ஜி.எஸ்.டி: வரமா, சாபமா?

பொருட்கள் மற்றும் சேவைகள்மீது விதிக்கப்பட்டுவந்த மறைமுக வரிகளுக்கு மாற்றாக நாடெங்கும் ஒரு ஒருங்கிணைப்பு வரி விதிப்பு வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக எழுப்பப்பட்டுவந்தது. அதன் விளைவாக உருவெடுத்ததுதான் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி. இதை அரசும் ஊடகங்கள் பலவும் கொண்டாடியிருக்கின்றன. அதே அளவுக்கு எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சம்பாதிக்க இந்த வரிவிதிப்பு முறை தவறவில்லை.

 

நேரடி, மறைமுகவரி என்று இரண்டு வரிவிதிப்பு முறைகள் மிகவும் சிக்கல்களை உருவாக்கிவந்திருக்கின்றன. வணிகர்களும் பல்வேறு சட்டங்களின்கீழ் வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்வது, அதற்காக பல்வேறு கணக்கேடுகளைப் பராமரிப்பது என்று ஏகப்பட்ட நடைமுறைகள் இருந்துவந்தன. இவற்றை எளிதாக்கும் பொருட்டு நாடெங்கும் பொதுவான ஒரு வரிவிதிப்பு முறை கொண்டுவருவது அவசியம் என்று தொழில் துறையும் வலியுறுத்தி வந்தது. இதற்கான தொடக்க கட்ட வேலையை முந்தைய காங்கிரஸ் அரசு செய்தது. அதனை இப்போதைய பா.ஜ.க. அரசு சட்டமாக்கி அமல்படுத்தியிருக்கிறது. வருமானவரி, சுங்கவரி போன்ற ஒரு சில வரிகள் தவிர மற்ற அனைத்துவரிகளும் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் வந்துவிட்டன.

GST_India

எப்படி இயங்குகிறது?

 

ஜி.எஸ்.டி.யின் வரிவிதிப்பு முறைகள் மூன்று அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

லோ ரேட் டேக்ஸ்

ஸ்டாண்டர்டு ரேட் டேக்ஸ்

சொகுசு மற்றும் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கான வரி-ஆகியவையே அவை.

 

ஒரு பொருளை உற்பத்தி செய்ததில் இருந்து அதை விநியோகம் செய்து விற்பனை செய்வதுவரை பல கட்டங்களில் வரி  கட்டத்தேவையில்லை என்பதே ஜி.எஸ்.டியின் முக்கியமான சிறப்பம்சம். அடுத்த முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? பல்வேறு அரசு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்ட பல்வேறு வரிக்ளை மாற்றியமைத்து, இந்தியாவில் ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பானது முன்பிருந்த சுமார் 15 மறைமுக வரிகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது என்பதுதான். அதையும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா!

 

வரிச்சீரமைப்பு:

மத்திய அரசின் மதிப்புக்கூட்டு வரியை (சென்வாட்) உற்பத்திவரி எனப்பட்ட கலால் வரி, இறக்குமதி வரியான சுங்கவரி, மாநில அரசின் மதிப்புக்கூட்டுவரி  போன்றவற்றுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி உருவாகியுள்ளது. இதுதவிர, திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கைவரி, உணவகங்களில் விதிக்கப்படும் சேவை வரி, சொகுசு வரி போன்றவற்றுக்கு ஒரு மாற்றாக ஜி.எஸ்.டி. வரி ஒற்றை வரி விதிப்பு உள்ளது.

 

மேலும் மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச்செல்வதற்கு விதிக்கப்பட்ட சரக்கு நுழைவுவரி, நுகல்ர்பொருள் மற்றும் நகர அமைப்புகளால் வசூலிக்கப்பட்ட ஆக்ட்ராய் (நகர சுங்கவரி) ஆகியவையும் மேற்கண்ட பட்டியலில் சேர்ந்துவிட்டன என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துவிட்ட ஜி.எஸ்.டி, இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு முதன்முறையாக பெரிய அளவில் அறிவிக்கப்பட்ட ஒரு வரிவிதிப்பு முறையாகும்.  எந்தவொரு விஷயமும் புதிதாக அறிமுகமாகும்போது, அதில் குழப்பங்கள், ஐயங்கள் பிறப்பது இயற்கையே. அது ஜி.எஸ்.டிக்கும் பொருந்தும். இந்த வரிவிதிப்பு தொடர்பான குழப்பங்கள் விரைவில் தெளிந்துவிடும் என்கின்றனர் பொருளியல் அறிஞர்கள்.

 

இதுநாள்வரை நடைமுறையில் பல்வேறு வரிகள் இருந்ததால்தான் பலரும் வரி கட்டாமல் தப்பிக்க முடிந்தது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஒற்றைப்புள்ளியில் அனைவரையும் இணைத்துவிட்டது. எனவே அரசின் வருவாய் கூடும் என்பது அவர்களது கருத்து.

