நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது வளாக நேர்காணல் நடைமுறைகளை இவ்வாண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் இன்ஃபோசிஸ் ஆகும். இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் அக்.12 ஆம் நாள் தனது இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்தது. அதன் நிகர லாபம் 3.1% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது, ரூ.6215 கோடியை அது லாபமாக சம்பாதித்திருக்கிறது.
உலக அளவில் ஏற்பட்டுவரும் பொருளாதார சுணக்கத்தைக் கணக்கில்கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே வளாக நேர்காணல்கள்மூலம் புதிய ஊழியர்களை நியமிக்கும் நடைமுறைகளைப் பல நிறுவனங்களும் இவ்வாண்டு நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கின்றன.
-தமிழ்.