கோவை, நவ.7: கோவையின் முக்கியமான உணவகமான ஸ்ரீஅன்னபூர்ணா, மன்னிப்பு அறிக்கை ஒன்றை முகநூலில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி விவகாரத்தில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய இந்நிறுவனம், மன்னிப்பு கோரியிருப்பதைப் பார்த்து அதன் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் திகைப்படைந்தனர்.
ஆனால், அது, வேடிக்கையான மொழியில் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பரம் என்பது தெரிய வரவே வாடிக்கையாளர்கள் புன்னகைக்கின்றனர்.
அந்நிறுவனம் நேற்று, (நவ.6, 2025) முகநூலில் கோயம்புத்தூரின் உணவு கலாசாரத்தையே மாற்றியமைத்தமைக்காக ஒரு அதிகாரப்பூர்வமான மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன் சாராம்சம் இதோ:
’திடீரென்று அன்னபூர்ணாவில் ‘குட்டி பிரேக்’, நீண்ட நேர சந்திப்பு மற்றும் “Let’s meet at Annapoorna” போன்ற தினசரி அழைப்புகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக இருக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது ஒட்டுமொத்த கோயம்புத்தூர் நகரத்துக்கே ஒரு போதை பழக்கம் போல உருவாகும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. நல்ல உணவை ஆரோக்கியமான சூழலில் மனதுக்கு இதமாக பரிமாற நினைத்தோமே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. ஆனால் கூடுதல் உணர்ச்சிவசப்பட்டுட்டோம் போல, அது இப்போ அதிகமாகப் போய்விட்டதுபோல!
இப்போது அன்னபூர்ணா நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிய பின் மக்கள் காபி குடிக்கவோ, சாப்பிடவோ நேரம் காலம் பார்ப்பதேயில்லை.
மதிய உணவு இடைவேளை இப்போது எங்களால் மெதுவாக இரண்டாவது காலை உணவாக மாறியுள்ளது.
’சின்ன கடி’வேளை இப்போது நீண்ட உரையாடல்களாக மாறியுள்ளது.
இப்போது… கோயம்புத்தூரில் காலை 11 மணி என்பது “தயிர் வடை நேரமாக” ஆகிவிட்டது.
எங்கள் “சாம்பார் வடை” சீக்கிரமே விற்றுபோய் விடுவதால் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்பது எங்களுக்கு வருத்தமே.
கோயம்புத்தூரிலிருந்து வெளியே வாழ்பவர்களுக்கும் இங்கே எங்கள் உணவின் சுவையை தவறவிட்டு தவிப்பது நாங்கள் அறிவோம். அங்கு உங்களுக்கு கிடைப்பது எங்கள் உணவு போல் இருக்காதுதான்.
ஆரோக்கியமான உணவை வழங்க திட்டமிட்டுத்தான் இதை நாங்கள் தொடங்கினோம் . ஆனால் கூடவே நாங்கள் ஆறுதல், நினைவுகள் மற்றும் வீட்டின் உணர்வை வழங்கினோம் என்பதை நாங்கள் உணரவில்லை.
உணவை அன்புடன் சமைத்து, சூடாகப் பரிமாறும்போது, அது வெறும் உணவாக இல்லாமல் தனிப்பட்ட ஒன்றாக மாறும் இப்போது தான் நாங்கள் புரிந்து கொண்டோம்.
இப்படி நாங்கள் உங்களை பலவிதமாக வசியப்படுத்தி சங்கப்படுத்தி இருக்கிறோம், என்பதை புரிந்து கொண்டோம் அதனால் உங்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்…
உங்களுடைய சாதாரண பழக்க-வழக்கத்தை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டதுக்கு நாங்கள்தான் பொறுப்பு.
எளிய உணவுகளை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பி உண்ண நல்ல நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய தருணங்களாக மாற்றியதுக்கு எங்களை மன்னியுங்கள்.
இப்படிக்கு
அன்னபூர்ணா குழு’
-இவ்வாறு அந்த மன்னிப்புக் (!) கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவைக் குறும்பு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இதனைப்பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.





