ஓபரா வின்ஃபிரே எனும் வழிகாட்டி!

“ஒப்ரா வின்பிரே” இந்தப் பெயரை உங்களில் பலர் கேட்டிருப்பீர்கள், என்னைப்போல் சிலருக்கு இது புதியதாய் இருக்கலாம். இவரைப்பற்றி முதன்முறையாகப் படிக்கப் படிக்க, புதுமைகளும் ஆச்சர்யங்களும் நிரம்பி வழிந்தன.

 

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு துயரங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து அதை மனத்துணிவோடு எதிர்த்துப் போராடி இன்று அகிலம் வியக்கும் அற்புத பெண்ணாய் உயர்ந்து நிற்கும் இவர் பெண்கள் சமூகத்திற்கே ஒரு முன்னோடி என்றால் அது மிகையாகாது.

1105_oprah-winfrey_540x380

 

முடி திருத்தும்  தந்தைக்கும், வீட்டு வேலை செய்து தன் பிழைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த  ஒரு தாய்க்கும் முதல் குழந்தையாய் 1954 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி மிஸ்சிசிப்பி என்னும் அமெரிக்க மாகாணத்தில் பிறந்தவர்தான் “ஒப்ரா வின்பிரே”. இருபதாம் நூற்றாண்டின் ஆப்ரிக்க – அமெரிக்கர்களில் செல்வந்தர்களில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் இவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஏன் நடுத்தர வர்க்கமும் அல்ல, மிகுந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பின்பு இப்படி ஒரு வளர்ச்சியை இவர் எப்படிக் கண்டார் என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா!

 

வலி இல்லாமல் எதுவும் வல்லமை ஆவதில்லை. ஆம் இவர் எட்டிய சிகரங்களுக்கு எல்லாம் இவருக்குப் பாதைகளாக அமைந்தது வலி, மிகுந்த வலி, கொடுமையான வலி மட்டுமே.

 

ஒபரா பிறந்தபிறகு உடனடியாக அவருடைய தாயார் வட மாகாணத்திற்கு வேலைக்காகப் பயணம் செய்தார்.  இவரை வளர்க்கும் பொறுப்பு அவருடைய தாயார் வழிப் பாட்டி ஹட்டி மே லீ அவர்களை வந்து சேர்ந்தது. அந்த பச்சிளம் பருவத்தில் அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் எல்லாம் அவர் பாட்டியின் பண்ணையில் இருந்த மிருகங்கள்தாம்.

 

அந்த வயதிலேயே பணத்திற்கு பஞ்சம் ஏற்பட்டாலும் ஓப்ராவின் கற்பனை வளத்திற்கு எந்தக் குறைச்சலும் இருக்கவில்லை. ஒரு கதையை உருவாக்கி அந்தக் கதையின் கதாப்பாத்திரங்களாக அந்த மிருகங்களை நியமித்து இவருடைய நாடகத்தை அரங்கேற்றினார். இந்த ஆர்வம்தான் பின்னாளில் “தி ஒப்ரா வின்பிரே ஷோ” என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சிக்கு அடித்தளமிட்டது என்று சொன்னால்கூட அது மிகையாகாது.

 

இவருக்கு உருளைக்கிழங்கு கட்டிவரும் சாக்கு பையில் ஆடை தைத்து உடுத்துவார்களாம் இவருடைய பாட்டி. இதனால்  உடன் படிக்கும் பிள்ளைகளால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறார் ஒப்ரா.  இப்படி சங்கடம் வரும் பொழுதெல்லாம்  அவருடைய பாட்டிதான் அவருக்குப் பக்கபலமாய்  இருந்திருக்கிறார். தன் தாயின் அரவணைப்பைவிட தன் பாட்டியின் உடனிருப்பைத்தான் அவர் மிகவும் விரும்பி இருக்கிறார்.

 

அவர் பாட்டியின் பயிற்சியால் மூன்று வயதிற்குள்ளாகவே அவருக்கு நன்றாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்தது. ஆகவே தேவாலயத்தில் பைபிள் வாசகங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அக்கம் பக்கத்துக்கு மக்களிடையே பிரபலமானார் ஒப்ரா.

opera

அவருக்கு ஆறு வயதானபோது மீண்டும் அவர் தாய் வேநிட்டா லீயுடன் வசிக்கும்  வாய்ப்பு கிடைத்தது. வீடு வேலை செய்து தன பிழைப்பை நடத்திய தன் தாயால் தன்னை சரியாகக் கவனிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவரிடையே தலைதூக்க தன் தாயை எதிர்த்துப் பேசவும் உதாசீனம் செய்யவும் ஆரம்பித்தார் ஒப்ரா. வறுமையின் கொடூரம் ஒருபுறம் அவரை வாட்டிவதைக்க பாலியல் தொந்தரவுகளும் அவரைத் தொடர்ந்திருக்கிறது.

 

பல நேரங்களில் ஓப்ரா அவருடைய உறவினர்களிடையே தனிமையில் விடப்பட்டார்.இந்தத் தருணம் அந்த மிருகங்களுக்கு தங்கள் அகோர முகத்தைக் காட்ட நல்ல வாய்ப்பாய் அமைந்தது. ஆம் அவருடைய ஒன்பதாம் வயது முதல் பதிமூன்றாம் வயது வரை தொடர்ந்து அவருடைய உறவினர்களால் பாலியல் வன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் ஒப்ரா. இதில் அவருடைய தாயின் காதலனும் அடக்கம்.

 

தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லக்கூட ஒப்ரா துணியவில்லை. காரணம் அந்த அளவிற்கு அந்தச் சிறுமியை மிரட்டி வைத்துள்ளனர். இப்படி ஆண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேறியுள்ள இந்த வன்கொடுமையால் அந்தச் சிறுமியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். நினைக்கவே மனம் பதைக்கிறது அல்லவா!

 

abuse

இந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தன்னுடைய பதிமூன்றாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார் ஒப்ரா. துள்ளிக் குதித்து தன்னுடைய விடலைப் பருவத்தை கழிக்கவேண்டிய வயதில் அவருடைய உறவினர்களாலேயே சீரழிக்கப்பட்டு 14 வயதில் ஒரு குழந்தைக்கு தாயானார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையானதால் சில நாட்களிலேயே அந்தப் பிள்ளை இறந்து போனது. தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

 

உடல் அளவிலும் மனதளவிலும் நொறுக்கப்பட்டிருந்த ஒப்ராவுக்கு அவருடைய கல்வி, மனோபலத்தைக் கொஞ்சம் மீட்டுத் தந்தது. தன் தந்தையின் உதவியால் அவருடைய உயர்கல்வியை அவர் தொடர்ந்தார். அப்பொழுதே மேடைப் பேச்சுகளில் ஆர்வம் காட்டினார். சிறப்பான பயிற்சி பெற்றார். தன்னுடைய உயர் கல்வி காலத்திலேயே WVOL என்னும் வானொலி நிறுவனம் ஒன்று அவருக்குச் செய்தி அறிவிப்பாளராகும் வாய்ப்பினை தந்தது.

 

அவருடைய பள்ளி படிப்பின் இறுதி ஆண்டில் நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டியின் பரிசாய் டென்னெச்சீ ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புக்கான உதவித் தொகையைப் பெற்றார். அங்கே பேச்சு மற்றும் ஊடகத்துறையின் நுணுக்கங்களையும் கற்றார்.

 

ஓப்ராவின் கல்லூரி படிப்பின்போது CBS என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவருக்குத் துணைத் தொகுப்பாளர் பொறுப்பை கொடுத்தது. அங்கே செய்திகள் சேகரிக்கும் பணியில் ஒப்ரா நினைத்த அளவிற்குச் சிறப்பாக செயல்படாததால் அவருடைய நிர்வாகி அவருக்குக் காலை நேரங்களில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த “பீப்பிள் ஆர் டாக்கிங்” என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அனுமதித்தார்.

 

அவருடைய இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அவருடைய மலர்ச்சியான பேச்சும், உற்சாகமான நடைமுறையும் மற்ற எல்லா நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இவருடைய நிகழ்ச்சிக்கு முதலிடத்தைக் கொடுத்தது. அவரை துச்சமென மிதித்தவர்களையும் போகப்பொருளாய் மட்டுமே பயன்படுத்திய மக்களுக்கு மத்தியில் அவரைப்பற்றிய பேச்சு பரவ ஆரம்பித்தது.

 

oper 2

ஒப்ராவுக்கு மக்கள்  செல்வாக்கு உயர்ந்தது. தரவரிசையில் இறுதியில் இருந்த இந்த நிகழ்ச்சி, ஓப்ராவின் அறிமுகத்திற்குப் பின்னர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமடைந்திருந்த அவருடைய திறமையை கண்டறிந்த ரோகேர் எபர்ட் என்பவர் தன்னுடைய மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஈட்டுவதைவிட 40 மடங்கு அதிகமாய் ஓப்ராவின் நிகழ்ச்சிகள் சம்பாதிப்பதை உணர்ந்தார். இதனால் “அட் தி மூவீஸ்” என்று பெயர் வைக்கப்பட்டு ஒப்ரா தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு “தி ஒப்ரா வின்பிரே ஷோ” என்று பெயர் மாற்றம் செய்தார்.

 

இதன் பின் ஓப்ராவின் வாழ்வில் தோல்வி என்பதே இல்லாமல் போயிற்று. செய்தி தொகுப்பாளராக ஊடகத்துறைக்குள் வந்த முதல் கருப்பின பெண் என்ற பெருமையும் இவரையே சாரும். இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில் உண்மை சம்பவங்களை அரங்கிற்குள் கொண்டுவந்து அதைப் பேசி தீர்க்கும் அளவிற்கு ஊடகத்துறையின் சுதந்திரம் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முதல் புள்ளி வைத்தவர் ஒப்ராதன்.

 

கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், வறுமையினாலும் ஒப்ரா பல அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால் தன் மேல் எறியப்பட்ட ஒவ்வொரு கல்லையும் தன் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி இருக்கிறார். ஒரு நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சமூக அக்கறை கொண்ட பெண்ணாகவும், தன்னைப்போல் துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் பெண்களுக்காகப் பேசுபவராகவும்,  ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இவரின் பல்வேறு பொறுப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

அமெரிக்காவின் பணக்காரர்களில் இவருக்கு முதலிடம். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் தனக்கான குண நலன்களை விட்டு விலகாமல் இன்றளவும் மக்களால் பாராட்டப்படும் பெண்மணியாக வலம் வருகிறார். இவருடைய நிகழ்ச்சிகளில் உருக்கமான தருணங்களில் எல்லாம் தன்னை அறியாமல் அழுது விடுவார். இந்த இவருடைய பலவீன குணத்திற்காகப் பலரால் விமர்சிக்கப்பட்டாலும் அதை அவர் மாற்றிக்கொள்வதாக இல்லை.

 

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க இதோ அவருடைய  வெற்றிப்பட்டியல்

3.2 பில்லியன் டாலர், நம்முடைய பண மதிப்பில் கிட்டத்தட்ட 320 கோடி அளவிற்கான தற்போதைய சொத்திற்கான சொந்தக்காரர்(இது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டுதான் போகிறது).

 

2.1986 முதல் 2011 வரை “தி ஒப்ராஹ் வின்பிரே ஷோ” 25 நெடும்தொடர்களை தாண்டி வெற்றிகரமாக மிகுந்த மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நிகழ்ச்சியாக வலம் வந்தது.

 

3.இன்று மக்களிடையே பிரபலம் அடைந்திருக்கும் பல்வேறு ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஒப்ராவால் அவருடைய நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்யப்பட்டவர்கள். அவருடைய செல்வமும் செல்வாக்கும் அவர் என்ன சொன்னாலும் மக்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இருந்ததே இதற்குக் காரணம்.

 

4. இவர் தன்னுடைய உடல் எடையைக் குறைக்க எடுத்த முடிவு இவருக்கு 70 கோடி அளவு பணத்தை ஈட்டியது. எப்படி என்று கேட்கிறீர்களா! இதோ இப்படித்தான். இவருடைய செயல்களை கவனிக்கும் மக்கள் இவர் எடை குறைப்பிற்காக எந்தப் பொருளை தேர்வுசெய்கிறாரோ அதையே தாங்களும் வாங்குவதால் எடை குறைப்பு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களையே வாங்குமாறு இவருக்கு அளிக்கும் பரிசுதான் இந்தத் தொகை.

 

5.அவர் எழுதும் புத்தகங்களுக்கும் மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இவர் புத்தகம் எழுதினாலே  கோடிகளில் அவை மதிப்புப் பெறுகின்றன. இவர் 2014 இல் எழுதிய “வாட் ஐ நோ பார் சூர்” என்னும் புத்தகம் 2014 ஆம் ஆண்டு அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது.

 

6.இவர் தற்போது எழுதத் திட்டமிட்டிருக்கும் புத்தகத்திற்கு இதுவரை வரலாற்றில் யாருக்குமே கொடுக்கப்படாத முன்பணம் ஒரு புத்தக நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளதாக “அக்காடமி ஆப் அச்சீவ்மெண்ட்” குறிப்பிட்டுள்ளது.

 

7.உலகிலேயே ஊடகத்துறையில் அதிகம் சம்பளம் தரப்பட்ட பெண்மணி என்னும் தகுதியை 2008 முதல் 2012 தக்கவைத்திருந்தார். ஓர் ஆண்டில் 165 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளார். இவர் நடத்தும் தயாரிப்பு நிறுவனம், பல கேபிள் நிறுவன நிகழ்ச்சிகள், இவர் நடத்தும் பத்திரிக்கை மற்றும் இவருடைய செயற்கைக்கோள் வானொலி ஆகியவை இவரின் இந்த இமாலய வருமானத்திற்கு வழிவகை செய்திருக்கிறது.

 

8.உலகின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க கோடீசுவரர் என்னும் பெருமையும் இவரையே சேரும். யாருடைய சிபாரிசும் உதவியும் இல்லாமல் சுயமாக முயன்று இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார் ஒப்ரா.

 

9. அவருடைய கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே இமாலய உயரத்தை அடைந்துவிட்ட நிலையில் இனி அது தர பட்டியலில் குறைந்தாலும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு தன் சொந்த பணத்தைக்கொண்டே அதை நடத்தும் அளவிற்கு ஒப்ரா செல்வாக்கு மிக்கவர்.

 

10. உலக வங்கி கொடுத்த விவரத்தின்படி ஓப்ராவின் சொத்து மதிப்பு மத்திய ஆப்ரிக்கா, மாலத்தீவுகள், செயின்ட் லூசியா, கயானா  ஆகிய நாடுகளின் மொத்த வருமானத்தைவிட அதிகமானது.

 

11. மற்ற எல்லா கருப்பின பிரபலங்களைக் காட்டிலும் ஓப்ராவின் சொத்து மதிப்பு மிக அதிகம். இசையிலும் நடிப்பிலும் ஜாம்பவான்களாக இருக்கக்கூடியவர்களை விட இவருடைய செல்வாக்கு ஒரு படி மேல் என்பதே நிதர்சன உண்மை.

Oprah-Obama-On-Show

 

நாமும் எத்தனையோ மக்களைப் பார்த்திருப்போம், அவர்களோடு பழகி இருப்போம் ஆனால் எல்லோரும் நம்மிடம் ஒரு தாக்கத்தை உண்டாக்குவதில்லை. ஆனால் சிலரின் அனுபவம் நம்மைத் தூங்கவிடுவதில்லை.

 

ஓப்ராவின் அனுபவமும் அப்படி ஒரு அனுபவம்தான். எளியக் குடும்பத்தில் பிறந்து, வறுமையிலே உழன்று, பலரால் வஞ்சிக்கப்பட்டு, தன் சொந்த குடும்பத்தாலேயே ஒதுக்கப்பட்டு, தனிமையில் வாழ்ந்து, சிறிய வயதில் கருவை சுமந்து அந்தக் குழந்தையையும் பறிகொடுத்து ஒரு பெண்ணாய் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தபோதிலும் என்றுமே அவர் மனம் தளரவில்லை.

 

தன் கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் சிந்தவில்லை. தோற்ற இடத்தில் அப்படியே மூழ்கிப்போகவில்லை. விழுந்ததைவிட எழுந்தது வேகமாய் இருந்தது. முயற்சி செய்தார், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினார் இன்று யாரும் எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

 

நாமும் சிந்திப்போம்.  நாமும் நமக்கான இலக்கை நிர்ணயிப்போம் அதற்காக உழைப்போம். வாழ்வு வசப்படும்!

மரிய ரோஸ்லின்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *