வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நேற்றுதான் (ஜுலை 31) என்பதால் மாதச் சம்பளக்காரர்கள், நடுத்தர வர்க்கம் ஆகியோர் அடித்துப் பிடித்துக்கொண்டு வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்தனர்.
தங்கள் நிறுவனங்களில் படிவம் 16 ஐ வாங்கிப் பெறுவது, பட்டயக் கணக்காயர்கள், வரி ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்பது, குறைவாக வரி கட்டியிருந்தால் அதனை ஈடு செய்ய நேரடியாக வருமான வரித்துறையிடம் பாக்கி உள்ள வரியைச் செலுத்திவிட்டு ‘உஸ் அப்பாடா….!’ என்று பெருமூச்சு விடுவது, கூடுதலாக வரி கட்டியிருப்போர் வேறுபாட்டுத் தொகை திரும்பக் கிடைத்துவிடும் என்று மகிழ்ச்சியடைவது என்று நாடே நேற்று பரபரப்பாகத்தான் இருந்தது.
இரண்டு நாட்களாக லட்சக்கணக்கானோர் வரித்தாக்கல் செய்துவந்ததால் வருமான வரித்துறையின் இணைய தளம் வேகம் குறைந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சிலருக்கோ, இது ஒரு நல்ல செய்திபோலத் தோன்றியிருக்கும்போல. தொழில்நுட்ப சவால்களை அடுத்து, வரித்தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் அவர்கள்.
அதற்கேற்ப, பல்வேறு சமூக ஊடகங்களிலும் இந்த ‘அவகாச’ செய்தி தொடர்ச்சியாகவே வந்துகொண்டிருந்தது. இருப்பினும் கூடுதல் அவகாசம் எதையும் வருமான வரித்துறை வழங்கவே இல்லை என்பதே உண்மை.
இந்நிலையில் நேற்று நிலவரப்படி (மாலை 7 மணிவரை) மொத்தம் 7 கோடிப்பேர் தங்கள் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 50 லட்சம் பேர் தங்கள் கணக்குகளை சமர்ப்பித்திருந்தனர். இதனைத் தனது சமூக ஊடகக் கணக்குகளில் மகிழ்ச்சியாகத் தெரிவித்திருந்தது வருமான வரித்துறை.
–ம.விஜயலட்சுமி.