 

சிறுதொழில்களுக்கு சாதகமா?

இந்த வரிவிதிப்பு சிறுதொழில்களுக்கு சாதகமா, பாதகமா என்று சூடான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அதுகுறித்து விரிவாகப்பார்ப்போம். பொருள் மற்றும் சேவை வரி விதிப்பால் முன்பு நிலவிவந்த பல வரிகளின் அடுக்கு விளைவுகள் தணிக்கப்படுகின்றன. ஒற்றை வரிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளீட்டு வரிச்சலுகை (இன்புட் டேக்ஸ் கிரடிட்) மற்றும் பொதுவான சந்தை உருவாகும் வழி ஏற்பட்டுவிட்டது.

 

மொத்தமுள்ள பல நூறு பொருட்களில் 7 விழுக்காட்டுப் பொருட்கள்  வரி விதிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அரிசி, கோதுமை, பால் போன்றவை இதில் அடங்கும். 17 விழுக்காட்டுப் பொருட்களில் 12 விழுக்காடு வரிவிதிக்கப்பட்டுள்ளன. 43% பொருட்கள் 18% வரி வரம்புக்குள் கணக்கிடப்பட்டுள்ளன. 19% பொருட்கள் 28 விழுக்காடு வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

 

ஜி.எஸ்.டி.நடைமுறைக்கு வந்தால் பொருட்களின் விலை உயரும் என்ற கருத்து, தற்போது வரி விதிப்பு செயல்பாட்டுக்கு வந்ததும் குறைந்துள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது.  அதற்கு அவர்கள் கூறும் காரணம் இதுதான்:

 

இயந்திரங்களுக்கான வரி, முன்பு 28% ஆக இருந்தது. இப்போது அது 18% ஆகக் குறைந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு பொருள் தயாரிக்கப்படுவதிலிருந்து பல கைகள் மாறி, இறுதியாக நுகர்வோரை அடைகிறது. இப்படி கைகள் மாறும்போது தேவையின்றி வரி கட்டவேண்டியிருக்கும்.

 

ஆனால் ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இது தடுக்கப்படுகிறது. ஆனால் நுகர்பொருட்கள் அனைத்துக்கும் வரி செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, நேர் வழியில் தொழில் செய்யாத அனைவருக்கும் நிச்சயம் நெருக்கடி வரும். கணக்குகள் தயாரிக்கும்போது ஒவ்வொன்றுக்கும்  ஆதாரங்களின் அடிப்படையில்தான் வரிவிதிப்பு இருக்கும். தப்பிக்கவே முடியாது.

 

கூடுதல் சுமையா?

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடவடைந்தும்கூட, இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் பலரும் திணறிவருகின்றனர். முக்கியமாக, சிறு-குறு-நடுத்தர தொழில்முனைவோர். இவ்வளவு காலம் பெரிய அளவிலான எந்த ஒரு அரசு நடைமுறைகளுக்குள்ளும் வராமல், சுய தொழில் செய்துவருவோர் திடீரென்று பெரிய மாற்றத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

 

சிறு, குறுந்தொழில்கள் செய்துவருவோரில் பலரும் அதில் பணியாற்றுவோரும் தங்களது எதிர்காலக்  கனவுகளில்  அம்பானி, டாடா கனவுகளில் இருப்பர். இதற்குமுன்பு அவர்களுக்கு ஏற்பட்டுவந்த அனைத்து பிரச்சனைகளும் நிர்வாகம், சூழல் ஆகியன சார்ந்தவையாக இருந்தன. தற்போது அது ஜி.எஸ்.டி மூலமாக அரசுத்தரப்பில் இருந்து உருவாகியுள்ளது என்பது அவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணம் இவைதான்:

 

சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு என்னதான் அரசுகளால் முன்னுரிமை தரப்படுவதாகக் கூறப்பட்டாலும் வங்கிக்கடன் பெறுவது குதிரைக்கொம்புதான். மேலும் சீனப்பொருட்கள் இங்கு குவிவதும் தொடர் பிரச்சனையாகவே இருக்கிறது.

 

இப்படி அனைத்து சவால்களையும் போராடி சமாளித்துவரும் தொழில்முனைவோர் எழுந்துநிற்க முயலும் நேரத்தில்தான் போதுமான கால அவகாசம் கொடுக்காமல்  அவசர கோலத்தில் ஜி.எஸ்.டி திணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பெரிய அளவுக்கு கல்வி இல்லாத தொழில்முனைவோருக்கு இதுபோன்ற புதிய நடைமுறைகள், கணக்கு முறையை மாற்றுவது ஆகியவை கடினமான விஷயங்களாகும். கணக்கு வழக்குகள் கணினிவழியாக மேற்கொள்வது என்பது அவர்களை திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

 

தொழில் போராட்டங்களைச் சந்தித்துவரும் அவர்கள், தங்களுடைய இழுபறி வருமானத்தின் ஒரு பகுதியை கணக்கு பராமரிப்பை செய்வதற்காக செலவிடுவது அவர்களை துணுக்குற வைத்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பின்படி, ரூ.20 லட்சத்துக்குள்  தொழில் செய்பவர்கள்தாம் பதிவெண்ணைப் பெற முடியும்.

 

வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்யும்போது அது சார்ந்த அனைத்து பில்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால்தான் அது தணிக்கைக்கு உட்படும். அதனால் ஜி.எஸ்.டி பதிவெண் நிறுவனங்களுடன் மட்டுமே  தொழில் முனைவோர்  தங்களுக்கான கொள்முதல்களை செய்வர். அதேநேரத்தில் ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு ஜி.எஸ்.டி பதிவெண்  பெற முடியாத  நிலையில் செயல்படும் சிறு தொழில்முனைவோர் அவர்களுடன் எப்படி தொழில் சார்ந்த பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்? இது சிறு, குறு தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று.

 

ஒற்றைவரி-ஒரே விலை

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து பெரும்பாலும் பிராண்டட் மற்றும் சிறுதொழில் நிறுவன தயாரிப்புகளுக்கும் சமமாக இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை பில் இல்லாமல், இன்வாய்ஸ் இல்லாமல் நடந்த தொழில்கள் இனியும் அவ்வாறு தொடர முடியாது.  பிராண்டட் பொருட்களைவிட சிறு தொழில் நிறுவனங்களின் விலை குறைவாக இருந்தமைக்கு அதுவே காரணம். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி,அனைவரையும் ஒரே கோட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

 

இப்படி எல்லா உற்பத்தியும் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் விலை வித்தியாசம் இல்லாத  சூழலில் எல்லோரும் பிராண்டட் பொருட்களைத்தான் வாங்க விரும்புவர். இதனால் தொழில் போட்டி அதிகரிக்கும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு இது பெரும் சவாலாக அமையும்.

 

அதேபோல  மாநில அளவில் மட்டுமே தொழில் செய்துவந்தவர்களும் இனி மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். பெரிய நிறுவனங்களுக்கு இதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. உள்ளூர் அளவிலான தொழில்முனைவோருக்கு நிச்சயம் இது ஒரு பெரும் சுமைதான்.

 

பொதுமக்களுக்கு….

பொதுமக்களுக்கு பாதகமான அம்சம் ஜி.எஸ்.டியில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. இதுவரை பெருந்தொழில் செய்துவந்தவர்களுக்கு இதில் பலனுண்டு. இவர்கள் இதுவரை செலவுகளை தங்கள் லாபத்திலிருந்துதான் செய்துவந்தனர். இனிமேல் வரி முழுவதையும் நுகர்வோர் தலையில் சுமத்திவிட்டு, அதை அவர்கள் வரியாக அரசுக்கு செலுத்திவிடுவர். அரசு, ஜி.எஸ்.டியால் விலைவாசி குறையும் என்கிறது. ஆனால் குறுகிய மனம் படைத்த வணிகர்களோ, விலையைக் குறைக்காமல், அதனை மென்மேலும் ஏற்றுகின்றனர். இதற்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அண்மையில் கோழிக்கறிக்கடைக்குச்  சென்றிருந்தேன். கோழிக்கறியின் விலையை ரூ.30 அதிகரித்திருந்தார் கடையின் உரிமையாளரான இளைஞர்.

 

chicken-1140_640

ஏன் அவ்வாறு விலையேற்றி இருக்கிறார்களாம் என்று கேட்டேன். அதற்கு “ஜி.எஸ்.டி வந்திருக்கில்ல சார், அதான் கறி விலையும் ஏறிடுச்சு!” என்று ஒரே போடாகப் போட்டார்.  உள்ளூர் கோழிக்கறிக்கு ஜி.எஸ்.டி. என்பது அராஜகத்தின் உச்ச கட்டம். ‘இந்தப் பொருட்களுக்கெல்லாம் ஜி.எஸ்.டி கிடையாதேப்பா?’ என்று கேட்டால் மேலும் கீழும் பார்த்து முறைக்கிறார்கள் வர்த்தகப் பெருமக்கள் பலரும். இவர்களைப் போன்றவர்களிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உருவாவதற்கு அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

 

இன்றைய நிலையில் உலகிலேயே பொருட்கள் மற்றும் சேவைக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அவ்வாறு பல சிரமங்களுக்கு இடையே வரி கட்டும் சாமானியருக்கு நீதி செய்தால்தான் இந்த வரிவிதிப்பு முறையின் நோக்கமும் நிறைவேறும். சிறு தொழில்களும் பிழைக்கும்.

 

-தஞ்சை என்.ஜே. கந்தமாறன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *