சந்தையை உருவாக்கிய ‘சக்ரவர்த்தி’ (ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்-6)

வாகனத்துறையில் நொடித்துப் போயிருந்த ஒரு  நிறுவனம், ஒரு புதிய  வாகனத்தை  அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் ஒரு சந்தை ஆய்வு நிறுவனத்தைப்  பணிக்கு அமர்த்தியது.

 

ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையும், மூத்த நிர்வாகிகளின் கருத்தும், “எரிபொருள்தேக்கி (Petrol Tank) பெரிதாக இருக்கிறது.  இது போன்ற வாகனங்கள், 5000 எண்ணிக்கை விற்றால் பெரிய விஷயம். இது போன்ற விளையாட்டு வாகனங்களுக்கான சந்தை இந்தியாவில் இல்லை” என்றே கூறின.

 

 

“ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு பொருளை உருவாக்கினால் அதற்கான சந்தையை நாமே உருவாக்க முடியும்”, என்று பதிலளித்தார் நமது ’சக்ரவர்த்தி’.

 

அவர் தான், “ராஜீவ் பஜாஜ் (Rajiv Bajaj)”, பஜாஜ் குழுமத்தின் தலைமை நிர்வாகி. தொழில் உலகில் மிகவும் பரிச்சயமான பெயர். தனது தந்தை ராகுல் பஜாஜின் (Rahul Bajaj) நொடித்துப் போன நிலையில் இருந்த இருசக்கர வாகனத் தொழிலை கையிலெடுத்து, தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு மீட்டு, அதை மீண்டும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக்கிய ’சக்ரவர்த்தி’ அவர்.

 

Rajiv_Bajaj

இந்தியாவில் 1980-90களில் “நமது பஜாஜ் (Hamara Bajaj)” என்று சக்கைப் போடு போட்ட நிறுவனம்தான் அது. எனினும், 1991க்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்போட்டியில் தனக்கென ஒரு இடம் பிடிக்க முடியாது தவித்தது. அதற்குப் பிறகு சந்தையில் நுழைந்த நிறுவனங்களெல்லாம் கொடி கட்டி பறந்த சமயம் அது. செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த பஜாஜ் நிறுவனத்தில், ராஜீவ் கொண்டுவந்த மாற்றம் ஒன்றுதான். அந்த மாற்றத்தின் பெயர் ’தொழில்நுட்பம்’.

 

ஒரு வாகனம் (Product), ஒரே ஒரு வாகனம், இந்திய இருசக்கர வாகனத் துறையின் போக்கையே மாற்றியது. இந்திய சந்தையும், இளைஞர்களும், ஏன் இந்தியத் தெருக்களும் கூட இரு கரங்களை நீட்டி வரவேற்ற அந்த வாகனம், “பல்சர்” (Pulsar).

 

நான் சொல்வதற்கு முன்பே அதை பெரும்பாலும் நீங்கள் யூகித்திருப்பீர்கள். அது தான் ராஜீவ் பஜாஜின் சிறிய எண்ணத்தில் உருவான பொருளின் தாக்கம். அது வரை எரிபொருள் சிக்கனம் செய்யும், சிறிய உந்துசக்தி திறன் கொண்ட, சிறிய வாகனங்களையேப் பார்த்து வந்த இந்தியப் பெருமக்களின் கண்களுக்கு, அதிவேக திறன்,  நவீனத் தடுப்புக்கருவி (Disc Brake), DTSi, பெரிய எரிபொருள்தேக்கி (Tank) என்று வந்த “பல்சர்” தனித்துத் தெரிந்தது; அதனாலேயே லட்சக் கணக்கில் விற்றுக் குவித்தது.

 

கஷ்டமாச்சே!

இந்த வாகனத்தை  வடிவமைத்து பஜாஜின் விளம்பர நிர்வாகியிடம் காண்பித்த போது, அவரும் கூட “5000 வாகனங்கள் விற்றால் பெரிய விஷயம்” என்றாராம். ஏனெனில், பெரிய ரக வாகனங்களுக்கு அப்போது இருந்த சந்தை அவ்வளவுதான். ஆனால், வண்டி அறிமுகமான புதிதில் வந்த “நிச்சயமாக ஆண்மகன் தான் (Definitely Male)” என்ற விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். இரண்டு பெண்கள் நடந்து செல்வதைப் பார்த்து திரும்பும் ஆண்களைப் போல், “பல்சர்” வண்டியும் திரும்புவது போல உருவான விளம்பரம் அது.

 

இந்த வாகனத்தின் தொழில்நுட்பம் அது வரை சந்தையில் இல்லாத ஒன்று. வாகனத்தை  வாங்கியவர்கள் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னலிலும் (Traffic Signal) காட்டிய பெருமை பொங்கிய முகம், சாலையில் அது சீரிய விதம்,  மற்ற வாகன ஓட்டிகளையும் அந்த வாகனத்தை நோக்கி இழுத்தது.

 

தனது தந்தையின் இரு சக்கர வாகனத் தொழிலில் இருந்த குறைகளைக் களைந்து, தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு ராஜீவ் உருவாக்கிய இரும்புக் குதிரை தான் “பல்சர்”. இதன் மூலம், சென்ற தலைமுறை செய்து வந்த தொழிலில் இருக்கும் சிறு குறைகளைக் களைந்து அதைப் பெரிய அளவில் முன்னெடுக்க முடியும் என்பதைத் தான் ராஜீவ் பஜாஜ் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

 

மேலும் சொல்லாமலே ராஜீவ்  உணர்த்திய இன்னொரு விஷயம், “தொழில்நுட்ப உதவியுடன் வெளிவரும் புதிய பொருட்கள் (அல்லது கண்டுபிடிப்புகள்), ஆய்வு நிறுவனங்களின் கூற்றைக்கூட பொய்யாக்கும்; மேலும், ஏற்கனவே சந்தை விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குள் அது  அடங்காது” என்பதுதான். பல்சர் போன்ற பெரிய ரக வாகனங்களுக்கான சந்தை, அது வெளிவரும்வரை இருந்திருக்கவில்லை. ஆனால், சந்தையில் ஒரு புதிய பிரிவை (Segment) பல்சர் உருவாக்கியது. அது இன்றும் நிலைத்திருக்கிறது.

 

Red_Bajaj_Pulsar_outside_hotel_in_Goa

’என்னிடம் உத்திகளே (idea) இல்லை. ஆனால், தொழில் துவங்கும் எண்ணம் மட்டுமே இருக்கிறது’ என்று சோர்ந்து போய் நிற்காமல், தனது தந்தையின் தொழிலை ஒட்டியே தனது கனவை விரிவாக்கி, தன் பொருளுக்கென்று இல்லாதிருந்த ஒரு சந்தையையே உருவாக்கிய நமது சக்ரவர்த்தியைப் போல நாமும் செயல்படலாம்.

 

”அதெல்லாம் சரி தான் தம்பி. ஆனால், அவரின் தந்தை ராகுல், “பஜாஜ்” என்கிற பெரிய தொழிலை நடத்தி வந்தார். எங்கப்பா வெறும் பலசரக்குக் கடைதான்  வைத்திருக்கிறார் என்று சொல்பவரா நீங்கள்?” இது கொஞ்சம் சிக்கலான சமாச்சாரம். முதல்ல நாம தொழில்னா என்னனு புரிஞ்சிக்கணும், பிறகு இதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

 

தொழில்

 

‘தொழில்’ என்பது, ஒருவரது வாழ்க்கைக்கான பணத் தேவைக்காக ஒரு பொருளை உருவாக்குவது (Manufacuring/Creating a Product), வாங்கி விற்பது (Buying and Selling) அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்குவது (Providing Services) ஆகும்.

 

நான் சொந்தமாகத் தொழில் புரிகிறேன். “நான் ஒரு வணிகன் (Business Man)” என்று ஒருவர் கூறினால், நாம் அவர் முன் வைக்கும் கேள்விகள் பெரும்பாலும் “அப்படியா? என்ன நிறுவனம்? எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?” என்பதை ஒட்டியே இருக்கும். அனைவரும் மறந்து விடும் ஒரு விஷயம், சில  தொழில்களை தனிநபர் மட்டுமே நடத்த முடியும் என்பதுதான். சில தொழில்களை குறைந்தபட்ச முதலீட்டைக் கொண்டே துவங்க முடியும்.

 

Running_icon_-_Noun_Project_22889.svg_

ஆக, தொழில் முனைவதற்கு முன் எம்மாதிரியான தொழிலைத் துவங்குவது என்று தெரிந்துக் கொள்வது அவசியம். வெகுமக்கள் பார்வையில், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடையே தொழில் என்பது பெரிய நிறுவனம் நடத்தி பெரிய அளவில் பணம் சம்பாதிப்பது என்றே பதிந்திருக்கிறது.

 

ஒரு தொழிலானது பல வடிவங்களில் (Different Forms) நடக்கலாம். அவற்றுள் முக்கியமான வடிவங்கள்:

 

  1. தனித்த உரிமை/பொறுப்பு (Sole proprietorship)
  2. கூட்டு உரிமை/பொறுப்பு (Partnership)
  3. நிறுவனம் (Corporation/Company/Private Limited)

 

நீங்கள் துவங்க விரும்பும் தொழிலுக்கான ‘உத்தி (Idea)’ தான், பெரும்பாலும் உங்களின் தொழில் வடிவத்தை நிர்ணயிக்கும். சில உத்திகள், உங்களைத்  தனியாகத் தொழில் துவங்க சொல்லும். சிலத் தொழில்களை கூட்டு வைத்து துவங்குவது தான் சரியாக இருக்கும். தனியாக துவங்கி, பின்பு தொழிலின் தேவைக்கேற்ப கூட்டு வைத்துக் கொண்டு முன்னேறியவர்கள் பலர்.

 

ஆக, உங்கள் தொழிலுக்கான ‘உத்தியை’ முதலில் தீர்மானித்து விட்டால், எந்த வடிவத்தில் துவங்குவது என்பதை உங்கள் உத்தியே சொல்லி விடும். எதேச்சையாக நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த உத்தியை வைத்து தனி ஒருவனாக துவங்கி தனது துறையில் அது வரை இல்லாத புதுமையைப் புகுத்தி வென்றார் ஒருவர். அந்த  ‘தனி ஒருவரைப்’ பற்றி, பார்க்கலாம். காத்திருங்கள்.

(வளரும்)

– கதிரவன் மனோகரன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *