பெருந்தொற்று: வழிகாட்டும் கேரளம்

பெருந்தொற்று: வழிகாட்டும் கேரளம்

நாடு முழுவதும் கொரொனா பெருந்தொற்றால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.  பல மாநில அரசுகள், நிலைமை கைமீறிப்போய்க்கொண்டிருப்பதாக நீதிமன்றங்களில் கைவிரிக்கும் காட்சிகளைப்பார்க்கிறோம். குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க, சில நம்பிக்கைக்கீற்றுகளையும் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக் கீற்றாக கேரளம் திகழ்வதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

களத்தில் முதலில்…

முதல் கொரொனா நோயாளியைக் கண்டறிந்தவுடன் கேரளம் விழித்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. காவல்துறையின் உதவியுடன் நோய்த்தொற்றாளர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  மாநில அரசின் கறார் தன்மையைப்பலரும் ‘கடுமை’ என்றே விமர்சனம் செய்தனர். ஆனால் அதுகுறித்துக்கவலைப்படாமல் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு கவனம் செலுத்தியது.

சரியான தேர்வு

நோயறிதல், சிகிச்சைகள், திட்டமிடல் என்று எல்லாவற்றிலும் கவனமாக இருந்தாக வேண்டிய சூழல். அப்படியென்றால்  அதற்கேற்ப பொறுப்பான ஒரு நபரை இப்பணிக்கு நியமித்தாக வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா டீச்சர் இதனை சிறப்பாக செய்துமுடிப்பார் என்று நம்பினார் கேரள முதல்வர். அவரது நம்பிக்கையை மெய்ப்பித்துக்காட்டினார் ஷைலஜா. கொரொனா சிறப்புப்பிரிவுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. தேவை ஏற்பட்டபோதெல்லாம் மருத்துவமனைகளிலேயே இரவும் பகலுமாக நாட்களைக் கழித்தார் ஷைலஜா.

கே.கே.ஷைலஜா டீச்சர்

அவரது பெருமுயற்சி இல்லாவிட்டால் கேரளா, பெருந்தொற்றால் கடும் சேதாரத்தை சந்தித்திருக்கும். கேரளாவாழ் தமிழர்களின் வசதிக்காக அவரது முகநூல் பக்கத்தில் தமிழிலும் (https://www.facebook.com/kkshailaja ) தகவல்கள், அறிவிப்புகளை வெளியிட்டு வருவது கவனிக்கப்படுகிறது.

வீடு தேடி சேவை

பள்ளிக்குழந்தைகள்முதல் ஏழை எளியவர்கள்வரை பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுக்கும் திட்டத்தை கேரள அரசு நடைமுறைப்படுத்தியது. ரேஷன் பொருட்களை வீடுகளில் கொண்டுபோய் சேர்க்க, ஸ்விக்கி, ஸொமொட்டோ போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்திக்கொண்டது மாநில அரசு. அது, பெருமளவு வெற்றிபெற்றது.

ஆக்சிஜன் உற்பத்தி

இன்று நாடே பதறிக்கொண்டிருக்கும் விஷயம், ஆக்ஸிஹன் பற்றாக்குறை என்பதாகும். கொரொனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மூச்சுத்திணறல்தான் பெரிய அளவுக்கு உயிர் பறிக்கும் காலன்போல ஆகிவிட்டது.

 

(படம்: நன்றி: பிக்ஸாபே)

செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் இருந்தால் அவர்களைப் பிழைக்க வைக்க முடியும், சிகிச்சையைத் தொடர முடியும் என்பதே யதார்த்தம். பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில்தான் கேரளத்தின் சமயோசித புத்தியை நாம் பாராட்ட வேண்டும். கொரொனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணித்த அம்மாநில அரசு, ரூ.58 கோடி செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் தொழிற்சாலையைத் தொடங்கியது. மாநிலத்தின் ஆக்சிஜன் உற்பத்தி, 58% அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 219 மெட்ரிக் டன் அளவுக்கு கேரளம், ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. கேரளத்தின் 10 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் குறைந்தது இரண்டு திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்கள் இருக்கின்றன.

கை கொடுக்கும் கை

ஆக்சிஜன் விஷயத்தில் தன்னிறைவு அடைந்துள்ள கேரளம், மற்ற மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களைத்தந்து உதவிவருகிறது. தமிழகத்துக்கு 72 டன் ஆக்சிஜனை வழங்கியிருக்கிறது. கோவாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 19 டன் ஆக்சிஜனைத்தந்திருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, பயன்பாட்டு விஷயத்தில் நாடே கேரளத்தை வியந்து பார்க்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் கேரள அரசின் பெருந்தொற்று நிர்வாகத்திறனைப்பாராட்டி வருகிறது. ஐ.நா.வின் சிறப்பு அழைப்பு, கார்டியன் உள்ளிட்ட வெளிநாட்டு ஏடுகளில் சிறப்புக்கட்டுரைகள், ‘முன்மாதிரி ஆளுமைகள்’ பட்டியல்களில் இடம் என்று கேரள சுகாதாரத்துறையும் அதன்அமைச்சர் ஷைலஜா டீச்சரும் அங்கீகரிக்கப்படுகின்றனர்.

கேரளத்திடமிருந்து நாடு கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அதிகம் இருக்கிறது.

-தமிழ்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *