தமிழகத்தில் விற்பனையாகும் பாலில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை என்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
“கடந்த ஆண்டு மே மாதம் ஆவின் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்களைக் கலப்படம் செய்வதாகவும் தனியார் பால் நிறுவனங்களின் பாலை அருந்துவதால் குழந்தைகளுக்குக் கூட புற்றுநோய் வருவதாகவும் தெரிவித்தார்.
அதனை உண்மை என்று மக்கள் நம்பும் வகையில் தொடர்ந்து அவர் பொதுவெளியில் பேசிவந்ததால் அமைச்சரின் அடிப்படை ஆதாரமற்ற அந்தப் பேச்சினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அப்போது நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.
குறிப்பாக ஹட்சன்,விஜய்,டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழக பால்வளத்துறை அமைச்சரின் அந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து அதனை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியில் தங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் இறங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையை நாங்கள் தொடர்பு கொண்டோம். 2011-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2017-ம் ஆண்டு நவம்பர் பதினைந்தாம் தேதி வரை தமிழகம் முழுவதும் எந்தெந்தப் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால்பொருட்களின் மாதிரிகள் தரப்பரிசோதனைக்காக பெறப்பட்டது?
அதனை ஆய்வுக்காக பெற்று அனுப்பிய அதிகாரிகள் குறித்த விபரம் என்ன?அந்த மாதிரிகள் எந்தெந்த ஆய்வகங்களுக்கு தரப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது?அதன் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதா?உறுதி செய்யப்பட்டிருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பதினோரு கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆதாரங்களைக் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 01-12-2017 அன்று கடிதம் அனுப்பினோம்.
அதனையடுத்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகங்களில் சுமார் 24 மாவட்டங்களில் இருந்து எங்களுக்கு பதில் கிடைத்துள்ளன.
அந்தப் பதிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் 714 மாதிரிகள் பெறப்பட்டு தரப்பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் ஆவின் நிறுவனத்தின் நான்கு பால் மாதிரிகளும் தனியார் பால் நிறுவனங்களின் 26 மாதிரிகளும் சில்லறையாக விற்பனை செய்யப்படும் 58 பால் மாதிரிகளும் 49 பால் பொருட்களின் மாதிரிகளும் முழு விபரமில்லாமல் 35 மாதிரிகளும் என மொத்தம் 172 மாதிரிகள் தரம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இருந்து ஆவின் நிறுவனத்தின் ஆறு பால்மாதிரிகள் மட்டுமே தரப்பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளதும்,
அதில் உதகமண்டலம்(2012),அரியலூர்,தருமபுரி(2015)சேலம்(2017) ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட “ஆவின் நிறுவனத்தின் பால் மாதிரிகள் தரம் குறைந்தவை” என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தெரிவித்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“குறிப்பாக தமிழகம் முழுவதிலும் உள்ள இருபத்திநான்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள பதிலில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால்பொருட்களின் மாதிரிகள் மட்டுமே அதிக அளவில் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் பால்பொருட்கள் மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் அதிக மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதுவும் அந்தக் கடிதத்தின் மூலமாகத் தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
“மத்திய அரசின் உணவுத்தரக்கட்டுப்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுத் தமிழகத்தில் செயல்பட்டுவரும் ஆறு உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களையும் நாங்கள் தொடர்பு கொண்டோம்.
2011-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதிலிருந்தும் எந்தெந்த பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால்பொருட்களின் மாதிரிகள் தரப்பரிசோதனைக்காகப் பெறப்பட்டன?
அந்த மாதிரிகளில் உயிருக்குத் தீங்கிழைக்கும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதா?என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆதாரங்களை அங்கே கேட்டோம்.
அதற்கு அவர்கள், 2011-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதிலிருந்தும் 1607 பால் மாதிரிகளைப் பெற்று தரப்பரிசோதனையை நடத்தியதாகவும் அதில் தமிழகத்தின் எந்தவொரு தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களிலும் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனங்களை மட்டும் குறிவைத்து கடந்த 2017-ம் ஆண்டு ஒன்பது தனியார் நிறுவனங்களின் பதிமூன்று பால் மாதிரிகள் தஞ்சாவூர் பகுப்பாய்வகத்திற்கும்,பன்னிரெண்டு பால் மாதிரிகள் மதுரை பகுப்பாய்வகத்திற்கும் தரப்பரிசோதனை ஆய்விற்காக தமிழக பால்வளத்துறை சார்பில் அனுப்பப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.
பொதுமக்கள் அருந்தும் பால் தரமானதுதானா?” என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டுமானால் ஆவின்,தனியார் பால் நிறுவனங்கள் என்கிற பாரபட்சமின்றி அனைத்துப் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளையும் தமிழக பால்வளத்துறை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் ஹட்சன்,கே.சி.பால் (k.c.milk)போன்ற சில தனியார் நிறுவனங்களை மட்டுமே குறிவைத்து அவற்றை தரப்பரிசோதனைக்காக தமிழக பால்வளத்துறை அனுப்பியதை நாங்கள் கண்டிக்கிறோம்”என்றும் தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மட்டுமல்லாது சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்களும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்களும் சில பன்னாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
“குறிப்பிட்ட ஒரு சில தனியார் பால் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அந்த நிறுவனங்களின் பால் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதையும் ஆவின் அரசுத்துறை நிறுவனம் என்பதால் சொற்ப அளவில் மட்டுமே அந்நிறுவனத்தின் பால் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதையும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பாலில் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படவில்லை என்பது மத்திய அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள் நடத்திய தரப்பரிசோதனை முடிவுகள் வாயிலாகவும்,
“உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை” அதிகாரிகளின் தரப்பரிசோதனை முடிவுகள் வாயிலாகவும் உறுதியாகத் தெரிய வந்துள்ளதால்
கடந்த ஆண்டில் தவறான தகவல் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்திய தமிழக பால்வளத்துறை அமைச்சர்,கடந்த ஓராண்டில் பாலில் கலப்படம் தொடர்பாக தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற இருக்கும் பால்மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டபேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தனது தவறான செயலுக்காக தார்மீகப் பொறுப்பேற்று பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்றும்,
அமைச்சர் பதவியிலிருந்து அவர் பதவி விலக மறுக்கும் பட்சத்தில் தமிழக முதல்வர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.
-ஜெயலட்சுமி.