வயது ஒரு பொருட்டா?

 

முனைவு, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருந்தது. ‘சொந்தமாகத் தொழில் தொடங்க ஏற்ற வயது என்ன?’ என்பதுதான் கேள்வி. அந்தக்கேள்விக்கு வாசகர்கள் தங்கள் கருத்துக்களை அள்ளிக்கொட்டியிருந்தனர்.

 

’20 வயதில் தொடங்கலாம்’ என்று ஒருவர் சொல்ல, ‘40க்குள் தொடங்கிவிட வேண்டும்’ என்று இன்னொருவர் சொல்லியிருந்தார். ‘சொந்தத்தொழில் தொடங்க வயது ஒரு பொருட்டோ, தடையோ அல்ல, எப்போதுவேண்டுமானாலும் தொடங்கலாம்’ என்று ஒரு வாசகர் சொல்லியிருந்தார். இன்னொருவர் சொல்லியிருந்த கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. ‘உங்களுக்கு எப்போது தொழில் தொடங்க தன்னம்பிக்கை ஏற்படுகிறதோ, அதுதான் தொழில் தொடங்க சரியான தருணம்’ என்று சொல்லியிருந்தார் அவர்.

 

’இந்தக்கேள்வியை timeகேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விடை, சனிக்கிழமையன்று தெரியும்’ என்று சொல்லியிருந்தது. ஆனால் வாசகர்களின் கருத்துக்கள் இக்கட்டுரையின் ஆழத்தை அடுத்த கட்டத்துக்கே எடுத்துச் சென்றுவிட்டன. அதனால் சற்று கூடுதல் காலம் எடுத்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

 

சொந்தத் தொழில் தொடங்க ஏற்ற வயது என்ன என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி ஆகும். அதற்கு ‘இன்னதுதான் பதில்’ என்று சொல்லிவிடவே முடியாது.

 

காரணம், தொழில் தொடங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல. அவற்றுள் நமது வயதும் ஒன்று. ஆனால் வயது மட்டுமே தொழில் தொடங்குவதற்கான தகுதியாக ஒருபோதும் ஆகிவிடாது.

 

”அது முக்கியத்தகுதி இல்லையென்றால் அதைப்பற்றி நீட்டி முழக்குவானேன்?” என்று கோபிக்கிறீர்களா? சினம் வேண்டாம். வயது என்பது ’தகுதி’ இல்லையே தவிர, ஒரு தொழிலைச் சிறப்பாகக் கொண்டு செல்வதில் நமது வயதுக்கு நிச்சயம் ஒரு பெரும்பங்கு இருக்கிறது.

 

குறைந்த வயதில் தொழில் தொடங்கும்போது உங்களுக்கு ஒரு சாதகமான விஷயம் உண்டு. தோல்விகளைக் கண்டு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. தட்டுத்தடுமாறி, கற்றுக்கொண்டு மேலே வந்துவிடலாம். இளம் வயதில் சொந்தத்தொழில் செய்ய முன்வருவோரைப் பலரும் ஊக்குவிப்பர்.

 

வங்கியில் கடனுதவி வாங்கும்போது இளம் வயது ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படும். நண்பர்கள் வட்டத்திலும் நல்ல மரியாதையை நீங்கள் பெறுவீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக,ரிஸ்க் எடுக்கத் தோதான வயது என்பது இளம் வயதுதான். தொழில், மின்னல் வேகத்தில் வளரவும் பரவவும் இது ரொம்பவே உதவும்.

 

goals

அதேநேரத்தில் இளம் வயது என்பது பாதமாகப் பார்க்கப்படும் இடங்களும் உண்டு. சில வங்கிகளும் அரசு நிறுவனங்களும் முதல் பார்வையிலேயே “இவ்வளவு சின்னப்பையனா இருக்கீங்க… உங்களை நம்பி எப்படி லட்சக்கணக்கில் கடன் தர்றது?” என்பார்கள். சிலரோ, “உங்களுக்குப்பெரிய அளவுக்கு பிசினஸ் அனுபவம் இல்லையே! எப்படி நடத்துவீங்க?” என்று இளம் வயதையே உங்களுக்கு எதிரான விஷயம்போல நிறுத்துவார்கள்.

 

இளம் வயது விவகாரம் இப்படி. மத்திய வயதில் தொழில் தொடங்கினால் என்னவெல்லாம் ஆகும்?

 

நீங்கள் ஓரளவுக்கு அனுபவத்தைத் ‘தேற்றிக்கொண்டு’ 40 வயதில் தொழில் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு என்னவெல்லாம் சாதகமாக இருக்கும்?

 

உங்கள் வயதே உங்கள் அனுபவம் என்று மற்றவர்களால் (துணிகர முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், உறவினர்கள்) கணிக்கப்படும். அனுபவம் கொடுத்த நிதானத்தால் உணர்ச்சிவசப்பட்டு எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீங்கள் முடிவு செய்ய மாட்டீர்கள். லாபம், நஷ்டம்-எதுவந்தாலும் அதனைப் பக்குவமாக அணுகுவீர்கள். மனித வள மேலாண்மை உங்களுக்கு கஷ்டமான விஷயமாக இருக்காது. வியூகம் வகுத்து செயல்பட உங்கள் அனுபவம் உதவும்.

 

hat-1295150_1280

அதேநேரத்தில் 40 வயதில் நீங்கள் தொழில் தொடங்கும்போது சில சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். முதல் சவால், நீங்களேதான்!

 

‘வாழ்க்கையின் பெரும்பகுதி ஊழியராக வேலை செய்து வீணாகிவிட்டதே…இப்போதைய முயற்சியில் தோல்வி வந்துவிட்டால் நான் அம்பேல்!’ என்று நீங்கள் சில சூழ்நிலைகளில் நினைக்க வாய்ப்புண்டு.  இந்த எண்ணம், வெற்றிப்பாதைக்கு உங்களை அழைத்துச்செல்லாது. ’வெற்றி நிச்சயம்’ என்ற மனப்பான்மையுடன்  முயன்றால்தான் வெற்றிக்கனி கிட்டும்.

 

அடுத்த சவால், உங்கள் குடும்பம். ”பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து பெரிதாகும் நேரத்தில் இப்படி ரிஸ்க் எடுத்து திகிலூட்டுகிறீர்களே!” என்று உங்கள் வாழ்க்கைத்துணை கேட்கக்கூடும். உறவுகள் உங்களை ஊக்குவிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் வாழ்க்கைப்பாணி சரியாக இருக்காவிட்டால் உடல் ரீதியிலான தொந்தரவுகளும் உங்களுக்கு வரத்தொடங்கியிருக்கும். உடல் நலம் நன்றாக இருந்தால்தான் தொழில் சிறக்கும். சுவர் இருந்தால்தானே சித்திரம்!

 

ஆக,எந்த வயதில் தொழில் தொடங்கினாலும் அதற்குரிய சாதக-பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் இதில் எந்தப்பக்கத்தில் இருந்தாலும் சில பொதுவான சூத்திரங்களைக் கடைபிடித்தால் சொந்தத்தொழிலில் வெற்றி நிச்சயம்.

 

அந்த வகையில் ‘வயதைப்’பொருட்படுத்தாமல் சொந்தத்தொழிலில் வெற்றிக்கொடி நாட்டிய சிலரைப்பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் தயார் என்றால் இரண்டொரு நாட்களில் மீண்டும் சந்திப்போம்!

(தொடரும்)

 

-அருண்மொழி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *