என் சக ஊழியர் அவர். இது நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். அறிவாளி. எப்படி இவ்வளவு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்று வியப்பேன் நான்.
திடீரென்று ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. துக்கமான சேதிதான். திடீரென்று அவரது கணவர் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்திதான் அது. அந்தப் பெண் ஊழியர் அழுது புரண்டார். பார்க்கவே மிகவும் மனது கனத்துவிட்டது. அவருக்கு ஆறுதல் சொல்வது முடியாத விஷயமாகிவிட்டது எங்களுக்கு.
ஒருவழியாக அவரிடம் என் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டேவிட்டேன்.
“சார் ஏதும் இன்சூரன்ஸ் போட்டிருந்தாரா?”
“இல்லை” என்றார் பரிதாபமாக அவர்.
எனக்கு அதிர்ச்சி. ஏனென்றால் கணவன் – மனைவி இருவருமே நன்கு படித்தவர்கள். தங்களுடைய துறையில் பிரபலமானவர்கள். மற்றவர்களுக்கு பயனுள்ள அறிவுரை சொல்லக்கூடியவர்கள். ஆனால், சில ஆயிரங்களை செலவழித்து காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
என்னதான் நாம் நம் உடல் நலனை நன்கு பராமரித்துவந்தாலும் இன்றைய வாழ்க்கைப்பாணி சார்ந்த நோய்கள், விபத்துகள் முதலியவை எத்தகைய இடரை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும் என்று தெரியாது. எனவே, எந்த செலவை செய்கிறோமோ இல்லையோ, நிச்சயமாக ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தையும் ஒரு மருத்துவக் காப்பீட்டையும் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
எளிய, நடுத்தரப் பின்னணியைக் கொண்டவர்களால் லட்சத்தையும் கோடியையும் கொண்டு இடர்களையும் இழப்புகளையும் ஈடு செய்ய முடியாது. இதுபோன்ற திட்டங்களால் குறைந்தபட்சம் பொருளாதார சுழலில் நாம் மாட்டிக்கொள்ளாமல் காப்பாற்ற முடியுமே….
கொஞ்சம் யோசியுங்கள்.
-ம.விஜயலட்சுமி.
(Image by Gerd Altmann from Pixabay)