தொழிலாளர் சமூகம் எந்த சேமிப்பை நம்புகிறதோ இல்லையோ, நிச்சயம் அது வருங்கால வைப்பு நிதி (Provident Fund) சேமிப்பை நம்பும். காரணம், அதை நிர்வகிப்பது ஒன்றிய அரசு நிறுவனமான வருங்கால வைப்பு நிதி நிறுவனம். அதன் வட்டியையும் ஒன்றிய அரசே முடிவுசெய்கிறது. முதலுக்கு மோசம் இல்லை. வட்டியும் உண்டு. பாதுகாப்பும் உண்டு. வட்டிவீதம்தான் கொஞ்சம் இறங்குமுகத்தில் (8.25%) இருக்கிறது என்ற கவலை ஒரு பக்கம் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தற்போது ஒரு நேர்மறையான சேதி வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 10.52 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக இவ்வமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்றனர். இவ்வமைப்பில் இருந்து வெளியேறி திரும்பவும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. ஆக மொத்தம் 19.90 லட்சமாக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புதிதாக இவ்வமைப்பில் உறுப்பினராக சேர்ந்தவர்களில் 29% பேர் பெண்கள் என்பது குறிப்பிட வேண்டிய தகவல். நாட்டிலேயே அதிக அளவாக மஹாராஷ்ட்ரா அதிக அளவு புதிய உறுப்பினர்களை சேர்த்திருக்கிறது.
நல்ல விஷயம்தான். வட்டி கூடிவிட்டது என்ற நல்ல செய்தியையும் சொல்லுங்கள் ஐயன்மீர்!