறுவது  அவர்களின் தனி சிறப்பு.

இன்றைக்கு தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் அசைக்க முடியாத பொருளாதர சக்தியாகவும், சுய சார்புள்ள சமூகமாகவும், தொழில் முனைவோராகவும்,பல இடங்களில் அரசியலின் போக்கையும் உள்ளாட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் மகளிர் சுய உதவிக்குழு சமூகம் உருவெடுத்திருக்கிறது. 

அது, மின்னல் வேகத்தில் முன்னோக்கிச் செல்கிறது. யாரும் கணிக்க முடியாத வேகம் அது!

-கிருஷ்ணவேணி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *