குச்சிகள் கோடிகள் ஆகுமா? (ஒரு புள்ளியிலிருந்து..தொடர் 5)

“வெறும் குச்சி எப்படிப்பா கோடிகளாச்சு?”

உங்கள் கேள்வி புரிகிறது. 

வெறும் குச்சிய கூட விக்கலாம்னு சொன்னா நம்ப மாட்டீங்க. செல்ஃபி ஸ்டிக்னு (Selfie Stick) சொன்னா நம்புவீங்களா?

selfie-1323391__180

2013-ல் ஆக்சுபோர்டு அகராதி, செல்ஃபி (Selfie) என்ற வார்த்தையை தனது அகராதியில் சேர்த்தது. அதற்கு அடுத்த வருடம், இந்தக் குச்சிக் கண்டுபிடிப்பை தான் டைம் பத்திரிக்கை (Time Magazine) 2014-ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. டிசம்பர் 2014-ல் மட்டும் சுமார் ஒரு லட்சம் செல்ஃபி குச்சிகள் விற்கப்பட்டன, என்கிறது ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) அறிக்கை ஒன்று.

இந்தக் குச்சிக்கு சந்தையில் இருந்த வரவேற்பு, சமீப காலத்தில் வேறு எந்த பொருளுக்கும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த குச்சிக்கு இருந்த வரவேற்பு தான், உலக அளவில் கோடிக்கணக்கில் விற்பனை செய்ய உதவியது. எனவே, முதலில் உங்களின் எண்ணத்திற்கு (Idea) சந்தையில் (Market) என்ன வரவேற்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

பொருளுக்கும், தொழிலுக்கும் இருக்கும் சந்தையையும் (Market) அளவிடுவது

1. உங்கள் பொருளுக்கு அல்லது தொழிலுக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? code-1486361_1280
2. உங்களின் பொருள் காலத்திற்கு தேவையானதாகவும், ஏற்றதாகவும் இருக்கிறதா?
3. உங்களின் பொருள் அல்லது அதை போன்றதொரு பொருள் சந்தையில் ஏற்கனவே இருக்கிறதா? – ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பொருளை கூட நாம் சிறிய மாற்றத்திற்கு உட்படுத்தி உங்கள் தொழிலை நிறுவலாம்.

உங்கள் பொருளுக்கு அல்லது தொழிலுக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்?

ஒரு பொருளுக்கு வாடிக்கையாளர்களின் தேவையும், எவ்வளவு சந்தை இருக்கிறது என்பதும் மிக முக்கியமாக ஆராயப் பட வேண்டும். உங்கள் பொருளுக்கான சந்தையை தெரிந்துக் கொள்ள தரவுகள் (Data) மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, நீங்கள் புதிதாக தலைக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விவரங்கள்:
1. இந்தியாவில் ஆண்டுக்கு எத்தனை புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன?
2. ஆண்களுக்கான வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? பெண்களுக்கான வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

மேற்கண்ட கேள்விகளுக்கு கிடைக்கும் விடையைப் பொறுத்து தலைக்கவசத்திற்கு இருக்கும் சந்தையை ஓரளவுத் தெரிந்து கொள்ளலாம். சரி, இதற்கான தரவுகள் (Data) எங்கே கிடைக்கும்? உங்களுக்குத் தேவையான குறைந்தபட்சத் தரவுகளை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு தரவுகளை பெற சில வழிமுறைகள்:

1. இந்திய அரசு “டிஜிட்டல் இந்தியா (Digital India)” திட்டத்தின் கீழ் நிறைய தரவுகளை (Data) “data.gov.in” என்ற இணையதளத்தில் வெளியிடுகிறது. உங்களின் தொழில் அல்லது பொருள், இந்திய சந்தையை மட்டுமே குறிவைத்து தொடங்கப்படுகிறது எனில் இந்த தளத்தில் இருந்து நீங்கள் உங்களுக்குத் தேவையான தரவை பதிவிறக்கி உபயோகிக்கலாம்.
2. நீல்சன் (Nielson), கார்ட்னர் (Gartner), மக்கின்ஸி (McKinsey) மற்றும் கேப்ஜெமினி (Capgemini) போன்ற உலக அளவில் சந்தை ஆய்வு செய்யும் நிறுவனங்களின் (Market Research) தரவுகளை படித்து உங்களின் தொழில் மற்றும் பொருளுக்கான தேவையை தெரிந்து கொள்ளலாம். குறிப்பு: உலக அளவில் இது போன்ற நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன.
3. மேலும் உங்களின் பொருளுக்கான ஆய்வுத் தரவுகள் கிடைக்காவிடில், இந்தியாவில் சிறியது முதல் பெரியது வரை சந்தை ஆய்வு நிறுவனங்களும் (Market Research Institutes) உள்ளன. இந்த நிறுவனங்களை நீங்கள் உங்களின் ஆய்வுக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
4. நீங்களே உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு ஆய்வு (Survey) நடத்தி முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
5. கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுடன் இணைந்து மாணவர்களின் துணைக் கொண்டு ஆய்வு (Survey) நடத்தலாம்.

உங்களின் பொருள் காலத்திற்கு தேவையானதாகவும், ஏற்றதாகவும் இருக்கிறதா?

பேசர் (Pager) ஒரு அருமையான கண்டுபிடிப்பு, ஆனால், அதை உபயோகிப்பதில் இருந்த சிரமத்தை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் பேசர் இன்றைய நிலையில் பேசர் (Pager) போன்ற ஒரு பொருளுக்கான தேவை கிடையாது. உங்களின் எண்ணம் (Idea) இதுபோன்ற பழைய சிந்தனையாக இருந்து விடக்கூடாது.

சரி, தேவையானதாகவும், ஏற்றதாகவும் இருக்கிறதா என்று எப்படி அறிந்துக் கொள்வது? இதைக் கள ஆய்வின் (Survey) மூலமே தெரிந்துக் கொள்ள முடியும். கள ஆய்வு அல்லது சந்தை ஆய்வு (Market Research) செய்ய இந்தியா முழுவதும் கூட நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன.

உங்களின் பொருள் அல்லது அதை போன்றதொரு பொருள் சந்தையில் ஏற்கனவே இருக்கிறதா?

வெற்றிகரமான தொழிலை நிறுவ “சந்தை ஆய்வுத் தரவுகள் (Market Reasearch Data)” மிகவும் முக்கியமான கருவியாகும். தரவுகளின் துணையுடன் உங்கள் தொழிலையும், அதற்கு இருக்கும் சந்தையையும் நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். சந்தை ஆய்வுத் தரவுகள் (Market Research Data) சில நேரங்களில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் பொருளைப் பற்றியும், அதன் சந்தை மதிப்பையும் தெரிவிக்கும். சரியான அணுகுமுறையைக் கடைபிடித்தால், ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பொருளைக் கூட அடிப்படையாய் கொண்டு நாம் நமது தொழிலை நிறுவலாம்.

“ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பொருளையா?”. எப்படி? சந்தையில் தோல்வியடைந்த ஒரு பொருளை கூட நாம் வெற்றிப் பொருளாக்கலாம். இதற்கும் செல்பி ஸ்டிக் மிகச் சிறந்த உதாரணம். உலகின் வட மூலையில் இருக்கும், கனடாவை சேர்ந்த வேனே ப்ரொம் (Wayne Fromm) செல்பி ஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, கிழக்கில் ஜப்பானை சேர்ந்த ஹிரோஷி யூதா (Hiroshi Ueda) இதேப் போன்றதொரு குச்சியைக் கண்டுபிடித்தார்.

மினோல்டா (Minolta) என்கிற புகைப்படக் கருவி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹிரோஷி யூதா (Hiroshi Ueda), தன் விடுமுறையை கழிக்க பிரான்சு நாட்டிற்கு சென்ற போது, தன்னையும் தன் மனைவியையும் புகைப்படம் எடுக்க அடுத்தவரின் உதவியை நாட வேண்டிய நிலை. அவருக்கோ தனது புகைப்படக் கருவியை மற்றவரிடம் கொடுக்க மனம் வரவில்லை போலும். ஊர் திரும்பிய பின்னர் யோசித்தார், செல்பி ஸ்டிக் போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தார்.

ஹிரோஷி இதா (Hiroshi Ueda) செல்பி ஸ்டிக் போன்ற பொருளை கண்டுபிடித்த போது, அதன் தேவை மிகவும் குறைவு. சொல்லப்போனால், அதற்கான தேவையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அந்தப் பொருள் பெரிய வெற்றிய ஈட்டவில்லை. ஹிரோஷி இதாவின் (Hiroshi Ueda) கண்டுபிடிப்பு, “அதிக தேவையில்லா 101 கண்டுபிடிப்புகள் (101 Unuseless Japanese Inventions)” என்ற புத்தகத்தில் கூட இடம் பெற்றது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் கெஞ்சி கவக்காமி (Kenji Kawakami).

(கெஞ்சி கவக்காமி ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவரின் கண்டுபிடிப்புகள் பல உங்களை சிரிக்க வைத்துவிடும். அவரின் கண்டுபிடிப்புகளில் பல மிகவும் குறைவாக பயன்படக் கூடியவை. அவரின் கண்டுபிடிப்புகளையும் அதன் உபயோகங்களையும் இணையத்தில் தேடிக் கண்டு மகிழுங்கள்.)

ஆனால், 2005-ல் வேனே ப்ரொம் (Wayne Fromm) செல்பி ஸ்டிக்கை கண்டுபிடித்த போதும் அதற்கான தேவை இல்லாமலே இருந்தது. இருப்பினும், திரு. வேனே ப்ரொம் (Wayne Fromm) தனது பொருளைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை (Infomercial) பரப்பினார். 2005-ல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இல்லை. ஆனால், வேனே ப்ரொம் (Wayne Fromm) உறங்கிக் கொண்டிருந்த தனது பொருளுக்கான சந்தையை எழுப்பி வெற்றி கண்டார்.

ஆக நாமும் வேனே ப்ரொம் (Wayne Fromm) போல, ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பொருளை கூட நாம் சிறிய மாற்றத்திற்கு உட்படுத்தி மிகக் சிறந்த தொழிலை நிறுவலாம்.

அதெல்லாம் சரி, என்னிடம் உத்திகளே (idea) இல்லை. ஆனால், தொழில் துவங்கும் எண்ணம் மட்டுமே இருக்கிறது. எவ்வாறு தொழிலுக்கான உத்திகளை தேடுவது என்பதா உங்களின் கேள்வி? அதற்கும் வழிகள் இருக்கிறது. பல நேரங்களில் உங்களின் தொழிலுக்கான உத்தி உங்கள் அருகிலேயே தான் இருக்கும். அது தெரியாமல் தான் நாம் உலகம் முழுக்க தேடிக் கொண்டிருப்போம். சில நேரங்களில் உங்களின் தந்தையின் தொழிலில் இருந்துக் கூட உங்களின் உத்திக்கான வித்து கிடைக்கலாம்.

நொடித்துப் போன நிலையில் இருந்த தனது தந்தையின் இருந்த தொழிலை, மீட்டு உருவாக்கி மிகப் பெரிய தொழிலை நிறுவினார் ஒருவர். தன் பொருளுக்கென அது வரை இல்லாதிருந்த ஒரு சந்தையையே உருவாக்கிய “சக்ரவர்த்தி” அவர். அவரைப் பற்றி, பார்க்கலாம். காத்திருங்கள்.

 

– கதிரவன் மனோகரன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

4 thoughts on “குச்சிகள் கோடிகள் ஆகுமா? (ஒரு புள்ளியிலிருந்து..தொடர் 5)”

  1. மிகவும் அருமையான பதிவு. அருகிலேயே இருக்கும் பொருள் அல்லது அன்றாடம் நாம் உபயோகிக்கும், கண்ணிற்கு புலப்படும் பொருளை(குச்சி) ஒரு வியாபார பொருளாக மாற்றி அதற்கேற்ப வசதிகள் (shutter button) செய்து சந்தையில் trending product ஆக உரு பெற்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

    கட்டுரைகள் தொடரட்டும், வாழ்த்துக்கள் 🙂

    1. மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கான அனைத்து உள்ளீடுகளையும் கொண்டு வந்து சேர்க்கிறேன்.

      -கதிரவன் மனோகரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *